Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

எனது நாடக வாழ்க்கை
(முதல் பாகம், பகுதி 2)
அவ்வை தி.க. சண்முகம்

enatu nATaka vAzkai (volume 1, part 2, chapters 26-50)
by T.K.C. Shanmugam
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
    The e-text has been generated using Google OCR and subsequent editing and proof-reading.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2019.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    https://www.projectmadurai.org/

எனது நாடக வாழ்க்கை
(முதல் பாகம், பகுதி 2)
அவ்வை தி.க. சண்முகம்

Source:
எனது நாடக வாழ்க்கை
அவ்வை தி.க. சண்முகம் எம்.எல்.சி.
வானதி பதிப்பகம்
13. தீனனதயாளு தெரு
தி. நகர், சென்னை-17
முதற் பதிப்பு : ஏப்ரல், 1972, விலை ரு. 60-00
அவ்வை தி. க. சண்முகம் மணிவிழா வெளியீடு (28-4-72)
மூன்றாம் பதிப்பு : நவம்பர் 1986
திருகாவுக்கரசு தயாரிப்பு
குருகுலம் பிரின்ட்ர்ஸ். வேதாரண்யம்.
-----------

எனது நாடக வாழ்க்கை (முதல் பாகம், பகுதி 2)
உள்ளுறை (பகுதி 2, அத்தியாயம் 26-50)

    26. அரசியல் பிரவேசம்39. மறுபிறப்பு
    27. தேசபக்தி40. பாலாமணி-பக்காத் திருடன்
    28. மும்மொழி நாடகம்41. சின்னண்ணா திருமணம்
    29. கோல்டன் சாரதாம்பாள்42. சிர்திருத்த நாடகக் கம்பெனி
    30. பாகவதர் சந்திப்பு43. கலைஞர் ஏ. பி. காகராஜன்
    31. தேவி பால ஷண்முகானந்த சபா44. பூலோக ரம்பை
    32. ஸ்பெஷல் நாடக நடிப்பு45. அண்ணாவின் விமரிசனம்
    33. பெரியார்-ஜீவா நட்பு46. குமாஸ்தாவின் பெண் படம்
    34. நீலகிரி மலை47. என் திருமணம்
    35. மேனகா திரைப்படம்48. நல்லகாலம் பிறந்தது
    36. டைரக்டர் ராஜா சாண்டோ49. முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தினம்
    37. முத்தமிடும் காட்சி50. நாடக உலகில் ஒளவையார்
    38. கம்பெனி நிறுத்தம்
--------------

எனது நாடக வாழ்க்கை (முதல் பாகம், பகுதி 2)
26. அரசியல் பிரவேசம்


1931-ஆம் ஆண்டில் தான் நாங்கள் அரசியல் விஷயங்களில் நேரடியாகத் தொடர்புகொள்ள ஆரம்பித்தோம். அன்னையார் இறந்த சில நாட்களில் பண்டித மோதிலால்நேரு இறந்ததாகச் செய்திப் படித்தோம். கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதன் முதலாகப் பாரதி பாட்டுக்கள் பாடினேன். தஞ்சைக்கு வந்தபின், பகவத்சிங் டில்லி சட்டசபை யில் குண்டு போட்ட செய்திகளையும், அதுபற்றிய வழக்குகளையும் நாங்கள் தொடர்ந்து படித்து வந்தோம்.

திடீரென்று ஒருநாள் பகவத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தியைப் பத்திரிக்கைகளிலே படித்தபோது எங்களுக்கெல்லாம் உள்ளம் குமுறியது. அரசியல் விஷயங்களில் மனத்தை ஈடு படுத்திக் கொண்டிருந்த எங்களுக்கு, இச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அன்று மாலே தஞ்சை பெரியகோயிலுக்கு அருகேயுள்ள மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தேச பக்தர் வேங்கடகிருஷ்ணபிள்ளை தலைமை வகிப்பாரென அறிவிக்கப் பெற்றிருந்தது. அப்போது எங்கள் கம்பெனியில் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் என். எஸ், கிருஷ்ணனும் தீவிரவாதிகள். இருவரும் இணைபிரியாத தோழர்கள். நாடகமேடை சம்பந்தமான பொறுப்புகளானலும் சரி, வேறு எதுவானாலும்சரி, இருவரும் கலந்தே முடிவு செய்வது வழக்கம். அப்போதெல்லாம் நான் சுயேச்சையாக வெளியே செல்லும் வழக்கமில்லை. அன்று நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் போல் என்னுள்ளம் துடித்தது. அன்று கூட்டம் நடைபெறாதென்றும், தடை செய்யப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் வந்தன. சின்னண்ணாவும் கலைவாணரும் கூட்டத்திற்குப் போயிருந்தார்கள். கூட்டத்தில் வேங்கடகிருஷ்ணபிள்ளை கைது செய்யப்பட்டார். பிரம்மாண்டமான கூட்டத்தைப்போலீசார் தடியடி கொடுத்துக் கலைத்தார்கள். சில அடிகள் சின்னண்ணாவுக்கும் கலைவாணருக்கும் கிடைத்தன. வீட்டுக்கு வந்து அவர்கள் இச்செய்தியை அறிவித்த, போது என்னால் தாங்க முடியவில்லை. உணர்ச்சி விவரிக்க இயலாததாக இருந்தது. என்னை ஈன்ற தாய்நாட்டிற்கு என்னால் இயன்ற பணியைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலெழுந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன். மறுநாள் என்னுடைய மேனியைப் புனிதமான கதராடை அழகு செய்தது.

நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தன. அன்று முதல் இன்று வரை நான் தொடர்ந்து கதராடைதான் உடுத்தி வருகிறேன். தொடக்கத்தில் சாக்கு, சமுக்காளம் இவற்றை உடுத்துவது போன்ற சிறு உணர்வு தோன்றியதுண்டு. ஆனால் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சிக்குமுன் இந்த மென்மை உணர்வுகளெல்லாம் பறந்தோடிவிட்டன. எங்கள் நாடகக் குழுவின் நெருக்கடியான காலங்களில் அதிகப் பணம் கொடுத்து உடைகள் வாங்குவதற்கும் இயலாதிருந்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் கதரே உடுத்துவது என்ற இலட்சியத்தை நிறைவேற்ற நான் பட்ட கஷ்டங்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன.

வாத்தியார் மீண்டும் விலகினார்

தஞ்சையிலிருந்து ஒருவகையாகத் தட்டுத் தடுமாறி மதுரைக்கு வந்து சேர்ந்தோம். பழைய நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் புதிய நாடகம் தயார் செய்யும்படி வாத்தியார் முதலியாரிடம் பெரியண்ணா வற்புறுத்தினார். ‘சுந்தர திரன்’ என்னும் ஒரு நாவல் நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. இரண்டொரு நாட்கள் ஒத்திகையும் நடைபெற்றது. அதற்குள் வாத்தியாரோடு சம்பளத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் இரவு நாடகத்திற்கு வரமுடியு மென்று வாத்தியார் கண்டிப்பாகக் கடிதம் எழுதியனுப்பி விட்டார். இந்தக் கடிதத்தைக் கண்டதும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் நேராக வாத்தியார் இருப்பிடம் சென்றார். கம்பெனியின் நிலையை உணராமல் அதிகச் சம்பளம் கேட்பது முறையல்லவென எவ்வளவோ எடுத்துக் கூறினார்.

வாத்தியாருக்கும் என். எஸ். கிருஷ்ணனுக்கும் வாக்கு வாதம் வளர்ந்தது. கடைசியாகக் கலைவாணர் வாத்தியாரைக் கண்டபடி பேசிவிட்டு வந்தார். அன்றிரவு மோகனசுந்தரம் நாடகம். முதல் மணியடிக்கும்வரை வாத்தியாரும், எம். கே. ராதாவும் வரவில்லை. பெரியண்ணா சுந்தரமுதலியார் வேடத்தைப் போடத் தொடங்கினார். அந்தச் சமயம் திடீரென்று ராதாவோடு வாத்தியார் வரவே பெரியண்ணா வேடத்தைக் கலைத்துவிட்டு ராதாவையே போடச் சொன்னார், மறுநாள் காலை வாத்தியார் கணக்குத் தீர்த்துக் கொண்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு கம்பெனிக்கு வருவதும் போவதுமாக இருந்த வாத்தியாரின் போக்கு எங்களுக்குப் பிடிக்க வில்லை. இருந்தாலும் என்ன செய்ய முடியும்? மேதைகள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்!
---------------

27. தேசபக்தி


எங்களுக்கெல்லாம் புதிய நாடகம் தயாரிக்க வேண்டு மென்ற ஒரே ஆவல். அப்போது மதுரகவி பாஸ்கரதாஸ் மதுரையில் ஒரு சிறந்த நாடகாசிரியராக இருந்தார். அந்த நாளில் அவருடைய பாடல்களைப் பாடாத ஸ்பெஷல் நடிகர்களே இல்லை யென்று சொல்லலாம். பாஸ்கரதாஸ் ஒரு தேசீயவாதி. இந்தியத் தேசீயத் தலைவர்களின் பேரிலெல்லாம் ஏராளமான பாடல்கள் புனைந்திருக்கிறார், பிச்சையெடுக்கும் சிறுவர்கள்கூடப் பாஸ்கர தாசின் தேசீயப் பாடல்களைப்பாடுவதை நான் கேட்டிருக்கிறேன். சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்து காலத்தோடு ஒத்திருந்த அவரது பாடல்கள் மிகப் பிரசித்தி பெற்று விளங்கின. பாஸ்கரதாஸ் எங்களுக்கு அறிமுகமானார். வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்துவீசன் என்னும் ஒரு நாடகத்தின் அச்சுப் பிரதியை அவர் கொண்டு வந்தார். அதைப் படித்துப் பார்த்தோம். அப்போதிருந்த எங்கள் தேசீய உணர்ச்சிக்கு அந்த நாடகம் நிரம்பவும் பிடித்தது இடையிடையே சில புதியகாட்சிகளைச் சேர்த்து அவரே எழுதிக் கொடுத்தார். அப்போது பாண புரத்துவீரன் நாடகம் சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அந்நாடகத்திற்குத் தேசபக்தி என்றுபெயர் வைத்தோம்.

தேசபக்தி

நாடகம் வேகமாகத் தயாராயிற்று. பாஸ்கரதாஸ் உணர்ச்சி மிகுந்த பாடல்களை இயற்றித் தந்தார். அத்தோடு மகாகவி பாரதியின் ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’ ‘விடுதலை விடுதலை,’ ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ முதலிய பாடல்களையும் இடையிடையே சேர்த்துக் கொண்டோம். தேசபக்தி நாடகத்தில்தான் முதன் முதலாகப் பாரதியின் பாடல்கள் பாடப் பெற்றன. அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சின்னண்ணாவும், கலைவாணரும் யோசித்தார்கள். மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் ஒன்று வாங்கி வந்தார்கள், காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடலாமென முடிவு செய்யப்பட்டது. காந்தியடிகளின் பிறப்பு முதல் அவர் வட்டமேஜை மாநாட் டுக்குப் புறப்பட்டது வரை வில்லுப்பாட்டாக அமைக்கப்பட்டது. ஒரு நாள் இரவு உணவுக்கு மேல் நானும் கலைவாணரும் உட்கார்ந்து பாடல்களை எழுதி முடித்தோம். மறுநாள் ஒத்திகை ஆரம்பமாயிற்று. தயாரிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. தேசீய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் புனிதமான கதரிலேயே உடைகள் தைக்கப்பட்டன. வாத்தியார் கம்பெனியை விட்டு விலகிய பதினேழாவது நாள் அவசர அவசரமாகத் தேசபக்தி அரங்கேறியது.

உணர்ச்சி வேகம்

1931 மே 19 ஆம் நாள். ஆம்; அன்றுதான் தேசபக்தி அரங்கேற்றம். அன்று எங்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சியை விவரிக்க இயலாது. ஏதோ ஒர் உணர்ச்சியும் எழுச்சியும் எல்லோருக் கும் இருந்தது. நாடெங்கும் கொந்தளிப்பு! விடுதலையுணர்ச்சி கொழுந்து விட்டு எரிந்த காலம்! பாரத வீரன் பகவத் சிங்கும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுச் சில நாட்களே ஆகியிருந்தன. அந்த நெஞ்சுருக்கும் செய்திகள் நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் ஆவேசத்தை ஊட்டியிருந்தன. நாட்டின் சூழ்நிலை, நடிகர்களாகிய எங்கள் உள்ளத்தை மட்டும் பாதிக்காதா, என்ன! நாங்களும் உணர்ச்சியில் திளைத்து நின்றோம்.

நாடகம் தொடங்கியது. முதற் காட்சி பொதுக்கூட்டம்.

    தேச பக்தியே முக்தியாம்
    தெய்வ சக்தியாம்

என்ற பாடலை நான் முதலில் பாடியதும் சபையோர் உணர்ச்சி வசப்பட்டு, மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கோஷமிட்டனார். பாட்டு முடிந்ததும் பாணபுரத்தின் தலைவர், வாலீசனாக நடித்தவர் பேசினார். அவரது பேச்சுத் தெளிவும், கெம்பீரமான குரலும், மெய்ப்பாட்டுணர்ச்சியும் சபையினருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் உணர்ச்சி ஊட்டுவனவாய் இருந்தன. பெருத்த கைத்தட்டலுடன் முதற்காட்சி முடிந்தது.

உயிரை ஊசலாட விட்டார்

இரண்டாவது காட்சி ஈசானபுர மன்னனின் விசாரணை மண்டபம். சுதந்திர வீரனை வாலீசனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சி தூக்குமேடை, வாலீசன் தூக்கிலிடப்பட்டு மடிகிறான். அவனது மரணத்திற்குப் பின் புரேசன் என்ற தலைவன் பொறுப்பேற்றுப் போராடி, பாண புரத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் சுதந்திர நாடாக்குகிறான். இது கதை......

தூக்குமேடைக் காட்சியைப் பல முறைகள் ஒத்திகைகள் பார்த்து, உண்மைபோல் தோற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. வாலீசன் மேடைமீது ஏறியதும் சுருக்குக் கயிற்றைத் தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான். அதிகாரி கையசைக்கிறார். உள்ளே மணிச் சத்தம் கேட்கிறது. கீழே நிற்கும் காவலன் பலகையைத் தட்டி விடுகிறான். இவ்வாறு காட்சி நடை பெற வேண்டும்.

வாலீசனுக நடித்தவர் சுருக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளும்போதே அதனோடு இணைக்கப்பட்டிருந்த ஒரு இரும்புக் கொக்கியைத் தனது இடுப்பிலே கட்டப்பட்டிருந்த மற் றொரு கயிற்றில் மாட்டிக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்தால் அவர் தொங்கும்போது அவரது உடல் பாரத்தை இரும்புக் கொக்கி தாங்கிக் கொள்ளும். கழுத்துச் சுருக்கு இறுக்காது.

மூன்றாவது காட்சி தொடங்கும் போது வாலீசனுக நடித்தவர் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தார். துாக்கு மேடையில் ஏறி ஆவேசத்துடன் வீர முழக்கம் செய்துவிட்டுக் கயிற்றைக் கழுத்தில் போட்டுக் கொண்டார். ஆனால் இரும்புக் கொக்கியை ஒத்திகைப் படி மாட்டினார்களா என்பதைக் கவனிக்க மறந்து விட்டார்,

நாடகம் தொடங்கியது முதல் நெஞ்சு படபடக்கத் திரை மறைவில் நின்று கொண்டிருந்த எங்களில் எவருமே இதைக் கவ னிக்கவில்லை. தூக்குமேடைப் பலகையை இழுக்கும் காவலனாக நின்ற நடிகரும் இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லே. சுருக்கைக் கழுத்தில் மாட்டினார் வாலீசர். வீர முழக்கமிட்டார். மணியடிக்கப்பட்டது. பலகை இழுக்கப்பட்டது. வாலீசன் அந் தரத்தில் தொங்கினார், மெய் மறந்திருந்த சபையோர், “பகவத் சிங்குக்கு ஜே” என்று பலமுறை கோஷமிட்டனார். நான் அடுத்த காட்சிக்காகத் திரை மறைவில் தூக்குமேடையருகே நின்று கொண்டிருந்தேன். வாலீசன் தொங்கியபோது கொடுத்த குரல் என்னவோ போலிருந்தது. அவரது முதுகுப்புறம் இரும்புக் கயிற்றில் கொக்கி மாட்டப்படாததை அப்போதுதான் உணர்ந்தேன். என்னைப்போலவே மற்றும் சிலர் இதைக் கவனித்தார்கள் போலிருக்கிறது. “திரை, திரை, படுதா படுதா” என்று பல குரல் கள் ஓலமிட்டன. அரை நிமிட நேரம் தொங்கிய பிறகே திரை விடவேண்டுமென ஒத்திகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. சபையோரின் ஜே கோஷத்தில் ஒலக் குரல்கள் உடனே கேட்கவில்லை. திரைவிடச் சில வினாடிகள் தாமதம் ஏற்பட்டது.

கடவுள் காப்பாற்றினார்

திரை விழுந்ததும் சிலர் ஓடிப்போய் வாலீசனாக நடித்தவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இறுகிப்போயிருந்த கழுத்துச் சுருக்கை அவிழ்த்தார்கள். நடிகருக்குப் பிரக்ஞை இல்லை. சபையோருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. உணர்ச்சி வசப்பட்ட அவர்கள் அடுத்தகாட்சி தொடங்கும் வரை “பகத்சிங்குக்கு ஜே! பகத்சிங்குக்கு ஜே!” என்று முழங்கிக்கொண்டே இருந்தார்கள்.

வாலீசனாக நடித்தவருக்குத் தன் நினைவுவர அரை மணி நேரமாயிற்று. அன்று வாலிசனாக நடித்து, உணர்ச்சிப் பிழம்பாக நின்று உயிரை ஊசலாடவிட்ட உண்மை நடிகர்தாம் நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம். அவரது கழுத்துச் சுருக்கைப்பற்றிக் கவலை கொள்ளாமல் காவலனாக நின்று பலகை இழுத்த புண்ணியவான் வேறு யாறாமல்ல. நமது நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதானு.

தேசபக்தி நாடகத்தில் நான் புரேசனாக நடித்தேன். சின்னண்ணா என் மனைவி சுதர்மா தேவியாக நடித்தார். ஈசான புரத்து மன்னன் அதிரதனாக புளி மூட்டை ராமசாமி நடித்தார். சேனதிபதி சேமவீரனாக நடித்தவர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமினாதன். அவர் மிக அழகாகக் கத்திச் சண்டை போடுவார். நானும் அவரும் தேசபக்தியில் ஆவேசத்துடன் கத்திச் சண்டை போடுவோம். எம். ஆர். சாமிநாதன் தான் எனக்குக் கத்திச் சண்டை போடக் கற்றுக் கொடுத்தார். எந்த வேடத்தைப் போட்டாலும் திறமையாகச் செய்யக் கூடியவர் சாமிநாதன் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அல்லவா? தேசபக்தி நாடகத்தில் சாமினாதனை எல்லோரும் பாராட்டினார்கள். என். எஸ். கிருஷ்ணன் பல வேடங்கள் புனைந்து சபையோரைப் பரவசப் படுத்தினார். காந்தி மகான் வில்லுப் பாட்டுக்குப் பலமுறை கைதட்டல் கிடைத்தது. நாடகத்திற்குப் பிரமாதமான பேர். ஆனால் வசூல்தான் அதற்கேற்றபடி இல்லை.

தம்பி பகவதி

இந்த நாடகத்தில் தம்பி பகவதி மற்றொரு சுதந்திர வீரன் நாகநாதனாக நடித்தார். புரேசனும் சேமவீரனும் வாட்போர் புரியும் பொழுது, நாகநாதன் சேமவீரனோடு வந்த காவலர்களுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டவேண்டும். தம்பி பகவதிக்குக் கத்திச் சண்டைபோட அவ்வளவாக வராது; கட்டிப் புரண்டு மற்போர் புரிவதென்றால் நிரம்பப் பிடிக்கும். எனவே நாகநாதன் காவலர்களுடன் மற்போர் புரிந்து விரட்டுவதாக அமைத்துக் கொண்டோம். தம்பி பகவதிக்கு மற்போர் பிடிக்கும் என்று சொல்லும் இந்தச் சமயத்தில் மதுரையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அப்போது கம்பெனியில் முதன்மையான பெண் வேடதாரிகளில் ஒருவராக இருந்தார் ஒரு நடிகர். அவரை ஊருக்கு அழைத்துப்போக அவரது மாமனரும் தமையனும் வந்திருந்தார்கள். தம்பியை ஜெகன்னாதய்யரின் கம்பெனியில் சேர்ப்பது தமையனின் திட்டம், பெரியண்ணா இதைப் புரிந்து கொண்டார். அந்த நடிகர் முக்கிய பாத்திரமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் நடக்க வேண்டியிருந் ததால், அந்நாடகங்கள் முடிந்த பிறகு அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டார். வந்தவர்களோ உடனடியாகப் போக வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தார்கள். நடிகனும் அவர்களோடு போகத் துடித்தார். அன்றிரவு நாடகத்தில் நடிக்க அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. பெரியண்ணா நயமான முறையில் எவ்வளவோ எடுத்துச் சொன்னார். அலுவல் அறையில் நீண்டநேரம் நடந்து கொண்டிருந்த இந்த உரையாடலை நாங்கள் தலைமறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்தோம். நடிகரின் தமையன் ஒரே கூச்சல் போட்டார். பெரியண்ணா காட்டிய பொறுமை எங்களுக்குப் பெரு வியப்பை அளித்தது. கூச்சல் போட்டவரின் ஆவேசம் உச்சநிலைக்குப் போய்க்கொண்டிருந்தது. கடைசியாகப் பெரியண்ணா சிறிது கோபத்தோடு, “நாடகம் முடிந்தபிறகுதான் அவனே அனுப்பமுடியும். எந்தக்காரணத்தைக் கொண்டும் இப்போது அனுப்ப இயலாது” என்று கூறினார். இது கேட்டதும் நடிகரின் தமையன் மேலும் ஆத்திரம் அடைந்தார். “அதெல்லாம் முடியாது. உங்கள் நாடகத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நாங்கள் இப்போதே புறப்படத்தான் போகிறோம்”, என்று சொல்லிவிட்டுத் தன் தம்பியைப் பார்த்து “எடுடா பெட்டி படுக்கையை” என்றார். அண்ணன் இப்படிச் சொல்லு முன்பே ஆயத்தமாக இருந்த நடிகத் தம்பி, உடனே பெட்டி படுக்கையோடு புறப்படச் சித்தமானார். தமையனும், மாமனும் முன்னை செல்லத் தம்பி அவர்களைப் பின் தொடர்ந்தார். மூவரும் அலுவல் அறையைத் தாண்டினார்கள்.

வெறி கொண்ட வேங்கை!

‘பளார்’ என்றாெரு சத்தம். அதைத்தொடர்ந்து “ஐயோ’’ என்ற அலறல்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. எட்டிப் பார்த்தேன். நடிகரின் தமையன் அடி பொறுக்க முடியாமல் கீழே கிடந்தான். அவன் எதிரே வெறி கொண்ட வேங்கை போல் ஒரு மனித உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து வார்த்தைகள் வேகமாக வந்தன. “இன்னக்கே புறப்படத்தான் போறயா! எங்கடா புறப்படு! நீ பொறப்பட்டுப் போறதை நான் பார்க்கிறேன்” என்ற வார்த்தைகளோடு கீழே கிடந்தவனுக்கு, மேலும் சில அடிகள் விழுந்தன. நடிகர் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு அலறிய வண்ணம் உள்ளே ஓடினார். மாமனார் செய்வதறியாது ஒரு மூலையில் ஒதுங்கினார். தமையன், “ஐயோ, கொல்றானே” என்று ஒலமிட்டார். பெரியண்ணா விரைந்து சென்று அந்த வேங்கையைப் பிடித்து அடக்கினார். மனித உருவில் நின்ற அந்த வேங்கைதான் தம்பி பகவதி. அப்போது தம்பி பகவதிக்கு வயது பதினான்கு-நடிகருக்கும் ஏறத்தாழ அதே வயதுதான் இருக்கும். அடிபட்ட தமையனருக்கு இருபத்தி ஐந்து வயதுக்குமேல் இருக்கலாம். எதற்காக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன். தெரியுமா? பகவதியுடைய முரட்டுத்தனம், உடல் வலிமை, தீமையை எதிர்க்கும் போக்கு, இவற்றையெல்லாம் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறதல்லவா? இதன் பிறகு அந்த நடிகர் மதுரை நாடகங்கள் முடியும் வரை கம்பெனியில் இருந்து விட்டுத்தான் போனார்; தேசபக்தியில் நாகநாதனின் காதலி சுந்தரியாகவும் அவர் நடித்தார்.

தேசீய நாடகத்திற்குத் தடை

தேசபக்தி நாடகத்தோடு மதுரை முகாம் முடிந்தது, திருநெல்வேலியில் நாடகம் துவக்கினோம். தேசபக்தி நாடகத்திற்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு போனார்கள். நாடகம் முடிந்த மறுநாள்காலை கம்பெனி வீட்டிற்கு இரண்டு போலீசார் வந்தார்கள். உரிமையாளரையும், நாடக ஆசிரியரையும் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி இன்ஸ்பெக்டர் உத்திரவென்று கூறினார்கள். பெரியண்ணா வெளியூர் போயிருந்தார். சிற்றப்பா தம் மனைவியோடும் எங்கள் தங்கைகளோடும் மதுரையிலேயே இருந்தார். கம்பெனியின் பிரதிநிதிகளாக சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், என்.எஸ். கிருஷ்ணனும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். இன்ஸ்பெக்டர் அவ்விருவரிடமும் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாகத் தேசபக்தி நாடகம் நடைபெற வேண்டுமானல் தாம் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லையானால் நாடகம் தடை செய்யப்படுமென்றும் கண்டிப்பாகக் கூறினார் இன்ஸ்பெக்டர். அவருடைய ஆட்சேபனைகள் என்னவென்பது வாசகர்களுக்குச் சுவையாக இருக்கும்.

ஆட்சேபணைகள்

முதல் காட்சியில் நாங்கள் சொற்பொழிவு நிகழ்த்துவோம். என்.எஸ்.கிருஷ்ணன், சி. ஐ. டி.யாக வேடம் புனைந்து தோன்றுவார். எங்கள் பேச்சுக்களைக் குறிப்பெடுக்கும்போது அதற்கேற்றவாறு உணர்ச்சிகளைத் தம் முகத்திலே தோற்றுவிப்பார். நான் பேசும்போது, “இதோ எங்கள் சொற்பொழிவைக் குறிப்பெடுக்கிறாரே, இவரும் நம் நாட்டவர்தாம். நமது சகோதரரில் ஒருவர்தாம். ஆனால் இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டில் வளர்ந்து, இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனித உருவம் தம் சொந்தச் சகோதரர்களையே அன்னிய நாட்டானுக்குக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது! பாவம். என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்பு!” என்றுகூறுவேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் கை கால்களெல்லாம் பதற்றத்தால் ஆடுவது போல நடிப்பார். சபையோர் கைதட்டிச் சிரிப்பார்கள். இன்ஸ்பெக்டர் இந்தக் காட்சியில் என். எஸ். கிருஷ்ணன் வரக்கூடாதென்று ஆட்சேபித்தார்.

இரண்டாவதாக, சுதந்திர வீரன் புரேசனும், ஒருமித வாதக் கனவானும் பேசிக் கொள்ளும் காட்சி. மிதவாதி சர்க்கார் கட்சியைத் தாங்கிப் பேசுவார். நீண்ட நேரம் வாதம் நடை பெறும். முடிவில் நான் ஆவேசத்துடன், “தாய்நாட்டை அன்னியருக்குக் காட்டிக் கொடுக்கும் சண்டாளர்கள், தம் தாயை மாற்றாரிடம் கூட்டிக் கொடுக்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்று ஏன் சொல்லக் கூடாது?” என்று கேட்பேன். இந்தக் காட்சியிலும் என். எஸ். கே. தான் மிதவாதியாக வருவார். என் கேள்விக்கு விடையாக அவர் கொடுக்கும் முகபாவமும், ஆத்திரத் தோடு நடந்து கொள்ளும் நடிப்பும் சபையோரிடையே பெருங் கோஷத்தை எழுப்பும். இந்தக் கேள்வியையும் இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்தார்.

மூன்றாவதாக, நாடகத்தில் இறுதியாக வரும் சண்டைக் காட்சியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தலைமையில் ஒரு தொண்டர் படை காட்சியளிக்கும். படையின் தளபதி கலைவாணர் பெரிய கைராட்டை ஒன்றைக் கையில் தாங்கிய வண்ணம் தோன்றுவார். இந்தக் காட்சியில் கொட்டகையே கலகலத்துப் போகும்படி சபையோர் கைதட்டுவார்கள். இந்தக் காட்சியையும் எடுத்துவிட வேண்டுமென்றார் இன்ஸ்பெக்டர்.

இன்னும் சில்லரை மாறுதல்கள் சிலவற்றைச் சொன்னார். இவற்றில் எதுவும் நாடகத்தைப் பாதிக்காதபடியால் இன்ஸ்பெக்டரின் ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டு, அப்படியே திருத்தம் செய்வதாகக் கூறி, என். எஸ். கேயும் சின்னண்ணாவும் திரும்பி விட்டார்கள். மறுநாள் நாடகம் இன்ஸ்பெக்டர் சொன்ன மாறுதல்களுடன் நடத்தப் பெற்றது.

அந்த நாளில் எங்களுக்கிருந்த உணர்ச்சியில் இன்ஸ்பெக்டரின் இந்த ஆட்சேபனைகள் நிரந்தரமாக நீடித்து நிற்கவில்லை. மறு வாரம் மீண்டும் தேசபக்தி நடைபெற்றது. அன்று போலீஸார் யாரும் வரவில்லை. எனவே இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்த காட்சிகளையெல்லாம் முன்னிலும் பன்மடங்கு சிறப்பாக நடத்திக் காட்டினோம். சி. ஐ. டி.கள் யாரோ வந்திருந்தார்கள் என நினைக்கிறேன். நாடகம் அன்று பெரும் கோலாகலத்துடன் நடந்தது. மறுநாள் நாலே நாங்கள் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தோம். போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து ஏதோ கொடுத்துவிட்டுப் போனார். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தேசபக்தி நாடகம் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள தடையுத்திரவு அது.

காங்கிரசுக்கு நன்கொடை

திருநெல்வேலியில் பட்டாபிக்ஷேகம் முடிந்த பிறகு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி நிதிக்காக ஒரு தேசபக்தி நாடகம் நடித்துக் கொடுத்தோம். திருமதி லட்சுமி சங்கரய்யர் தலைமை தாங்கினார். இதே போல் தொடர்ந்து பல ஊர்களில் காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேசபக்தி நாடகத்தை எவ்வித ஊதியமும் பெறாமல் நடித்துக்கொடுத்திருக்கிறோம். எங்கள் கணக்குப்படி தமிழ்நாடு முழுவதிலும் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நூற்றி ஐம்பத்தி ஏழு நாடகங்கள் இதுவரை நன்கொடையாக கடத்திக் கொடுக்கப் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.

நிலத்தை அடமானம் வைத்தோம்

திருநெல்வேலி நாடகம் முடிந்தபின் ஸ்ரீவைகுண்டம், சாத்துார், விருதுநகர் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். விருது நகரில் மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து தமது பாக்கிப் பணத்திற்காக தொந்தரவு கொடுத்தார். ஏற்கனவே அவருடைய கடன் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்திருந்தமையால் எவ்விதச்சமாதானமும் கூறமுடியாமல் பெரியண்ணா தயங்கினார். அப்போது எங்களுக்கிருந்த சொற்ப நிலத்தை அடமானம் எழுதிக் கொடுத்துப் பணம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நாகர்கோவிலுக்குப் போகவேண்டியதாக இருந்தது. ஒருநாள் நாடகம் முடிந்ததும், நால்வரும் புறப்பட்டு நாகர்கோவில் போய்ச்சேர்ந்தோம். அன்றே ஒருவரிடம் நிலத்தை அடமானப்படுத்தி இரண்டாயிரம் ரூபாய்கள் பெற்றோம். நெல்லேயில், இதற்காகத் தங்கியிருந்த காமேஸ்வர ஐயரிடம் அவருடைய பாக்கியைக் கொடுத்துத் தீர்த்துவிட்டு விருதுநகருக்கு ரயிலேறினோம். அந்த ரயில் எப்போதும் இரவு 10 மணிக்குத்தான் விருதுநகருக்கு வருவது வழக்கம். இரவு 9-30 மணிக்கு விருதுநகரில் மேனகா நாடகம் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நண்பர் கிட்டுராஜூ அந்நாளில் ரயில்வே அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். எஞ்ஜின் டிரைவராக நின்று ரயிலை ஒட்டுவதற்கும் அவர் நன்றாகப் பழகியிருந்தார். மணியாச்சியில் அவர் எஞ்சினுக்குள் ஏறி டிரைவரை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டுத் தாமே ரயிலை, ஒட்டினார். பத்து மணிக்கு விருதுநகருக்கு வரவேண்டிய ரயில் இரவு 9 மணிக்கே வந்து சேர்ந்தது. இப்படி நடந்திருக்குமா என்று வாசகர்களில் சிலர் நம்புவதுகூட சிரமந்தான். ஆனால் இப்போது நான் சொல்லியவை அனைத்தும் உண்மையாக நடந்தவை.

மீண்டும் செட்டி நாடு

விருதுநகருக்குப்பின் மீண்டும் செட்டிநாட்டிற்குப் பயணம் தொடங்கினோம். இம்முறை காரைக்குடி கை கொடுக்கவில்லை. புதிய நாடகம் நடத்த எண்ணி ஸ்ரீ கிருஷ்ணலீலாவைத் தயாரித்தோம். அதற்காக இந்த நெருக்கடியான கட்டத்திலும் நகைகளை யெல்லாம் அடகு வைத்துச் சாமான்களைத் தயார் செய்தோம். எதிர்பாராதபடி அந்தச் சமயம் மற்றொரு கொட்டகையில் புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி நாடகம் நடத்தி வந்தது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த பி. எஸ். கோவிந்தனுக்கு அபாரமான பேர். அவர்களுடைய நாடகங்களுக்கு நல்ல வசூலும் ஆயிற்று. புளியமாநகர் பாய்ஸ் கம்பெனியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்கள். பாய்ஸ் கம்பெனி என்ற பெயருக்கொப்ப எல்லோரும் சிறுவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் கல்யாண வீரபத்திரன் தான், அங்கு வாத்தியாராக இருந்தார். அவர் தயாரித்த சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகத்தை நாங்களும் பார்த்தோம். பி. எஸ். கோவிந்தன் வீர அபிமன்யுவாக நானே வியக்கும் முறையில் நடித்தார். கடோற் கஜனக நடித்த காளீஸ்வரன், சுந்தரியாக நடித்த மயில்வாகனன் ஆகியோரும் மிக அருமையாக நடித்தார்கள். புதிய காட்சிகளைத் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணலீலாவை அமோகமாக நடத்தியும் எங்களுக்கு வசூல் இல்லை. விரைவில் நாடகத்தை முடித்துக் கொண்டு திருமயத்திற்குப் பயணமானோம்.

நாகர்கோவிலில் குடும்பம் நிலைத்தது

இந்தச் சமயங்களிலெல்லாம் சிற்றப்பாவின் குடும்பம் மதுரையிலேயே இருந்து வந்தது. இறுதியாகப் பெரியண்ணா ஒரு முடிவுக்கு வந்து, சிற்றப்பா, அவர் மனைவி, தங்கைமார்கள், பெரியண்ணாவின் மனைவி எல்லோரையும் நாகர்கோவிலில் ஒருவீடு பார்த்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கச் செய்து விட்டு, திருமயம் திரும்பினார்.திருமயத்திலும் வசூல் இல்லை. எங்கள் பெரிய தகப்பனார் மகன் டி. எஸ். திரவியம் பிள்ளை நாகர்கோவிலில் இருந்தார். கம்பெனியின் நிருவாக வேலைகளைக் கவனிப்பதற்கு ஒருவர் தேவைப் பட்டது. அந்த வேலையைத் திரவியம்பிள்ளை அவர்களுக்குக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்து வந்தார் பெரியண்ணா. சில மாத காலம் திரவியம் பிள்ளையின் மேற்பார்வையில் கம்பெனி நடைபெற்றது. அவருடைய போக்கு, கம்பெனியிலிருந்த நடிகர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் அதை வெளியே சொல்ல அஞ்சி, எல்லோரும் பேசாதிருந்தார்கள். இந்த நிலையில் கம்பெனி திண்டுக்கல் சென்றது.
------------

28. மும்மொழி நாடகம்


திண்டுக்கல்லில் இருந்தபோது என். எஸ். கிருஷ்ணன் ஜெகன்னதய்யர் கம்பெனியில் பிரபலமாய் விளங்கிய பக்த ராமதாஸ், நாடகத்தை நடத்த விரும்பினார். அதற்கான பொறுப்புக்களை அவரே ஏற்றுக் கொண்டார். நாடக ஆசிரியர், புதுக்கோட்டை தம்புடு பாகவதர் வந்தார். இவர் ஏற்கனவே துருவன் நாடகத்தை எங்களுக்குப் பயிற்றுவித்தவர். அதன் பிறகு சிவ கங்கையிலிருந்த போது ராமதாஸ் நாடகத்தையும் பாடம் கொடுத்திருந்தார். எனவே அதனைத் தயாரிக்க இப்போது அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. நாடகம் தயாராயிற்று. ஆனால் நாடகத்துக்குத் தேவையான காட்சிகள், உடைகள் முதலியவற்றைச் செய்ய வேண்டுமே; எங்களுக்கிருந்த பொருளாதார நெருக் கடியில் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்த சில காட்சிகளை வைத்துக் கொண்டே நாடகத்தை நடத்த முனைந்தோம். ராமதாசரை அடைத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்று மட்டும் தேவைப்பட்டது. அப்போது ஓவியர் யாரும் இல்லை. சிறைச் சாலைக் காட்சியை என். எஸ். கிருஷ்ணனே ஒரே நாளில் எழுதி முடித்தார். நவாவுக்கு நல்ல உடைகள் இல்லை. முழுதும் ஜரிகையாலான துணி வேண்டுமென்று எல்லோரும் சொன்னோம். காட்சியமைப்பாளர்களில் ஒருவரான மாதவன் அதற்கும் ஏற்பாடு செய்தார். ஜரிகைபோல் தோன்றும் பவுன் வண்ணமுள்ள பெரிய ரேக் காகிதங்களை வாங்கி, அதிலேயே உடைகள் தயாரிக்கப் பட்டன. காகிதம் நீடித்து இராதென்றாலும் கண்ணாக்கு அழகாகவே இருந்தது. ராமதாஸ் தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி ஆகிய மும்மொழிகளில் அமைந்த நாடகம். நான் ராமதாசராகவும் பெரியண்ணா டி. கே. சங்கரன் நவாப் தானிஷாவாகவும் நடித்தோம். என். எஸ். கிருஷ்ணன் மாறுபட்ட பத்து வேடங்களில் தோன்றி மிக அற்புதமாக நடித்தார். நாடகம் சிறப்பாக அரங்கேறியது. ராமதாஸ், என். எஸ். கிருஷ்ணனுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் நாடகமாக அமைத்தது. திண்டுக்கல் முடிந்ததும் கம்பெனி திருச்சி, தஞ்சை முதலிய நகரங்களுக்குச் சென்றது.

எந்த ஊரிலும் வசூல் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் கம்பெனியை நடத்தி வந்தோம். இந்தச் சமயத்தில் பேசும் படங்கள் தமிழ் நாட்டில் வேகமாக வரத் தொடங்கின. ஏதேதோ கனவுகள் கண்டு கொண்டிருந்த எங்களுக்குப் பேசும் படங்களின் வருகை இடி விழுந்தது போலிருந்தது. படமல்லவா பேசுகிறது?... மனிதர்கள் பேசுவதை யார் கேட்பார்கள்?

பேசும் படப் போட்டி

ஆகாசவாணி பேசுவதாகவும், அசரீரி ஒலமிடுவதாகவும், பதுமைகள் வாய் திறந்து பாடுவதாகவும் பழங் கதைகளில் படித்திருந்த மக்கள், படம் பேசுகிறது என்றவுடன் திருவிழாவுக்குப் போவதைப்போல் சாரி சாரியாகப் போகத் தொடங்கினார்கள். புதிதாக வந்த நிழல் மனிதனுடன், உயிர் மனிதன் போட்டியிட இயலவில்லை. கம்பெனி கடிய வேகத்தில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. டி. பி. ராஜலட்சுமி நடித்த வள்ளி திருமணம் படம் அமோகமாக ஓடியது. ஜனங்கள் வெறிபிடித்தவர்களைப் போலத் திரைப்படக் கொட்டகையில் போய் விழுந்தார்கள். திரைப்படங்களில் அப்போது பாடல்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெற்றிருந்தது. எனவே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த நடிகர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. நாடகத்திலேயே பாடல்களைக் குறைத்துக் கொண்டு நாங்கள் சமுதாய நாடகங்களை நடத்தி வந்தோம். எங்கள் நாடகங்களில் நடிப்புக்குத்தான் முதலிடம். எனவே எங்களால் பொதுமக்களைக் கவர முடியவில்லை.

சுந்தரராவ்

தஞ்சையில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபோது, அங்குள்ள அமைச்சூர் சபைகளுடன் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்நாளில் சென்னைக்கு அடுத்தபடியாகத் தஞ்சையில் தான் அதிகமான அமைச்சூர் சபைகள் இருந்தன. சுதர்சன சபா மிகப் பழைய அமைச்சூர் குழு. இதைத் தவிர விஜய விலாச சபா. சக்ரதா சபா, குமரகான சபா முதலிய பல சபைகள் இருந்தன. குமரகான சபையைச் சேர்ந்த என். விஸ்வநாதய்யர் பல நாடகங்களை எழுதி நடித்து, அச்சு வடிவிலும் கொண்டு வந்திருந்தார். விஜயவிலாச சபா, சக்ரதர சபா இவற்றுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். இந்தச் சபைகளில் ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கினார் சுந்தரராவ். நல்ல எடுப்பான தோற்றம் உடையவர்; கெம்பீரமான குரல் மிகச் சிறந்த நடிகர். உஷா பரிணயம், பிரகலாதன் இரு நாடகங்களை நாங்கள் பார்த்தோம். பிரகலாதனில் இரண்யனாகவும், உஷாபரிணயத்தில் பாணுசூரனாகவும் சுந்தரராவ் அபாரத்திறமையுடன் நடித்தார். அதே நேரத்தில் பேசும் படங்களில் வந்த வற்றல் உருவங்களைப் பார்த்தபோது, ‘இப்பேர்ப்பட்டவரையல்லவா ராட்சத வேடம் போடச் செய்ய வேண்டும்’ என்று நாங்கள் எண்ணிப் பெருமூச்சு விட்டோம்.

சுந்தரராவின் கல்லெண்ணம்

எங்கள் நாடகங்களையும் நடிப்பையும் பார்த்துப் பரவசப் பட்ட சுந்தரராவ் எங்களோடு அன்னியோன்னியமாகப் பழகினார். ஒத்திகைகள் நடைபெறும் போது தாமாகவே வந்து உட்கார்ந்து கொள்வார், வாத்தியார் இல்லாததால் சுந்தரராவே அந்த ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு, நடிப்புச் சொல்லிக் கொடுப்பார். பெரியண்ணாவுடன் நெருங்கிப் பழகுவது எல்லோராலும் இயலாது. அதுவே ஒரு தனிக் கலை என்றுதான் சொல்ல வேண்டும். சுந்தரராவ் எப்படியோ பெரியண்ணாவைக் கவர்ந்து விட்டார். இருவரும் மிக நெருங்கி உறவாடினார்கள். சுந்தரராவ் இரண்டாவது மகாயுத்தத்தில் சேவை புரிந்தவர், அப்போது கலைக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சர்க்காரால் அவருக்குக் கொஞ்சம் நிலம் மான்யமாகக் கொடுக்கப் பெற்றிருந்தது. எங்கள் நிலையை நன்குணர்ந்து அனுதாபப்பட்ட சுந்தரராவ் தமது நிலத்தை அடகு வைத்துப் பணம் வாங்கித் தருவதாகவும், நல்ல காட்சி உடைகளைத் தயாரித்து நாடகங்களைச் சிறப்பாக நடத்துமாறும் ஆலோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு ஒப்பவில்லை. கஷ்டங்கள் முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும், நண்பர் களை இதில் பங்கு கொள்ளச் செய்ய விரும்பவில்லையென்றும் சொல்லிவிட்டார். பின்னும் சுந்தரராவ் எங்களுக்கு ஒரு கெளரவ ஆலோசனையாளராகவும், ஆசிரியராகவும், நாங்கள் போகும். ஊர்களுக்கெல்லாம் வந்து கலந்து கொண்டார்.

எம். ஆர். ராதா

பட்டுக்கோட்டையில் நாங்கள் நாடகங்கள் நடத்திக் கொண் டிருந்த போது நடிகவேள் எம். ஆர். ராதா எங்கள் கம்பெனியில் வந்து சேர்ந்தார். என். எஸ். கிருஷ்ணன், ஜெகனாதையர் கம்பெனியிலிருந்தபோது, எம்.ஆர். ராதாவோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் அவரே கடிதம் எழுதி ராதாவை வரவழைத்தார். ராதா வந்ததும் ஏற்கனவே நடந்து வந்த நாடகங்களில், சில நகைச்சுவை வேடங்களைத் திறமையாக நடித்தார். பதிபக்தி நாடகம் தயாராயிற்று. பதிபக்தி நாடகத்தில் ராதாவுக்கு. அந்நாளில் பிரமாதமான புகழ் இருந்து வந்தது. ஜெகனாதையர் நாடகசபை யாழ்ப்பாணத்தில் கலைந்துபோன பிறகு, ஐயரின் புதல்வர் ராமசுப்பு அந்தக்கம்பெனியை ஒருவாறு ஒழுங்குப்படுத்தி மதுரைக்குக் கொண்டுவந்தார். அந்தக் கம்பெனியில் பதிபக்தி நாடகம் அப்போது முதலிடம் பெற்றது. நாடக ஆசிரியர் எம். எஸ். முத்துகிருஷ்ணன் கங்காதரனாகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் தோன்றி மேடையில் பயங்கரமாகச் சண்டை போடுவார்கள். இதை நாங்கள் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறோம். பதிபக்தியில் நான் ராஜசேகரனாக வேடம் புனைந்தேன். தம்பி பகவதி கங்காதரனுகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் நடிக்கத் திட்டமிட்டிருந்தனார். சண்டைபோடும் நுணுக்கங்களையெல்லாம் பகவதிக்கு ராதாவே சொல்லிக்கொடுத்தார். பகவதியும்.அப்போது முரட்டுப் பேர்வழி. சாதாரண விளையாட்டுகளிலே கூட ராதாவுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர் பகவதி ஒருவர்தான். பதிபக்தியில் அவர்கள் சண்டை போடும் காட்சியைக்காண நாங்கள் ஆவலோடிருந்தோம். பதிபக்தி ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ராஜசேகரன்

தஞ்சை என்.விஸ்வநாதையர் எழுதிய ராஜசேகரன் நாடக அச்சுப் புத்தகத்தை ஒருநாள் நானும் ராதாவும் படித்தோம். அந்த நாடகம் எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. ராதா ராஜ சேகரனக நடிப்பதென்று முடிவாயிற்று. உடனே பாடம் எழுதத் தொடங்கினோம். ஆனால், பதிபக்தி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆர்வத்தோடு ஏற்பாடுகளைச்செய்த ராதா, பதிபக்தி அரங்கேறுவதற்கு முன்பே கம்பெனியை விட்டுச் சொல்லாமல் போய் விட்டார். அவர் போய்விட்டதை அறிந்த என். எஸ். கிருஷ்ணன் “அடப்பாவி, நான்தான் ராதாவைக் கம்பெனியில் சேர்த்தேன்; என்னிடம்கூடச் சொல்லாமல் போய்விட்டானே!” என்று வருந்தினார். பிறகு ராதா போடவேண்டிய சந்தானம் வேடத்தை என். எஸ். கிருஷ்ணனே போட்டார். சுவாமி நாடகங்களில் ராதாவுக்குப் பொருத்தமான வேடங்கள் ஒன்றும் இல்லாதபடியால் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இருந்த வரை எங்களோடு அன்புடன் பழகினார். நல்ல முறையில் நடந்துகொண் டார். பெரியண்ணாவிடத்தில் அவருக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டிருந்தது. ராதா வரும்போது அவரைப்பற்றி முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த எங்களுக்கு அவர் எப்படியிருப்பாரோ வென்று யோசனையாகத்தான் இருந்தது. வந்து சிலகாலம் இருந்து போன பிறகு அவரது நட்புறவு எங்களை மிகவும் வருத்தியது. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முதலிய ஊர்களில் நடித்துவிட்டு நாகப்பட்டினம் சென்றோம்.

கோல்டன் கோவிந்தசாமி நாயுடு

வசூல் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எல்லோரும் சேர்ந்து கம்பெனியை இழுத்து நிறுத்த முயன்றோம். இயலவில்லை. சாண் ஏறினல் முழம் சறுக்கியது. பணம் என்னும் கயிறு இருந்தால்தான் கம்பெனியைக் கட்டி இழுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பொருள் வலிமை யுடைய ஒருவரிடம் கம்பெனியை ஒப்படைத்து நடிகர்களாகவே ஊதியம் பெற்றுக் கம்பெனியின் பெயர் மறையாதபடியாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என எங்களுக்குத் தோன்றியது. சென்னை கோவிந்தசாமி நாயுடு, கோல்டன் கம்பெனி என்னும் ஒரு பெரிய நாடகக் குழுவை வைத்துச் சிறப்பாக நடத்தியவர். அவர் எங்கள் நாடகக் குழுவை வருஷ ஒப்பந்தம் பேசி, எடுத்து நடத்த முன்வந்தார். சுந்தரராவ் இப்படி நிரந்தரமாகக் கம்பெனியை மற்றொருவரிடம் ஒப்படைப்பதை எவ்வளவோ தடுத்தார். பல ஆண்டுகள் வசூல் இல்லாது, மனம் கசந்து இருக்கும் நிலையில் பெரியண்ணா சுந்தரராவின் யோசனையை ஏற்க வில்லை. சகல செலவுகளும் கோவிந்தசாமி நாயுடுவே செய்து கொள்வதென்றும், நாங்கள் நால்வரும் நடிப்பதற்காகவும், காட்சியமைப்புகள், உடைகள் இவற்றிற்காகவும் ஆண்டுக்கு ஆருயிரம் ரூபாய்கள் பெற்றுக் கொள்வதென்றும், கம்பெனியின் பெயர் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா என்றே இருக்கவேண்டுமென்றும் பேசி முடிவு செய்யப்பட்டது. எங்கள் நடிகர்கள் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்கு வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார்கள். என். எஸ் கிருஷ்ணன், பெரியண்ணாவுடன் எவ்வளவோ தடுத்துப் பேசிப் பார்த்தார். இறுதியாக அவரும் ஒப்புக் கொண்டார். மூன்றாண்டுகள் இவ்வாறு நடைபெற வேண்டு மென்று கோல்டன் கோவிந்தசாமி நாயுடுவுடன் ஒப்பந்தம் முடிவாகியது. காரைக்காலில் கடைசியாக நாடகம் நடத்தி விட்டு 1932இல் கம்பெனியை நாயுடுவிடம் ஒப்படைத்தோம்.
-------------

29. கோல்டன் சாரதாம்பாள்


முதன் முதலாக உடுமலைப்பேட்டையில் நாடகம் தொடங்கியது. ஸ்ரீபால ஷண்முகானந்த சபையின் பெயரால் நடத்தப் பட்டாலும் அது உண்மையில் கோல்டன் கம்பெனியின் நாடகமாகவே விளங்கியது. நாயுடுவின் மனைவியாக இருந்த சாரதாம்பாள் அம்மையார் கம்பெனியில் முக்கிய இடம் பெற்றார். இராமாயணம் நாடகத்திற்குப் புது மெருகு கொடுக்கப்பட்டது. சாரதாம்பாள் மிகச் சிறந்த நடிகையாதலால் புதிய நடிகர்களுக்குத் தினமும் முறையாக நடிப்புப் பயிற்சி கொடுத்து வந்தார். தொடக்கத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. நாங்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைத்தோம். எங்கள் நடிகர்களும் உள்ளன்போடு உண்மையாக உழைத்தார்கள். என்ன செய்தும் பயனில்லை. எங்களைப் பிடித்த ‘ஏழரை நாட்டான்’ நாயுடுவையும் பிடித்துக்கொண்டது போலும்!

கோல்டன் கம்பெனியார் ஒரு காலத்தில் இராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ண லீலா முதலிய பெரிய நாடகங்களை யெல்லாம் பிரமாதமாக நடத்தியவர்கள். எனவே புதிதாக மகா பாரதம் பாடம் கொடுக்கப்பெற்றது. மகாபாரதத்தில் சாரதாம்பாள் அம்மையாரே துரோபதையாக நடித்தார்.

கம்பெனியின் எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவே கவனித்து வந்தார். எனவே, பெரியண்ணா, நடிகர்கள், ஏனைய, தொழிலாளர்களுக்குரிய சம்பளத் தொகையை ஒப்பந்தப்படி தாமே வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நேரடியாக நாயுடு விடமே எல்லோரும் சம்பளம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். நாயுடுக்கு இந்த ஏற்பாடு மிகவும் செளகரியமாகப் போய்விட்டது. அவர் இதைப் பயன்படுத்திக் கொண்டு நடிகர் களையும்,தொழிலாளர்களையும் தமது வசப்படுத்திக் கொள்ள முற்பட்டார். உடுமலைப்பேட்டை வசூல் திருப்திகரமாக இல்லை. திருப்பூருக்குச் சென்றோம். அங்கும் வசூல் இல்லை. ஸ்பெஷலாகச் சில பெரிய நடிகர்களைப் போட்டு நடத்தினால் வசூலாகுமென்று நாயுடு எண்ணினார். நாங்கள் அவருடைய விருப்பத்துக்குச் சம்மதித்தோம்.

பி. எஸ். வேலுநாயர்

பிரசித்தி பெற்ற நடிகர் பி. எஸ். வேலுநாயரைக் கொண்டு சத்தியவான் சாவித்திரி, கோவலன் ஆகிய இரு நாடகங்கள் நடத்த ஏற்பாடாயிற்று. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி நடந்தது. பி. எஸ். வேலுநாயர் முற்பகுதியில் சத்தியவானாகவும் பிற்பகுதியில் எமதருமனுகவும் நடித்தார். சாரதாம்பாள் அம்மையார் சாவித்திரியாக நடித்தார். மற்ற எல்லா வேடங்களையும் எங்கள் நடிகர்களே ஏற்று நடித்தார்கள். நான் நாரதராக நடித்தேன். நாடகம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும்போதுதான் நாயர் அரங்கிற்குள் வந்தார். எல்லோரையும் அழைத்தார். “உங்கள் அனைவருக்கும் சுவாமிகளின் பாடம் தானே?” என்று கேட்டார். எல்லோரும் ‘ஆமாம்’ என்று தலை யசைத்தோம். நாயர் மகிழ்ச்சியோடு “அப்படியானால் கவலை யில்லை” என்றார்.

நாயரின் நாவன்மை

எங்கள் தந்தையார் வேலுநாயரோடு பெண்வேடம் தாங்கி நடித்தவர். தாயரின் பேச்சுத் திறமையைப் பற்றி அவரிடம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகுந்த வாதத் திறமையோடு பேசக்கூடிய சிறந்த பேச்சாளரென அவரை எல்லோரும் புகழ்வார்கள். கே. எஸ். அனந்த நாராயண ஐயரும், கோல்டன் சாரதாம்பாளும்தான் நாயருடைய பேச்சுக்கு ஒருவாறு ஈடு. கொடுக்கக்கூடியவர்கள் என்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். அவர் என்ன பேசுவாரோ வழக்கமான பாடத்தை விட்டு வேறு எதையாவது பேசினால் என்ன செய்வது? என்ற அச்சம் எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் குடி கொண்டிருந்தது. நாயர் சத்தியவானக நடித்த முதல் பகுதியில் சுமாலியாக நடித்த என். எஸ். கிருஷ்ணனுடன் ஏதேதோ புதிய கேள்விகள் போட்டார். நகைச்சுவை நடிகரானதாலும், ஏற்கனவே சபையோரிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்ததாலும் என். எஸ். கே, ஒருவாறு சமாளித்தார். சாரதாம்பாள் அன்று மிகத் திறமையாக நடித்தார். வேலுநாயருக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை சபையோர் நன்கு ரசித்தார்கள். சத்தியவாகை நடித்த முற்பகுதி முடிந்தது. அடுத்தது எமதர்மன் காட்சி. சித்திரகுப்தனிடம் விசாரணை நடந்தது. சத்தியவான் உயிரைக் கவர்ந்து வரக் கிங்கரர்கள் அனுப்பப் பட்டார்கள். அடுத்து நாரதர் வர வேண்டிய கட்டம். நான் வந்தேன். வேலுநாயர் நாங்கள் வழக்கமாகப் பேசும் வசனங்களையே பேசினார். சுவாமிகளின் பாடத்தை அவர் ஒழுங்காகப் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது.

வாக்கு வாதம்

சத்தியவான் உயிரைக் கவராதிருக்கும்படி நாரதர் எம தருமனை வேண்டுகிறார். இருவருக்கும் வாதம் நடைபெறுகிறது. முடிவில் எமன் கோபம் கொள்கிறார். “எட்டி நில்லும் நாரதரே” என்னும் பாட்டு; இதன் பிறகு நாரதர் சபதம் செய்து கொண்டு உள்ளே போகவேண்டும். நாரதருக்கும் எமனுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. வழக்கப்படி பேசும் சுவாமிகளின் பாடங்களையே நாயர் பேசி வந்தார். நானும் ஒழுங்காகப் பேசினேன். சுவாமிகளின் பாடம் முடிந்தது. எமன், “என்ன சொன்னீர்?” என்று கூறிப் பாட்டைத் தொடங்க வேண்டும். நாயர், நான் எதிர்பாராதபடி மேலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை.

நாரதரின் திணறல்

இம்மாதிரி ஸ்பெஷல் நாடகங்களில் பேசி நன்கு பழக்கமில்லாததால் நான் திணறினேன். நாரதர் திணறுவதைப் பார்த்த நாயர், மேலும் சிரித்துக் கொண்டே பேசினார். எமன் கோபப்பட்ட பிறகு பேச வேண்டிய ஒரே ஒரு வசனம் மட்டும் பாக்கியிருந்தது. ‘ஏ மறலீ! முன்பு மார்க்கண்டனுக்காகச் சிவபெருமானிடம் உதை வாங்கி அவமானப்பட்டதை மறந்து விட்டாயா?” என்ற வசனம் அது. வேறு வழியின்றி எமன் கோபப்படாத நிலையிலேயே, அதையும் பேசி முடித்தேன். எமனாக நின்ற நாயர் அதன் பிறகும் கோபம் கொள்ளவில்லை. “என்ன நாரதரே! அரியும், அயனும் காண்பதற்கு அரிதான எம்பெருமான் திருவடி என் மீது பட்டதையா அவமானம் என்று சொல்கிறீர்? ஆஹா, அதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்?” என்று மேலும் சிரித்துக்கொண்டே பேசினார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. எமன் கோபப்பட்டாலல்லவா நாரதரும் கோபத்தோடு சபதம் செய்ய முடியும்? சிரித்துப் பேசும் எமனிடம் எப்படிக் கோபம் கொள்வது? திணறினேன்; ஏதேதோ குளறினேன். கடைசியாக என்னுடைய பரிதாப நிலைக்கு இரங்கி நாயர் கோபம் கொள்வது போல் நடித்த பிறகுதான் நாடகம் நகர்ந்தது. நானும் பாட்டுப் பாடிச்சபதம் செய்துவிட்டுத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று உள்ளே வந்து சேர்ந்தேன். ஒருவாறு நாடகம் முடிந்தது. மற்றொரு நாடகத்தையும் நடித்துவிட்டு வேலுநாயர் போய் சேர்ந்தார். அந்த இரு நாடகங்களுக்கும் எதிர்பார்த்தபடி வசூலாக வில்லை. பாட்டுக்கு அதிகமான மதிப்பு இருந்த காலமாதலால் பேச்சிலும், நடிப்பிலும் வல்லவரான வேலுநாயரைப் பொது மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை.

மகாபாரதம்

மகாபாரதத்தில் பெரியண்ணா துரியோதன்னாக நடித்தார். நான் துச்சாதன்னாகத் தோன்றினேன். வீட்டில் ஒத்திகை நடை பெற்றது. இன்னின்னவாறு செய்ய வேண்டுமென்று சாரதாம்பாள் அம்மையார் சுருக்கமாகச் சொன்னார்கள். துகிலுரியும் காட்சியைப் பற்றிய குறிப்பு எதுவும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் கேட்க என் மனம் கூசியது. துச்சாதனனாக நடிக்க நேர்ந்த என் துர்ப்பாக்கியத்தை எண்ணி வருத்தினேன். நாடகத்தன்று கம்பெனி வீட்டில் ரோஜாப்பூ வர்ணத்தில் தோய்த்துப் பலசேலைகளை உலர்த்தியிருந்தார்கள். இந்த சேலைகளையெல்லாம் துகிலுரியும் காட்சியில் அம்மையார் உடுத்திக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. நாடகம் தொடங்கியது. துகிலுரியும் காட்சியும் வந்தது. என் உள்ளம் ஏனோ பதறியது. கை, நடுங்கின. துரியோதனனாக நடித்த பெரியண்ணாவின் மனநிலை என்னைவிட மோசமாக இருந்திருக்கவேண்டும்! அவருடைய முகத்தில் இனம் தெரியாத ஒரு பீதி குடிகொண்டிருந்தது.

சேலையைக் களையுமாறு துரியோதனன் ஆணையிட்டார். நான் கை நடுக்கத்துடன் துரோபதையின் சேலைத் தலைப்பைப் பிடித்தேன். சாரதாம்பாள் அம்மையார் அப்போது தடித்த அற்புதமான நடிப்பை விவரிக்க இயலாது. “கிருஷ்ணா, கண்ணா, கோபாலா, மாதவா” என்று கதறிக்கொண்டு அவர்கள் இரு கரங்களையும் மேலே உயர்த்திக் கும்பிட்டதும், சுழன்று சுழன்று உடுத்தியிருந்த சேலைகள் லாவகமாக விட்டுக் கொடுத்ததும் எல்லாம் உண்மையிலேயே மாயா ஜாலம்போல் விளங்கின. உண்மையாகவே நாங்கள் பிரமித்துவிட்டோம். அந்தக் காட்சி முடிந்த பிறகுதான் எனக்கு உயிர் வந்தது.

வசந்தனின் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் மனோஹரா நாடகம் நடைபெற்றபோது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என். எஸ்.கிருஷ்ணன் மனேஹராவில் வசந்தனாக நடித்தார். பெரும்பாலான நாடகங்களில் அவர் பவுடர் போடும் வழக்கம் இல்லை. இதற்கு விதிவிலக்காக இரண்டொரு நாடகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று மனோஹரா. நகைச்சுவை நடிகர்களில் அநேகர் உச்சிக் குடுமி வைத்துக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்கும் உச்சிக் குடுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த நாளில் கருதப்பட்டு வந்தது. என். எஸ். கிருஷ்ணனும் அப்போது உச்சிக் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். மனோஹராவில் மட்டும் வசந்தனுக்கு ஒரு பழைய ‘டோப்பா’ (பொய்ச் சிகை) வைத்துக் கொள்வது வழக்கம்.

நாடகம் நடந்து கொண்டிருந்தது. வசந்தன் புருஷோத்தம மஹாராஜாவின் ஆடையாபரணங்களையெல்லாம் புனைந்து கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சி நடந்தது. கலைவாணர் ஒவ்வொரு மனோஹராவின் போதும் புதிது புதிதாக ஏதாவது கற்பனை செய்து நடிப்பது வழக்கம். எனவே பக்கத் தட்டிகளின் மறைவில் நடிகர்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தம ராஜாவின்ஆடை யாபரணங்களுடன் வசந்தன் அவையில் புகுந்தார். ‘திரிலோக மும் புளுகும் சுந்தர திர விர சூரன் நானே” என்ற பாடல் முழங்கியது. தூங்கிக்கொண்டிருந்த விகடனை எழுப்பி, தேச விசாரணை நடத்தினார். புதிய கற்பனைகளை உதிர்த்தார். எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தோம்.

சிற்றெறும்பின் திருவிளையாடல்

என். எஸ். கே. முகத்தில் திடீரென்று ஏதோ மாறுதல் ஏற்பட்டது. தலையிலிருந்த ரேக்கு ஒட்டிய தகரக் கிரீடத்தை அடிக்கடி எடுத்து, சரிப்படுத்திக்கொண்டார். ஏதோ அவஸ்தைப் படுவதுபோல் அவருடைய முகம் தோற்றம் அளித்தது. வசந்தனின் அட்டகாசம் வழக்கத்திற்குமேல் அதிகமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“விகடா, எனக்கு ரொம்ப அவசரம். நான் அதிக நேரம் இங்கே நிற்க முடியாது. என்னால் தாங்க முடியவில்லை. நான் உள்ளே போகிறேன். பிறகு வந்து பேசிக்கொள்கிறேன்”.

என்று சொல்லி, அவசர அவசரமாக உள்ளே வந்தார். கிரீடத்தைத் தூக்கி எறிந்தார். தலையில் போட்டிருந்த டோப்பா வைக்கையில் எடுத்தார். “ஆ...ஆ...உஸ்...” என்றெல்லாம் அரற்றினார். விஷயம் விளங்காமல் என்னமோ ஏதோ என்று திகைத்தோம், “என்ன, என்ன?” என்று எல்லோரும் சூழ்ந்து கொண்டோம். “ஒண்னுமில்லேப்பா, சிற்றெறும்பின் திருவிளையாடல்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

நடந்தது இதுதான். நாடகத்தின் முற்பகுதி முடிந்து, டோப்பாவைக் கழற்றியபோது ஒப்பனையாளரிடம் “ஏம்பா, இதுக்கு தேங்கா எண்ணெய் போட்டு, கொஞ்சம் சரிப்படுத்தி வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறார். அவருடைய ஆணையை உடனே நிறைவேற்றிய ஒப்பனையாளர், எண்ணெய் போட்டு, டோப்பாவைச் சரிப்படுத்தித் தனியே பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டார். டோப்பா வைத்த இடத்தில் எறும்புகள் ஏகாந்தமாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. எண்ணெய் மணத்தில் டோப்பாவைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்ட சிற்றெறும்புகள் கலைவாணரின் உச்சிக்குடுமித் தலையை நன்றாகப் பதம் பார்த்துவிட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட காலம் வரையில் கலைவாணர் டோப்பா வைக்கும் போதெல்லாம் சிற்றெறும்புகள் செய்த இந்தத் திருவிளையாடல்களைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.
----------------------

30. பாகவதர் சந்திப்பு


திருப்பூர் முடிந்து வேறு சில ஊர்களுக்குச் சென்றோம். பொன்னமராவதியில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோது ஸ்பெஷலாக வள்ளித்திருமணம் நாடகத்திற்கு எம். கே. தியாகராஜ பாகவதர் வந்தார். அவர் அப்போதுதான் புதிதாக மேடைக்கு வந்து கொண்டிருந்தார். சரியாகப் பேசத்தெரியாது. ஆனால் அற்புதமான சாரீரம். இனிமையாகப் பாடுவார். பாகவதர் அரங்கிற்கு வந்ததும் எங்களை அழைத்து, “நான் ஒன்றும் தெரியாதவன். புதிதாக நாடகமேடைக்கு வந்திருக்கிறேன். நீங்கள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள். நன்றாக நடிக்கவும், பேசவும் தெரிந்தவர்கள். நான் ஏதாவது தவறுசெய்தாலும் நீங்கள்தான் சரிப்படுத்திக்கொண்டு என்னைக் கெளரவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு அடக்கத்துடன் பேசியது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.

வள்ளித்திருமணம் நாடகம், கழுகாசலக் காட்சி தொடங்கியது. பாகவதர் பாடி முடித்துப் பேசியதும் நான் நாரதராக வந்தேன். அவர் ஏதோ பேசினார். வார்த்தைகள் சரியாக வராமல் தடைப்பட்டன. அவர் பேசமுடியாமல் திணறுவதைப் பார்த்து நானே பேசி அவர் பேசவேண்டிய பகுதியை நினைவுபடுத்தினேன். ஒருவாறு காட்சி முடிந்தது. உள்ளே வந்ததும் பாகவதர் என்னிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர் அன்றாேடு அந்தச் சம்பவத்தை மறந்துவிடவில்லை. பிறகு திரைப்படத்துறையில் ஈடுபட்டு நட்சத்திரமாகத் திகழ்ந்த நாட்களிலேகூட என்னைச் சந்திக்கும்போது, இந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவுபடுத்தி மற்றவர்களிடம் இதைப் பெருமையோடு சொல்லி, என்னை அறிமுகம் செய்து வைத்த பெருந்தன்மையை என்றும் மறக்க முடியாது. என். எஸ். கிருஷ்ணன் தினைப்புனக் காவலராகத் தோன்றிப் பாகவதரைத் திணற அடித்தார்.

பாகவதர் நடித்த வள்ளித்திருமணம் நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. மீண்டும் பழைய நிலைதான். மகாபாரதத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சாரதாம்பாள் வேறு சில நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இராமாயணத்தில் மாயா சூர்ப்பனகையாக நடித்தார். ராமராக நடிக்க, ராமர் நடிப்பில் பிரசித்தி பெற்ற பரசுராமபிள்ளை வந்திருந்தார். அவர் கோல்டன் கம்பெனியில் ஏற்கனவே நடித்தவர். சீனிவாச பிள்ளையைப் போலவே அவரும் சொந்தமாகக் கம்பெனி வைத்து நடத்திப் புகழ் பெற்றவர்; நன்றாக முறுக்கிய மீசையோடு அவர் ராமராக வந்தார்; அற்புதமாக நடித்தார்; அருமையாகப் பாடினார். நான் லட்சுமணனாக நடித்தேன். லட்சுமணன், ராமனுக்கு முடிசூட்டுவதைத் தடுத்த அனைவரையும் அழித்தொழித்து விடுவதாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டு உள்ளே போகும்போது ராமர் வருகிறார். வரும்போதே “ஆறுதல் சினமே” என்ற பாட்டு. இந்தப் பாட்டை உள்ளிருந்தபடியே இரண்டு மூன்று முறைகள் பாடிக் கொண்டிருந்தார் பரசுராமபிள்ளை. அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த கோவிந்தசாமி நாயுடுவுக்கு இது பிடிக்கவில்லை. “வெளியே போய்த்தான் பாடுமேய்யா” என்று பரசுராமபிள்ளையை முதுகில் கை வைத்துத் திடீரென்று தள்ளிவிட்டார். அவர் தள்ளப்பட்ட நிலையில் தடுமாறிக்கொண்டு வந்து நின்றதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

சாரதாம்பாளின் கிண்டல்

அன்று எனக்குத் தொண்டை மிகவும் கம்மியிருந்தது. சரியாகப் பேச முடியவில்லை. சக்தியை முழுவதும் உபயோகப்படுத்திப் பேசினேன். பேசவே முடியவில்லையென்றால் பாட்டு எப்படி யிருக்கும்?... ஒரே அலறலாக இருந்தது. சூர்ப்பனகையின் காதலை ராமர் புறக்கணித்து விட்டுப் போனபின் அவள் லட்சுமணனோடு வாதாடுகிறாள். சூர்ப்பனகைக்கும், லட்சுமணனுக்கும் வாதம் நடந்தது. நான் பேச முடியாமல் திணறுவதைக் கண்டு சாரதாம்பாள் அம்மையாருக்கு ஒரே சிரிப்பு. என் தொண்டையிலிருந்து நாலைந்து குரல்கள் வெளி வந்தன. இந்த லட்சணத்தில் நான் பாடத் தொடங்கினேன்.

    "வேண்டாதே எனைத்
    தீண்டாதே மொழி
    தாண்டாதே தூர நில்...”

என்னும் பாடலை நான் மிகவும் சிரமப்பட்டுப் பாடி முடித்தேன். உடனே சாரதாம்பாள்,

“ஐயா, நீர் என்னைக் கொல்லுவதற்குள் உம்முடைய உயிர் போய்விடும் போலிருக்கிறதே! வேண்டாமையா வேண்டாம். நீர் என்னை விரும்பாவிட்டால் போகிறது. உம்முடைய நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. கொஞ்சம் அமைதியாக இரும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். சபையோரும் நிலைமையை உணர்ந்து கைதட்டிச் சிரித்தார்கள்.

சொந்தச் சமையல்

பொன்னமராவதியிலிருந்து கீழச்வசேற்பட்டிக்குப் போனோம். கம்பெனி வீட்டில் எல்லாரோடும் இருப்பது பெரியண்ணாவுக்கு வசதிக் குறைவாகத் தோன்றியது. அவருடைய விருப்பப்படி வேறு தனி வீட்டில் வசித்து வந்தோம். ஒட்டல் சாப்பாடு பிடிக்காததால் நாங்களே சமைத்து உண்டோம். பெரியண்ணா கறிகாய்களை எப்படிப் பாகம் செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லுவார். அவரே கறிகாய்களை அரிந்தும் கொடுப்பார். மசாலை அரைக்க வேண்டிய வேலை என் பொறுப்பு. சின்னண்ணா அடுப்படியிலிருந்து எல்லாவற்றையும் ஆக்கித் தருவார். நாங்களே சமைத்து உண்டது மிகவும் சுவையாகத்தான் இருந்தது. அடிக்கடி கம்பெனியில் எங்களிடம் பாசமும் பரிவுமுடைய பிள்ளைகள் வந்து அனுதாபத்தோடு உதவி புரிவார்கள்.

கீழச்சேவற்பட்டியில் வசூல் இல்லை. மேலும் சில ஊர்களுக்குச் சென்றோம். அங்கும் இதே நிலைமை. கடைசியாக கரூருக்கு வந்தோம். கோவிந்தசாமி நாயுடுவின் மகள் கிருஷ்ணவேணியும் சில நாடகங்களில் எங்களோடு நடித்து வந்தார். ராமாயணத்தில் சீதையாக நடிப்பார். சந்திரகாந்தாவில் சந்திரவதனுவாக நடிப்பார். கரூரில் சந்திரகாத்தா நாடகத்தில் ஒருசுவையான நிகழ்ச்சி நடந்தது. நாடகம் நடந்து கொண்டிருந்தது. சுண்டுர் இளவர சன் சந்திரவதைைவப் பலாத்காரம் செய்யப்போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.

பரிதாப பலாத்காரம்

பூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டிருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான், தனக்கு அவள் மீதுள்ள தணியாக் காதலைப்பற்றி விவரிக்கிறான், சந்திரவதனா. அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் வெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்ச லிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டுர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனவைக் காப்பாற்றுகிறான்... காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.

இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டுர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின் தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல; ஆசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும், தான் கொண்ட ‘லவ்’வைப் பற்றிப் பொழிந்துதள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,

    அட்டியின்றி கட்டி
    முத்தமிடாவிடில் நானே-உன்னைத்
    திட்டம் பலாத்காரம் செய்குவேன்
    சத்தியம் தானே

என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டுச் சந்திரவதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார். வழக்கம் போல் சந்திரவதனா பக்கத்தட்டிவரை ஓடினாள்; கூச்சலிட்டாள். இளவரசன் அவள் கையைப் பிடித்துவிட்டான். அடுத்த விநாடியில் ராகவ ரெட்டி வந்து இளவரசன் முதுகிலே அறைய வேண்டும்.

எங்கே ராகவரெட்டி?... காணோம் அவரை! சந்திரவதனாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக் கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவே இல்லை. திரைமறைவில் பல குரல்கள் ராகவரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து நின்ற சுண்டுர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்கம்போல் அறை விழவில்லை. பின்னல் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன்? சந்திரவதனா. பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல், வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.

அண்ணாசாமியின் ஆவேசம்

ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்கினார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப் பட்டது. சுபேதார் அண்ணாசாமியாக வேடம் புனைந்திருந்த பெரியண்ணாவின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர்கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. “பளார், பளார்” என்ற ஒசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது.

சந்திரவதனவும் சுண்டுர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேயறைந்தது போன்ற ஒரு பயங்கரமான அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான்; அறைந்தபின் ராகவ ரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன், அறைபட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்... நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம்: எல்லாவற்றையும் சேர்த்துச் சுண்டுர் இளவரசனைப் பலம் கொண்ட மட்டும் தாக்கிவிட்டார் அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து ராகவரெட்டியைப் பார்த்து உறுமி விட்டுப் போக வேண்டிய சுண்டுர் இளவரசன், எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு எப்படியோ ஒரு வகையாகத் தட்டுத் தடுமாறி உள்ளே போய்ச்சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய் பரிதவித்த அந்தப் பரிதாபத்துக்குரிய சுண்டுர் இளவரசன் வேறு யாறுமல்லன்; அடியேன் தான். கும்பகர்ணன் சேவையிலிருந்து விடுபட்டு, உள்ளே அறையும் பட்டு, வந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த ராகவரெட்டி எனது அருமைத் தம்பி பகவதி.

நாயுடுவுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வசூல் இல்லாததால் நாயுடுவுக்கு எங்களைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது.

என். எஸ். கே. யோசனை

இந்நிலையில் மதுரை பால வினோத சங்கீத சபையின் உரிமையாளராகிய பக்கிரி ராஜா, கரூருக்கு வந்தார். அப்போது அவருடைய கம்பெனியிலிருந்து நவாப் இராஜமாணிக்கம் கே. சாரங்க பாணி முதலியோர் பிரிந்து சொந்தமாகத் தேவி பால வினோத சங்கீத சபா என்னும் கம்பெனியைத் துவக்கியிருந்தார்கள். பக்கிரி ராஜா என், எஸ். கிருஷ்ணனிடம் தனியாகப் பேசினார். அவரைத் தமது கம்பெனிக்கு வருமாறு அழைத்தார். பெரியண்ணா பக்கிரி ராஜாவைச் சந்தித்து, என். எஸ். கிருஷ்ணனை அழைத்துப்போவதால் தமக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்று கூறி அனுமதி யளித்தார். மறுநாள் கிருஷ்ணன் பெரியண்ணாவிடம் வந்து, பக்கிரி ராஜா எங்கள் நால்வரையும் விரும்புவதாகவும், நாமெல்லோரும் ஒரு குழுவாகவே போய்க் கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்கலாம் என்றும் யோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு உடன்படவில்லை. நாங்கள் மறுத்து விட்டதால் என். எஸ். கிருஷ்ணனும் பக்கிரி ராஜா கம்பெனிக்குப் போக மறுத்து விட்டார்.

ஒப்பந்தம் ரத்தாகியது

கரூரில் எங்களுக்கும் நாயுடுவுக்கும் வழக்கு நடைபெறக் கூடிய அளவுக்குக் குழப்பங்கள் வளர்ந்தன. பெரியண்ணா மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து வந்த துன்பத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிக் கம்பெனியை ஒருவரிடம் ஒப்படைத்தோம். ஆனாலும் எங்கள் துன்பம் தீரவில்லை. செலவுக்குப் பணம் பெறுவதே கஷ்டமாகப் போய்விட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள் விக்கு வந்து சேர்ந்தோம். மூன்றாண்டுகள் நாயுடுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். ஒப்பந்தப்படி பதினொரு மாத காலந்தான் நாடகம் நடந்தது. எங்களுக்கு வர வேண்டிய சம்பளப் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்தார் நாயுடு. கம்பெனியில் இருக்க விருப்பமில்லாதவர்கள் எங்களோடு வந்து விடலாமென்றும் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் பெரியண்ணா கூறினார். பெரும்பாலோர் எங்களோடு வர விரும்பவில்லை. ஒராண்டு காலமாகத் தொடர்பு விட்டுப்போனதால் எல்லோரும் நாயுடுவுடனேயே இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டார்கள்.

மீண்டும் காமேஸ்வரய்யர்

எங்கிருந்தோ பழைய காமேஸ்வரய்யர் வந்து சேர்ந்தார். தாம் பணம் தருவதாகவும், கம்பெனியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் துாண்டினார். பெரியண்ணா அப்போது ஆத்திரத்தோடு கூறிய வார்த்தைகளை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை.

“எவ்வளவோ கஷ்டங்கள் எங்களுக்கு வந்தது; ஆனாலும் நாங்கள் கலங்கவில்லை. எங்களுக்கென்றிருந்த ஒரே ஒரு சிறு நிலத்தை உங்கள் சம்பளப் பாக்கிக்காக அடகு வைக்கும் நெருக்கடியை உண்டாக்கினீர்கள். நிலமும் அடகு வைக்கப் பட்டது. உங்கள் சம்பளமும் வசூல் செய்யப்பட்டது. இப்போது ஒத்தாசை செய்வதாகப் பாசாங்கு செய்கிறீர்கள்! அனந்தகோடி வந்தனம். உங்கள் ஒத்தாசையில் கம்பெனி நடப்பதை நான் விரும்பவில்லை. எங்கள் தலையெழுத்துப்படி நடக்கட்டும். நீங்கள் போய்வரலாம்”.

என்று கண் கலங்கக் கூறினார் பெரியண்ணா, காட்சிகள், உடைகள் இவற்றையெல்லாம் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி, அதிலேபோட முடிவு செய்தார். நாங்கள் புறப்படும் சமயம் சாமான்களை வாடகை வீட்டில் சேர்ப்பிக்கக்கூட யாரும் ஒத்தாசைக்கு வரவில்லை. திருச்சிராப்பள்ளி ரங்கவிலாஸ் தியேட்டருக்கு உள்ளேயே கம்பெனி வீடு இருந்தது. நாயுடு வாயிலில் நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பயந்துகொண்டு நடிகர்கள் யாருமே வெளி வரவில்லை.

நன்றி காட்டியவர்கள்

நாயுடு அதிகச் சம்பளம் தருவதாக எவ்வளவோ ஆசை காட்டியும் அதற்குக் கட்டுப்படாமல் எங்களோடு வந்தவர்கள் சிலர். அவர்களில் முதல்வர் என். எஸ். கிருஷ்ணன். இன்னும் சீன் மேஸ்திரி பத்மனாபபிள்ளை, கொல்லம் பாலகிருஷ்ணன், கே. கோவிந்தசாமி, டி. என். சிவதானு, என். எஸ். பால கிருஷ்ணன், என். எஸ். வேலப்பன், பிரண்டு ராமசாமி ஆகியோர், எல்லோருமாகச் சாமான்களை வெளியே கொண்டு சேர்த்தனார். விடைபெற்றுக் கொண்டு வெளியேறினோம். அப்போது நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை நகரசபைத் தியேட்டரில் (தேவர் மன்றம்) நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். சொந்தக் கம்பெனி ஆரம்பித்த புதிதாகையால் எந்நேரமும் ஒத்திகை சுறு சுறுப்பாக நடைபெற்று வந்தது. விலகியவர்கள் எல்லோரும் நவாப்பின் விருந்தினராக, ஒரு நாள் அவர்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எல்லோரும் உட்கார்ந்து புகைப் படம் எடுத்துக் கொண்டோம். மறுநாள் புறப்பட்டு நாகர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.
-----------------

31. தேவி பால ஷண்முகானந்த சபா


நாகர்கோவிலில் எங்களுக்கு அமைதி ஏற்படவில்லை. தங்கைமார்கள் இருவரும் சிற்றப்பாவின் பராமரிப்பில் மிகவும் கஷ்டத்துடன் காலம் கழித்து வருவதை அறிந்தோம். நாங்கள் மாதம் மாதம் ஒழுங்காகப் பணம் அனுப்பியும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வில்லையென்பதை அறிந்தபோது எங்கள் உள்ளம் வேதனைப்பட்டது. எதுவும் செய்ய முடியாத நிலையில் புழுங்கினோம்.

நாகர்கோவிலுக்கு நாங்கள் வந்த ஒரு மாதத்திற்குள் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவர் எங்களைச் சேர்த்துக் கொண்டு தேவி பால ஷண்முகானந்த சபா என்னும் பெயருடன் கம்பெனியை நடத்த முன் வந்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டோம். அவரைப் பெரிய செல்வந்தர் என எண்ணினோம். சாமான்களையெல்லாம் வாடகை பேசி அவரிடம் ஒப்படைத்தோம். எங்கள் நால்வருக்கும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகத் தர்மராஜபிள்ளை ஒப்புக் கொண்டார். என்.எஸ். கிருஷ்ணன் முதலிய எங்கள் குழுவினருக் கெல்லாம் தனியாகச் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டது. எல்லோருமாகத் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.

டி. எம். தியாகராஜன்

தஞ்சையில் தேவி பால ஷண்முகானந்த சபையின் நாடகங்கள் தொடங்கப்பட்டன. டி. எம். தியாகராஜன் என்னும் சிறுவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவனுடைய அற்புதமான சாரீரமும் சங்கீத ஞானமும் என்னைக் கவர்ந்தன. அபிமன்யு சுந்தரி நாடகத்தில் அவனுக்குச் சுந்தரி பாடம் கொடுக்கப்பட்டது. பாடல்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது எனக்கே ஆனந்தமாக இருக்கும். முன் எவரும் பாடாத முறையில் புதிய புதிய சங்கதிகளைப் போட்டுத் தியாகராஜன் பாடினன். ஒருநாள் பாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அசட்டையாக எங்கோ கவனித்துக் கொண்டிருந்தான். எதிரேயிருந்த நான், கையில் பிரம்பை எடுத்து “எங்கே கவனிக்கிறாய்?” என்று அவனது தலையில் தட்டினேன். பிரம்பின் நுனி அவன் தலையில் பொத்துக் கொண்டது. கொட கொடவென்று ரத்தம் கொட்டிவிட்டது. நான் பதறிப்போய் விட்டேன். அவன் அழவேயில்லை; என்னுடைய அறியாத்தனத்திற்காக அன்றிரவு முழுதும் வருந்தினேன். உறக்கமே வரவில்லை.

வள்ளித்திருமணம் நாடகத்திலே தியாகராஜன் வள்ளியாக வேடம் தாங்கி வருவான். “எந்த மானிட வேடர் நீர்காண்” என்னும் விருத்தத்தைச் சங்கராபரணத்திலே அவன் பாடும் போது நான் வேடனாக நிற்பேன்; மெய் மறந்து நிற்பேன். என்றாவது ஒரு நாள் அவன் நாடகத்துறையை விட்டு இசைத் துறைக்குப் போய், அபாரத் திறமையோடு விளங்குவானென அன்றே எண்ணினேன். என் எண்ணம் வீண் போகவில்லை. அந்த இளஞ்சிறுவன்தான் இன்று சங்கீத விற்பன்னராக விளங்கும் இசைமேதை தஞ்சை டி. எம். தியாகராஜன்.

பசுவை விலை பேசினார்

தஞ்சையில் சில நாடகங்களை நடத்தி விட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம். திண்டுக்கல்லில் வசூலாகவில்லை. தர்மராஜ பிள்ளை பெரும் செல்வந்தர் என எண்ணினோமல்லவா? அதற்கு முற்றிலும் மாறாக ஒட்டை மூங்கிலாக இருந்தார் அவர். அவரது மனப்பான்மையை விளக்குவதற்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறேன்.

கம்பெனிக்குக் காலை மாலை இரு வேளைகளிலும் காப்பிக்காகப் பால் வாங்குவது வழக்கம். ஏற்கனவே எங்களுக்குப் பழக்கமாயிருந்த ஒரு பால்காரர் பால் கொடுத்து வந்தார். திண்டுக்கல்லுக்கு வந்த மூன்றாம் நாள் பால்காரர் வரும்போது தர்மராஜபிள்ளையும் இருந்தார். பால்காரரிடம் பாலின் விலை, முதலிய விபரங்களையெல்லாம் விசாரித்தார். திடீரென்று “இந்தப் பசு என்ன விலை?” என்று கேட்டார். பால்காரர். ஏதோ ஒரு விலையைச் சொன்னார். “சரி, இந்தப் பசுவை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார் பிள்ளை. பால்காரரும் சம்மதித்தார். தர்மராஜபிள்ளை வாங்கிக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு மூன்று தினங்களில் பணம் கொடுத்து விடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தர்மராஜபிள்ளை அடிக்கடி தஞ்சைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். ஆனால் பணம் கொண்டு வரவும் இல்லை; பசுவையும் வாங்கவில்லை. பால்காரர் வழக்கப்படி பால் கொடுத்து வந்தார். பணத்தை ஏப்பமிட்டார்

சுமார் இருபது நாடகங்களுக்குப் பின் பால்காரர் வந்து, மானேஜரிடம் பால் கொடுத்ததற்குப் பணம் கேட்டார். அந்தச் சமயம் கம்பெனி வீட்டிலிருந்த தர்மராஜபிள்ளை,

“எவ்வளவு பணம்?” என்று கேட்டார். பால்காரர் தமக்குச் சேர வேண்டிய தொகையைச் சொன்னார்.

“அடேயப்பா, அவ்வளவு தொகையா? பசுதான் என்னுடையதாச்சேப்பா!... பாலைக் கணக்குப் பண்ணாதே. நீ இத்தனை நாட்கள் பகவுக்குப் போட்ட தீவனத்திற்குரிய தொகையை மட்டும் வாங்கிக் கொள்” என்றார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் பால்காரர் மட்டுமல்ல; நாங்களும் பிரமித்து விட்டோம். பசுவை வாங்கிக் கொள்வதாக வாயால் பேசியதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதற்காக முன் பணமும் கொடுக்கவில்லை. இந்த நிலைமையில் பசு தம்முடையது என்று உரிமை கொண்டாடத் தர்மராஜபிள்ளை துணிந்து விட்டாரென்றால் அவருடைய சுபாவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்தச் சம்பவம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. பால்காரருக்கும் பிள்ளைக்கும் நீண்ட நேர வாதம் நடந்தது. இறுதியாகப் பால்காரர், பிள்ளையைக்கண்டபடி ஏசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

மீண்டும் ஊர் திரும்பினோம்

வசூல் இல்லாமல் சாப்பாட்டு நிருவாகம் தத்தளித்தது. என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. நீடித்து நடத்த முடியாமல் தர்மராஜபிள்ளை ஒரு நாள் சொல்லாமலே போய்விட்டார். நாடகக் கொட்டகைச் சொந்தக்காரர் தம் வாடகைப் பாக்கிக்காகச் சாமான்களை வைத்துக் கொண்டார். காட்சிகள், உடைகள் முதலிய எங்கள் சாமான்கள் கொட்டகையில் இருந்தன. அவை எங்களுடையதென்று கொட்டகைக்காரர் மீது வழக்குத் தொடர்ந்து, அவற்றை மீட்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. எப்படியோ ஒரு வகையாகச் சாமான்களை மீட்டு, அவற்றையெல்லாம் ஒருவீட்டில் போட்டு வைத்தோம். புதிதாகச் சேர்ந்திருந்த சில பையன்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பும் எங்கள் தலையில் சுமந்தது. எல்லோரையும் அனுப்பிவிட்டு, ஊரிலிருந்து புறப்பட்ட எங்கள் சிறிய குழுவுடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினோம்.

பெரியண்ணா மனச் சோர்வு

பெரியண்ணாவுக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. எங்கள் மூவரை மட்டும் ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்துவிட எண்ணினார். சில காலமாவது கம்பெனி நடத்தும் தொந்தரவி லிருந்து நிம்மதி பெற விரும்பினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்குக்கூட எழுதியதாக அறிந்தோம். எவரிடமிருந்தும் அனுகூலமான பதில் வரவில்லை.

இரண்டு மாதகாலம் அமைதியின்றிக் காலம் கழித்தோம். அதற்குள் என். எஸ். பாலகிருஷ்ணன், என். எஸ் வேலப்பன் இருவரும் சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்விட்டார்கள். நாங்கள் கம்பெனி ஆரம்பிக்கப் போவதை எதிப்பார்த்து என். எஸ். கிருஷ்ணன் மட்டும் காத்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவருடைய உறுதியும் தளர்ந்தது. எல்லோரிடமும் வறுமை தாண்டவமாடியது. தினமும் என். எஸ். கிருஷ்ணன் எங்களைச் சந்திப்பார். கம்பெனியைத் தொடங்கச் சொல்லி வற்புறுத்துவார். ஒருநாள் பெரியண்ணா, எங்களுக்காக நீ காத்திருக்க வேண்டாம். எந்தக் கம்பெனியிலாவது சேர்ந்து கொள். பிறகு நாங்கள் கம்பெனி தொடங்கும்போது உன்னை அழைத்துக்கொள் கிறோம்” என்று சொன்னார். என். எஸ். கிருஷ்ணன் வருத்தத்துடன் பின்னும் சில நாட்கள் இருந்து பார்த்தார். பயனில்லை. நாயுடு அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதி வற்புறுத்தினார். அச்சமயம் கோல்டன் கம்பெனியே நாகர்கோவிலுக்கு வந்து விட்டது. நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நானும் என். எஸ். கே.யும் அடிக்கடி நாடகங்கள் பார்த்தோம். சாரதாம்பாள் என்.எஸ்.கிருஷ்ணனைத் தம் கம்பெனியில் சேர்ந்து விடும்படி நேரில் கேட்டுக்கொண்டார். என். எஸ். கே. அதுபற்றி யோசிப்பதாகக் கூறினார். நாகர்கோவில் முடிந்து கம்பெனி திருவனந்தபுரம் சென்றது. அங்கு சென்ற பிறகும் நாயுடுவின் வற்புறுத்தல் கடிதங்கள் வந்தன. இறுதியாக வேறு வழியில்லாத நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒருநாள் எங்களிடம் வந்து கண்களில் நீர் ததும்பப் பிரியாவிடை பெற்று, சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தார்.
-----------

32. ஸ்பெஷல் நாடக நடிப்பு


நீண்ட காலம் நாடகத்தில் நடித்துவிட்டு, ஊரில் வந்து வேறு வேலை எதுவுமின்றி இருந்ததால், நாஞ்சில் நாட்டிலுள்ள நாடக நண்பர்கள் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். பெரியண்ணா இதை விரும்பவில்லை. இந்தத் தொந்தரவு அடிக்கடி ஏற்பட்டதால் தவிர்க்க முடியாமல் இரு நாடகங்களில் நடிக்க நேர்ந்தது. ஒன்று அல்லி அர்ஜூனா, மற்றொன்று சதாரம். ஸ்பெஷல் நாடக அனுபவம் எனக்கில்லை. என்றாலும் ஏராளமான ஸ்பெஷல் நாடகங்களைப் பார்த்திருப்பதால் சமாளித்துக் கொள்ளலாம் என்ற துணிவோடு ஒப்புக் கொண்டேன். முதல் நாடகம் அல்லி அர்ஜூனா, சுசீந்திரத்தை அடுத்த தாமரைக் குளத்தில் நடந்தது. என் தந்தையாரோடு இளமையில் நடித்த ஐயப்பன் உடையார் பிள்ளை, அன்று ஸ்ரீ கிருஷ்ணனக நடித்தார். நான் அர்ஜுனன், நாஞ்சில் நாட்டில் அப்பொழுது பிரபலமாய் இருந்த நாகர் கோவில் லக்ஷ்மி அல்லியாக நடித்தார்.

ஒசரவிளை உடையார்பிள்ளை

இவர் நாஞ்சில் நாட்டில் குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியர். மிகச்சிறந்த ஐயப்பசுவாமி பக்தர். எப்போதும் இவருடைய வாய் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று துதித்த வண்ணமிருக்கும். நவாப் இராஜமாணிக்கம் கம்பெனிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் நாடகத்தை எழுதிப் பயிற்றுவித்தவர் இவரே தாம். மேலும் இவர் தம் பெரு முயற்சியால் நிதி வசூலித்து, இறுதியாகத் தாம் வாழ்ந்து வந்த கடுக்கரை என்ற சிற்றுாரில் ஐயப்ப சாமிக்கு ஒர் ஆலயம் அமைத்துள்ளார். இவர் என் தந்தைக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னைக் கண்டதும் அன்பு பாராட்டி அணைத்துக்கொண்டு பாசமும் பரிவும் காட்டினார்.

இரண்டாவது ஸ்பெஷல் நாடகம் சதாரம். நாகர்கோவில் மீனாட்சிபுரத்திலுள்ள ஸ்ரீமீனாம்பிகா தியேட்டரில் நடந்தது. அதில் நான் மயோனாக நடித்தேன். மற்றப் பாத்திரங்களைத் தாங்கி நடித்தவர்களின் பெயர்கள் எனக்கு நன்கு நினைவில்லை. சதாரத்தைச் சல்லாபம் செய்ய அழைக்கும் கட்டத்தில், நான் பாடிய காதல் பாட்டுக்களை ரசிகர்கள் பிரமாதமாக ரசித்துக் கைதட்டிப் பாராட்டினார்கள். சுவாமிகளின் நாடகங்களிலுள்ள எத்தனையோ காதல் பாட்டுக்களும், உரையாடல்களும் எனக்கு மனப்பாடமாய் இருந்ததால் சிறிதும் சிரமப் படாமல் சமாளித்தேன். தாமரைக் குளத்தைப் போலவே இங்கும் பெரும் புகழ் கிடைத்தது. இரண்டு ஸ்பெஷல் நாடகங்களிலும் பேரும் புகழும் பெற்று விட்டதால் ஸ்பெஷல் நாடகக் காண்ட்ராக்டர்கள் என்னை முற்றுகை யிட்டார்கள். ஆனால் எனக்கோ, என் சகோதரர்களுக்கோ இந்த நாடகங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. நாடகத் துறையில் எங்களுக்கு ஒரு இலட்சியம் இருந்ததால், இந்த நாடகங்களின் மூலம் நல்ல வருவாய் வந்த போதிலும் கட்டுப்பாடில்லாத இந் நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை.

ஆடம்பரமும் அமுலும்

ஸ்பெஷல் நாடகத்திற்கு நான் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது மருமகன் டி. என். சிவதாணுவுக்கும், எங்கள் பழைய நடிகரும் எங்கள் அன்புக்கு பாத்திரருமான கொல்லம் பால கிருஷ்ணனுக்கும் ஒரே குவி. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டு காரர்களுக்குச் சில கையாட்கள் நடத்தும் ஆடம்பரப் படாடோபங்களை எனக்கும் நடத்த இவர்கள் ஆசைப்பட்டார்கள். முதல் நாடகத்தன்று நான் காரில்போய் தாமரைக் குளம் நாடகக் கொட்டகைக்கு முன் இறங்கியதுமே இவர்களது இந்த அமுல் தொடங்கிவிட்டது. என் முன்னை கூடிநின்றவர்களை யெல்லாம் ‘விலகுங்கள் விலகுங்கள்’ என்று சொல்லி, அமளி துமளிப்படுத்தினார்கள். இது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. நான் எவ்வளவோ தடுத்து விலக்கியும் இவர்கள் கேட்கவில்லை. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டுக்கு இந்த ஆடம்பரமெல்லாம் தேவையென்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார்கள். காட்சி முடிந்து நான் உள்ளே வரும்போது, நாற்காலி கொண்டு வந்து போடுவதும், சோடா வேண்டுமா, காபி வேண்டுமா என்று கேட்பதும், விசிறி கொண்டுவந்து வீசுவதுமாக, நாடகம் முடிந்து நான் மீண்டும் காரில் ஏறும்வரையில் அவர்கள் அரங்கிற் குள் நடத்திய பாவனை, படாடோபங்களை யெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனி

திடீரென்று ஒரு நாள் பாலகிருஷ்ண சாஸ்திரியிடமிருந்து கடிதம் வந்தது. மடிந்து கொண்டிருந்த பழைய ஜெகனாதையர் கம்பெனி நடிகர்களில் சிலர் அவருடைய நிருவாகத்தில் வேலூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பாலகிருஷ்ணசாஸ்திரி ஏற்கனவே எங்களுக்குப் பல ஆண்டுகளாக அறிமுகமானவர். மின்சாரம் இல்லாத கொட்டகைகளில் அவர்தான் இஞ்சின் கொண்டு வந்து, வாடகைக்கு மின்சாரம் கொடுத்து உதவுவார். எங்களிடம் அவருக்கு அபார நம்பிக்கை. வேலூருக்கு வந்து, தாம் நடத்தும் கம்பெனியில் ஒத்துழைக்க வேண்டுமென்று அவர் கடிதம் எழுதியிருந்தார். ஊரில் சும்மா இருப்பதைவிடச் சில காலம் அவரது நிர்வாகத்தில் இருக்கலாமென எண்ணினோம், பெரியண்ணாவை ஊரில் அமைதியாக இருக்கவிட்டு நான், சின்னண்ணா, பகவதி மூவரும் வேலூருக்குப் பயணமானோம், வேலூருக்கு வந்தபின்தான் அறிந்தோம் கம்பெனியின் நிலைமையை.

பாலசுப்பிரமணியத்தின் அன்பு

கம்பெனியின் நிருவாகம் யாரிடத்தில் இருக்கிறதென்றே புரியவில்லை. சாப்பாட்டு நிருவாகம் ஒழுங்காக இல்லை. டி. பால சுப்பிரமணியம் தாயுடன் தனியே குடியிருந்தார். நாங்கள் வந்ததற்காக உண்மையில் சந்தோஷப்பட்டவர் அவர் ஒருவர்தாம். அவரும் நாங்களும் நன்கு அளவளாவி மகிழ்ந்தோம். அவருடைய தாயார் எங்களிடம் மிகவும் பரிவு காட்டினார்கள். டி. பால சுப்பிரமணியம் ஜெகனாதையரின் ஸ்ரீபால மீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர். பழம் பெரும் நடிகர். ஐயர் கம்பெனியில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிரியராக இருந்த காலத்தில், அவரிடம் பயின்றவர். சுவாமிகளிடம் அளவுகடந்த பக்தியுடையவர். இலக்கியப் பற்று மிகுந்தவர். சுவாமிகளின் பக்தி ரசக் கீர்த்தனை என்ற நூலினையும், லவகுசா நாடகக் கையெழுத்துப் படியினையும் அவர் காலமாகுமுன் எனக்குக் கொடுத்து உதவியவர் என்பதை நன்றியோடு இங்குக் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் போனபின் வேலூரில் சில நாடகங்கள் நடந்தன. வசூல் இல்லை. சாஸ்திரி அடிக்கடி வெளியூருக்குப் போய்க் கொண்டிருந்தார். சாப்பாட்டு நிருவாகம் ஒரே ஊழலாக இருந்தது. ஒருநாள் பகல் பதினொரு மணிவரை அடுப்பே எரியவில்லை. அதற்கு மேல் அரிசி காய் கறிகள் எல்லாம் வந்தன. சமையல் ஆரம்ப மாயிற்று. பிற்பகல் இரண்டரை மணிக்குத்தான் உணவு கிடைத்தது. நாங்கள், இருக்கும் நிலைமையைப் பார்த்து வருந்தினோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கம்பெனிக்கு யார் பொறுப்பாளி யென சாஸ்திரியைக் கேட்டோம். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. “நாங்கள் இந்த நிலைமையில் இங்கே இருப்பது சாத்தியமில்லை; எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள்” என்று வேண்டினோம். சாஸ்திரியும் சிந்தித்தார் கடைசியாய் எப்படியோ ஒருவகையாக நாங்கள் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தோம்:

எட்டையபுரத்தார் பரிவு

எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியன் சில காலம் சொந்தக் கம்பெனி வைத்து நடத்தினார். பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பெனி கலைக்கப்பட்டது. அக்கம்பெனியின் காட்சிகளும் உடைகளும் அவரிடமிருந்தன. அவற்றில் உபயோகமான பொருட்களை எங்களுக்கு கொடுத்து உதவுவதாகக் கூறினார். மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தினார்.

எங்களிடம் ஏற்கனவே இருந்த காட்சிகள், உடைகள் இவற்றுடன் எட்டையபுரம் இளைய ராஜா காசி விசுவநாதபாண்டியன் அவர்கள், அன்புடனளித்த சில சாமான்களையும் வைத்துக் கொண்டு மீண்டும் திண்டுக்கல்லிலேயே கம்பெனியைத் துவக்கினோம். பழைய நடிகர்களில் பலர் மறுபடியும் வந்து சேர்ந்தார்கள். புதிதாகச் சில நடிகர்களையும் சேர்த்துக்கொண்டோம். கம்பெனி ஒழுங்காக நடைபெற்றது.
----------------

33. பெரியார் - ஜீவா நட்பு

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்றோம். ஈரோட்டில் ஒரு நாள் ஈ. வெ. ரா. பெரியார் அவர்களைக் காண அவரது குடியரசு அச்சகத்திற்குச் சென்றேன். முன்புற அறையில் உட்கார்ந்திருந்த ஒருவர் என்ன அன்புடன் வரவேற்றார்.

கறுத்து அடர்ந்த மீசை, கம்பீரமான தோற்றம், பேச்சிலே இனிமை தவழ்ந்தது. அவர் எங்கள் தேசபக்தி நாடகத்தைச் சிறப்பாகப் புகழ்ந்தார். அதில் பாரதி பாடல்களைப் பாடுவதற்காக மிகவும் பாராட்டினார். தங்கள் பெயரென்ன? என்றேன். ஜீவானந்தம் என்று பதில் கிடைத்தது. தேசிய உணர்ச்சி ஏற்பட்ட பின்பு, தொடர்ந்து தமிழில் வெளி வந்த எல்லாப்பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அவற்றில் பூவாளுர் அ. பான்னம் பலஞரின் “சண்ட மாருதம்” ஒன்று. அதில் படித்த, தோழர் ஜீவாவின் பாடல் என் நினைவுக்கு வந்தது.

    பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை-அதன்
    பட்டினி யழுகை கேட்பதில்லை
    இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
    இட்டு வணங்குறார் முத்திக்கென்றே

பாடல் பல அடிகளைக் கொண்டது. இந்தப் பாடலை எழுதிய ஜீவானந்தம் என் இதயத்தில் இடம் பெற்றிருந்தார். அவரே இப்போது எதிரில் இருப்பவர் என்பதை அறிந்ததும் என் உள்ளம் மகிழ்ந்தது. தோழர் ஜீவா என்னைப் பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அறிமுகப்படுத்தி வைத்தார். எங்கள் நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்தார். பெரியார் அவர்கள் என்னை மகிழ்வுடன் வர வேற்றார். குடியரசுப் பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தாம் வெளியிட்ட நூல்களையெல்லாம் கொண்டுவரச் சொன்னார். சிறிதும் அயர்வுருது, அத்தனை நூல் களிலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அன்றுமுதல் பெரியார் ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

கடவுட் கொள்கையில்எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் சாதி ஒழிப்பு, குழந்தை மணத்தடை, கலப்புமணம், கைம்மை மணம் முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைள் என்னைமட்டுமல்ல, எங்கள் குழுவினார் அனைவரையும் கவர்ந்தன. தோழர் ஜீவாவின் சமதர்ம உணர்வும், அது பற்றிய அவரது பாடல்களும் சொற்பொழிவு களும் எனக்கு ஒரு உறுதியான லட்சியத்தை வகுத்துத் தந்தன வென்றே சொல்ல வேண்டும். எனக்கு அரசியலறிவு ஊட்டிய அறிஞர்களில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கவர் தோழர் ஜீவானந்தம் அவர்களே ஆவார்.

நாங்கள் நடத்தி வந்த சமுதாயச் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் அடிக்கடி வந்து பார்த்தார்.அந்த நாடகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. எங்கள் மீது பற்றுக் கொள்ளச் செய்தன. எங்கள் குழுவினார் அனைவருக்கும் ஒரு நாள் பெரியார் இல்லத்தில் விருந்து நடந்தது. அப்போது பெரியார் அவர்களின் துணைவியார் காகம்மையார் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் அவர்கள் எங்கள் நாடகக் கம்பெனிக்கு விருந்து வைத்ததைக் கண்டு ஊரே வியந் தது. எப்போதும் சிக்கனத்தைக் கையாளும் பெரியார் அவர்கள் ஒரு நாடகக் கம்பெனியாரிடம் இவ்வளவு தாராளமாகப் பழகியதும் விருந்து வைத்ததும் வியப்புக்குரிய செய்தியல்லவா!

பம்பாய் மெயில்

ஈரோட்டில் சதாவதானம் தே. பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்கள் எழுதிய பம்பாய் மெயில் நாடகம் தயாராயிற்று. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஈரோட்டில் இருந்து கொண்டே பவானி, கொமாரபாளையம், கோபிச் செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் ஸ்பெஷலாகப் பம்பாய் மெயில்,பதிபக்தி நாடகங்கள் போட்டு வந்தோம். பாவலரின் இவ்விரு நாடகங்களும் கம்பெனி யின் முதன்மையான நாடகங்களாக விளங்கின.

பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனியில், வேலூரில் எங்களுக்கு அறிமுகமான ஏ. டி. தர்மராஜூ ஈரோட்டில் வந்து சேர்ந்தார். நீண்டகாலமாகப் பெரியண்ணா பார்த்து வந்த கணக்கு வேலை இவரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இவர் நல்ல நிருவாகத் திறமையும் நாணயமும் உடையவர். 1970 வரை இவரே கம்பெனியின் நிருவாகப் பொறுப்பையும் குடும்ப சம்பந்தமான இதர வேலைகளையும் கவனித்து வந்தார். சாஸ்திரியாரின் கம்பெனி கலைந்துபோனதால் மற்றுஞ் சில நடிகர்கள் வந்து சேர்ந்தார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டி. எம் தியாகராஜன், டி. எ. காசிகாதன், டி. எஸ். தட்சணுமூர்த்தி, இன்று தேவி நாடக சபையின் அதிபராக இருக்கும் கே. என்.ரத்தினம் முதலியோர்.

ஜீவாவின் பாட்டு

1981 ஆம் ஆண்டு முதலே பத்திரிக்கைகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தோழர் ஜீவானந்தம் அவர்களோடு நட்புறவு ஏற்பட்டபின் இந்த ஆர்வம் பன்மடங்காக வளர்ந்தது. ஒய்வு நேரங்களில் எப்போதும் தனியேயிருந்து படித்துக் கொண்டேயிருப்பேன்.

நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்கு வார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக் கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும். பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைச் சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. அதை நான் கேதார கெளளராகத்தில் வீராவேசத்தோடு பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும். பாடல் முடியும்போது பெருத்த கைதட்டல் விழும். அந்தப் பாட்டு இது.


    “புற்றில்வாழ் அரவுக் கஞ்சோம்
            பொய்யர்தம் மெய்யுக் கஞ்சோம்
    விற்றொழில் வேந்தர்க் கஞ்சோம்
            வெஞ்சிறை வாழ்வுக் கஞ்சோம்
    கொற்றொழில் பீரங் கிக்கும்
            கொடும்பணத் திமிர்க்கு மஞ்சோம்
    பற்றிலா ஏழை கண்ணிர்
            பார்க்ககாம் அஞ்சு வோமே!

இந்தப் பாட்டு அந்த நாளில் பம்பாய் மெயில் நாடகத்தின் தரத்தையே உயர்த்தியது.

கையெழுத்துப் பத்திரிகை

ஈரோடு முடிந்ததும் சேலம், ஆத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்றோம். ஆத்தூரில் பம்பாய் மெயில் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. பகல் நேரங்களில் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. அதைப் பயனுள்ள வழியில் செலவழிக்க விரும்பினேன். கையெழுத்துப் பத்திரிகையொன்று தொடங்கத் திட்டமிட்டேன். சில நடிக நண்பர்கள் என் யோசனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

9.12-34 இல் அறிவுச்சுடர் என்னும்பெயருடன் கையெழுத்துப் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளி வந்தது. நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களும் புனைபெயரில் கட்டுரை எழுதி என்னிடம் ரகசியமாகக் கொடுத்து விடுவார்கள். நான் அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி, பத்திரிகை முழுவதையும் என்கையாலேயே எழுதுவேன். கதை, கட்டுரை, அரசியல் சமுதாயச் சீர்திருத்தம் விகடத் துணுக்குகள், அந்தரத் தபால்கள், திருக்குறள் விளக்கம் இவற்றுடன் நாடக சம்மந்தமான அறிவுரைகளும் அறிவுச்சுடரில் இடம் பெற்றன. நடிகர்கள் உற்சாகத்தோடு எழுதினார்கள். புனைபெயர்களில் எழுதுபவர்களின் உண்மைப் பெயர்களை நான் ஒருவரிடமும் சொல்வதில்லை. எனவே எழுதுபவர்கள் யாரென்று தெரியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். வாரந்தோறும் ஞாயிறன்று தவறாமல் பத்திரிகையை வெளி பிட்டு வந்தேன். நடிகர்கள் அறிவு வளர்ச்சி பெறவும், பொது விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கட்டுரை, கதையெழுதி பழகவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில நடிகர்களும் தொழிலாளர்களும் இதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தொல்லை கொடுத்தார்கள்.

ஆத்தூர், விருத்தாசலம், பண்ணாருட்டி ஆகிய மூன்று ஊர்களிலுமாக மொத்தம் பத்து இதழ்கள் வெளிவந்தன. தம்முடைய குற்றம் குறைகளைப் பத்திரிக்கையில் எழுதுவதைச் சிலர் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. கடைசியாகப் பெரியண்ணா ஒருநாள் என்னிடம்,

“‘உன்னுடைய பத்திரிகையால் வீணாகச் சண்டை ஏற்பாடுகிறது. நீ செய்வது பயனில்லாத வேலை!” என்றார். வேறு வழியின்றிப் பத்தாவது இதழோடு அறிவுச்சுடர் நிறுத்தப்பட்டது.

சிறுவந்தாடு மாநாடு

பண்ணாருட்டியில் வசூல் இல்லை. இராமாயணம், பம்பாய். மெயில் இரு நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூலாயிற்று. பண்ணாருட்டிக்கு அருகில் பத்தாவது மைலில் சிருவந்தாடு என்னும் சிற்றுார் இருக்கிறது; மகாத்மா காந்தியடிகள் காங்கிரஸ் மாநாடுகள் நகரங்களை விட்டுச் சிற்றுார்களில் நடைபெற வேண்டுமென ஆணையிட்டிருந்தார். அதற்கிணங்கத் தமிழ் மாகாண மாநாடு முதன்முதலாகச் சிறுவந்தாடு கிராமத்தில் நடந்தது. எங்களில் சிலர் காங்கிரசில் தீவிரப் பற்றுக் கொண்டிருந்தால் சிறுவந்தாடு மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தோம். மாநாட்டுக்கு முதல் நாள் இராமாயணம் வைக்கப் பட்டிருந்தது. நாடகம் விடிய ஆறுமணிவரை நடந்தது. நாடகம் முடிந்ததும் நானும், தம்பி பகவதியும் மற்றும் சிலரும் குறுக்கு வழியில் கால்நடையாகவே புறப்பட்டுச் சிறுவந்தாடு சேர்ந்தோம். மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. எங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் பலர் மாநாட்டுக்கு வந்திருந்தால் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நான் பாரதி பாடல்களைப் பாடினேன். அன்று மாலையே பண்ணாருட்டிக்குத் திரும்பினோம்.

ராஜ சேகரன்

பண்ணாருட்டியில் புதிதாக ராஜசேகரன் நாடகம் தயாராயிற்று. இந் நாடகம் தஞ்சை என். விஸ்வநாதய்யரால் எழுதப் பெற்றது. எம். ஆர். ராதா இருந்தபோதே நடந்த எண்ணிய நாடகம் இது. நல்ல முற்போக்கான கருத்தமைந்த நாடகம். இந்நாடகத்திற்கு நான் சில பாடல்களும் எழுதினேன். காட்சிகள், உடைகள் ஒன்றும் புதிதாகத் தயாரிக்க வசதி இல்லை. என்றாலும் நாடகம் சிறப்பாக நடந்தது.நான் ராஜசேகரனாக நடித்தேன். எங்கள் குழுவில் அப்போது பிரதம பெண் வேடதாரியாக விளங்கிய பி. எஸ். திவாக்ரன் ராஜகுமாரி பத்மலோசனியாக நடித்தார். திவாகரன் நல்ல அழகும் இனிய குரலும் வாய்ந்த இளைஞர். அவருடைய தோற்றம் பெண்போலவே இருக்கும். பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மிகச் சிறந்தநடிகர், திவாகரன் இப்போது சென்னையில் ‘செக்ஸ்போன்’ என்னும் இசைக் கருவியை மிக அருமையாக வாசித்து வருகிறார், மலையாளப் படங்களுக்குச் சங்கீத டைரக்டராகவும் இருந்து வருகிறார்.

ராஜசேகரன் நாடகத்திற்கும் வசூல் இல்லை. பண்ணாருட்டியை விட்டு வேறெங்கும் போக முடியாமல் கஷ்டப்பட்டோம். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்த எங்கள் மூத்த தங்கைக்கு வரன் பார்ப்பதற்காகப் பெரியண்ணா அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிருந்தது. பாலகிருஷ்ண சாஸ்திரி, கம்பெனிக்கு மானேஜராக வந்து சேர்ந்தார்.

சாஸ்திரியின் நிருவாகம்

சாஸ்திரியார் கள்ளம் கபடு இல்லாதவர்; நேர்மையானவர்; ஆனால் எப்போதும் வாய்த்துடுக்காகப் பேசுவார். இந்தப் போக்கு கம்பெனியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோரும் அவருடன் வெறுப்போடு பழகினார்கள். இதைக் குறித்துப் பெரியண்ணாவிடம் புகார்செய்யவும் ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. எனவே எல்லோரும் பொருமிக் கொண்டு சும்மா இருந்தார்கள்.

பண்ணாருட்டியில் நாடகமும் நிறுத்தப்பட்டது கண்ணனூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து கண்ட்ராக்டர்கள், வந்து போனார்கள். பயனில்லை. சிறந்த நடிகர்கள், உயர்ந்த நாடகங்கள், ஓரளவுக்குக் காட்சியமைப்பு, உடைகள் எல்லாம் இருந்தும் வசூல் இல்லையென்றால் எவர் உள்ளந்தான் வேதனை யடையாது? பெரியண்ணா எப்போதும் சோர்ந்தபடி சிந்தனையில் இருக்கத் தொடங்கினார். இந்நிலையில் ஒரு வாரம் சென்றது. தெய்வச் செயலாக மீண்டும் மேட்டுப் பாளையம் கண்ட்ராக்டர் வந்தார். மேட்டுப்பாளையத்துக்கு ரயில் செலவு நீக்கி ஒரு மாதத்திற்கு ஆயிரத்து அறுநூற்றி இருபத்தைந்து ரூபாய்கள் தருவதாகச் சொன்னார். கம்பெனியின் ஒருமாதச் சாப்பாட்டுக்கும், சம்பளத்திற்கும் குறைந்த பட்சம் அப்போது இரண்டாயிரம் ரூபாய்கள் தேவைப்பட்டன. என்றாலும் எப்படியாவது பண்ணாருட்டியை விட்டு வெகுதூரம் போய்விட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதால் பெரியண்ணா ஒப்புக் கொண்டார். ஊருக்குப் போய் பணம் அனுப்புவதாகச் சொல்லிப்போன கண்ட்ராக்டர் சொன்னபடி பணம் அனுப்பவில்லை. ரயில் செலவுக்குப் பணம் வந்து சேர ஒருவாரம் பிடித்தது. பணம் வந்த பிறகு உள்ளுர்க் கடன்களையெல்லாம் தீர்த்துவிட்டு மேட்டுப்பாளையத்திற்குப் புறப்பட்டோம். வழியில் எத்தனையோ கஷ்டங்கள் ஏற்பட்டன.எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.

குழப்பமான சூழ்நிலை

மேட்டுப்பாளையத்தில் சுடுகாட்டின் அருகில்தான் எங்களுக்குக் குடியிருக்க இடம் கிடைத்தது. பெரியாரின் தொடர்பு ஏற்பட்டபின், பேய் பிசாசுப் பயம் போய்விட்டதால் துணிவாக இருந்தோம். பயங்கரமான மழை மேட்டுப்பாளையத்தில். கொட்டகையின் தகரம் ஒருநாள் காற்றில் பிய்த்துக்கொண்டு போய்விட்டது. நாடகங்களுக்கு வசூல் இல்லை. காண்ட்ராக்டரிடமிருந்து பணம் பெற வழியில்லை. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நடிகர்களும் தொழிலாளிகளும் அடிக்கடி கோவைக்குப் போய் வந்தார்கள். கம்பெனியின் சட்டதிட்டங்களுக்கு யாரும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. கோவையில் அப்போது ஏ. என் மருதாசலம் செட்டியார், மனோரமா பிலிம்ஸ் என்னும் படக் கம்பெனியைத் தொடங்கியிருந்தார். அவர் சதிலீலாவதியை படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதற்காகச் செட்டியார் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் கம்பெனியில் அப்போது நகைச்சுவை நடிகராக இருந்த சுந்தரமையர் எங்கள் அனுமதி இல்லாமலை செட்டியாரது படத்தில், நடிக்க முன்பணம் வாங்கியதாக அறிந்தோம். மற்றும் சில நடிகர்களும் இவ்வாறே நடந்து கொண்டார்கள். செட்டியார் எங்களையும் படத்தில் நடிக்க அழைத்தார். பெரியண்ணா இதற்கு ஒப்பவில்லை. இந்த நிலையில் காண்ட்ராக்டு முடிந்தது. உதக மண்டலத்திற்குப் போய் சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உதகமண்டலத்தின் குளிரை நான் ஒருமுறை ஏற்கனவே அனுபவித்திருந்தேன். எனவே, குளிருக்கு வேண்டிய ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த முடிவு செய்தது எனக்குத் திருப்தியளிக்கவில்லை.
-----------------

34. நீலகிரி மலை


1935 ஏப்ரல் 19ஆம் நாள் பிற்பகல் எல்லோரும் புறப்பட்டு இரவு ஏழு மணிக்கு உதகமண்டலம் என்று அழைக்கப்படும் நீலகிரிமலைக்கு வந்து சேர்ந்தோம். அதுவரை அனுபவித்திராத கடுங்குளிர் எங்களை மிகவும் வருத்தியது. இரவு நேரமானதால் எல்லோரும் கஷ்டப்பட்டார்கள். நாடகம் நடைபெறும் இடமாகிய புளு மவுண்டன் தியேட்டருக்கு அருகிலேயே கம்பெனி வீடு இருந்தது. கொட்டகையின் பின்புற வழியாகவே கம்பெனி வீட்டுக்குப் போய்விடலாம். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

முதல் நாள் இரவை எப்படியோ கழித்தோம். மறுநாள் வாடகைக்குக் கம்பளிகள் கொடுக்கும் ஒரு கடைக்குச் சென்று சில கம்பளிகளையும், உல்லன் மப்ளர்களையும், பனியன்களையும் வாங்கி வந்தார்கள். நான்கு பேருக்கு ஒரு கம்பளி வீதம் போர்த்திக் கொண்டுதான் உறங்குவது வழக்கம். அவ்வளவு கடுமையான குளிர்.

நாடகம் தொடங்கியது. முதல் நாடகம் சந்திரகாந்தா நடந்தது. நாங்கள் அதிகமான வசூலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், எதிர்பார்த்ததைவிட பரம மோசமாக இருந்தது வசூல். குளிரில் நடிப்பது சிலருக்கு மரண வேதனையாக இருந்தது. என்ன செய்வது? வேறு வழியின்றி நடித்தோம். நீலகிரி மிக அழகான பிரதேசம். அங்கு வசிப்பவர்கள் அங்குள்ள குளிருக்கேற்ற உடைகளை அணிந்து கொண்டு வாழ்கிறார்கள். வாடகைக்கு வாங்கிய உடைகள் மிகவும் கிழிந்து போனவையாதலால் வெளியே போக வர அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. தியேட்டரையும் கம்பெனி வீட்டையும் தவிர நடிகர்கள் எங்குமே போகவில்லை.

ஜீவா சொற்பொழிவு

தோழர் ஜீவானந்தம் அப்போது நீலகிரியில் வந்து தங்கி யிருந்தார். அவரும் நானும் தனியே அமர்ந்து பல்வேறு விஷயங் களைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். கம்பெனியின் கஷ்டமான நிலையைப்பற்றி நான் அடிக்கடி வேதனைப்படுவேன். அப்போ தெல்லாம் ஜீவானந்தம் எனக்கு ஆறுதல் கூறித் தேற்றுவார். ஒரு நாள் சமூகச் சீர்திருத்த சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் நடை பெறுவதாகக் கூறி, என்னையும் தம்பி பகவதியையும் அழைத்துச் சென்றார். கூட்டம் ஒரு வீட்டில் நடந்தது. அந்த வீட்டின் முன் புறக் கூடத்தில் சுமார் ஐம்பதுபேர் உட்கார இடமிருந்தது. ஆனால் வந்திருந்தவர்கள் ஐந்தே பேர்கள்தாம். ஜீவானந்தம், தோழர் ஆர். கிஸன், அவரது மனைவி, நான், பகவதி-எங்களைத் தவிர யாருமே வரவில்லை. நான் ஜீவாவைப் பார்த்துச் சிரித்தேன். அவர் அதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தோன்றவில்லை. என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். பாட்டு முடிந்ததும் ஜீவா பேசத் தொடங்கினார். அவருடைய கர்ஜனையைக் கேட்டு, மற்றும் நான்கு பேர் வந்து உட்கார்ந்தார்கள். ஆகச்சொற்பொழிவாளர் உட்பட ஒன்பது பேர். இந்த மாபெரும் கூட்டத்தில் தோழர் ஜீவா, சமுக சீர்திருத்தத்தைப் பற்றி ஒன்றரை மணி நேரம் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். அவருடைய நெஞ்சுத் துணிவை நான் பாராட்டினேன்.

ஒடிவிடத் தீர்மானித்தேன்

நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. ஒரு நாள் பம்பாய் மெயில் நாடகம். சுந்தரம் கிணற்றுக்குள்ளிருந்து தன் தம்பி கோபலனத் தூக்கி வரும் காட்சியில் இருவரும் மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். நான் வெந்நீர் வேண்டு மென்று கேட்டிருந்தேன். ஆனால், காட்சியில் நான் கிணற்றி லிருந்து குதித்தபோது கீழே புதைக்கப்பட்டிருந்த டிரம்மிள் ஜில்லென்ற தண்ணிர் தான் இருந்தது. கால்களெல்லாம் வெட வெடவென்று நடுங்குவதுபோல் நடிக்க வேண்டும். ஆனால் இப்போது உண்மையாகவே கைகால்கள் நடுங்கின. சுந்தரம் கிணற்றில் குதித்ததும் கிணற்றின் மேற்புறத்தைப் பெரிய பலகையால் மூடி விடுகிறார்கள் எதிரிகள். சுந்தரம் தம்பியை முதுகில் கட்டிக்கொண்டு மேலே வருகிறான். வழி பலகையால் மூடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். பின் உள்ளிருந்தே கிணற்றின் சுவரை இடித்து வழியுண்டாக்கி, அதன் வழியாக வெளியே வருகிறான். மிகவும் அற்புதமான காட்சி இது. இத்தக் காட்சி பதினைந்து நிமிடங்கள் நடைபெறும். என்ன செய்வது? நேரம் இரவு பன்னிரெண்டு மணி. தாங்க முடியாத குளிர். ஐஸ் போன்றிருந்த தண்ணிரையே மேலே ஊற்றிக் கொண்டு நடித்தேன். நானும், கோபாலனாக நடித்த டி. ஏ. காசிநாதனும் குளிர் தாங்க முடியாமல் அவஸ்தைப்படுவதைச் சபையோர் பார்த்து அனுதாபப்பட்டது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

பம்பாய் மெயில் முடிந்த மறுநாள் தனியே பூங்காவிற்குச் சென்றேன். கம்பெனியின் நிலைமையை எண்ணிப் பார்த்தேன். மூலதனம் எதுவும் இல்லாமல் மேலும் கம்பெனியை நடத்திக் கொண்டு போவது சரியெனத் தோன்றவில்லை. உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து உலவினேன். பைத்தியம் பிடித்தவனைப் போலப் பூங்காவெங்கும் சுற்றினேன். ஒய்வில்லாது உழைத்தும், உடுத்திக் கொள்ளச் சரியான உடைகளும் இல்லாத நிலை என்னை மிகவும் துன்புறுத்தியது. சகோதரர்களை விட்டு எங்கேயாவது ஒடிப்போய்விட வேண்டும் என்ற உணர்ச்சி என்னை உந்தித் தள்ளியது. நீண்ட நேரம் யோசனை செய்தேன். இறுதியாக, ஓடிவிடுவது என்ற முடிவுக்கே வந்தேன்.

அன்பரின் அறிவுரை

திடீரென்று ஜீவானந்தம் வந்தார். அவரிடம் நான் என் மன வேதனையைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே பேசினேன். ஜீவா அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேசினார். தேசத்திற்காகப் பல இன்னல்களை அனுபவித்த வீரர்களின் கதைகள் சிலவற்றைச் சொன்னார். அந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகு, என் முடிவு குலைந்தது. உள்ளம் உறுதிப்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தீரத்தோடு போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது. தோழர் ஜீவாவுக்கு ஆண்டவன் இருப்பதாக நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப் போகத் தீர்மானித்த எனக்கு, அறிவுரை கூறித் திருத்த ஆண்டவனே ஜீவாவை அனுப்பியதாக எண்ணினேன் நான்.

நீலகிரியில் வசூல் இல்லாமலே ஒருமாத காலம் நாடகம் நடந்தது. மீண்டும் மேட்டுப்பாளையம் வந்தோம். குழப்ப நிலை திரவில்லை. மயில்ராவணன் நாடகத்தைப் புதிய முறையில் எழுதிச் சிறப்பாகத் தயாரித்தார் சின்னண்ணா. நாடகம் அருமையாக அமைந்தது. வசூல்தான் இல்லை. அருகிலுள்ள கோபிச்செட்டிப் பாளையம் போவதென்று முடிவு செய்தார்கள். பஸ்ஸிலேயே கோபிச்செட்டிப்பாளையம் வந்து சேர்ந்தோம்.

மயில்ராவணன் தகராறு

கோபிச்செட்டிப் பாளையத்தில் மயில்ராவணனுக்கும், பம்பாய் மெயிலுக்கும் நல்ல வசூலாயிற்று. மயில்ராவணன் நாடகத்தில் எம். ஆர். சாமிநாதன் காளிகோயில் அர்ச்சகராக நடிப்பார். கடைசியாக ஆஞ்சநேயர், காளி சிலைக்குப் பின்னல் மறைந்து கொண்டு பேசும் கட்டத்தில், எம். ஆர். சாமிநாதன் உள்ளே போகப் பயந்து, நான் பிராமணனே இல்லையென்று பூணூலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஓடிப் போவார். இந்தக் காட்சியில் அவர் பேசும் பேச்சைக் கோபிச்செட்டிப்பாளையத்திலுள்ள சில பிராமணர்கள் வெறுத்தார்கள். நாடக அமைப்பில் இந்தக் காட்சியில் தவறு ஒன்றும் இல்லாததால் நாங்கள் மற்றவர்களுடைய வெறுப்பை லட்சியம் செய்யவில்லை.

மயில்ராவணன் நாடகம் முடிந்த மறுநாள் வழக்கம்போல் எல்லோரும் வாய்க்காலுக்குக் குளிக்கப் போனோம். அங்கே பிராமணர்களுக்கென்று தனியாக ஒரு படித்துறை இருந்தது. அந்தப் படித்துறையிலும் சில நடிகர்கள் குளித்தார்கள். அதற்கு முன்பெல்லாம் ஒன்றும் பேசாத சில பிராமணர்கள், அன்று பிராமணர்கள் படித்துறையில் நாங்கள் குளிக்கக் கூடாதென்று ஆட்சேபித்தார்கள். எம். ஆர். சாமிநாதன் குறும்புப் பேர்வழி. அவர் படித்துறையை விட்டுத் தண்ணிரில் இறங்கி நின்று கொண்டு குளித்தார். படித்துறைதானே பிராமணர்களுக்குச் சொந்தம்? வாய்க்கால் எல்லாருக்கும் பொதுதானே? பிராமணர்கள் குளிப்பதற்கு முன்புறம்போய் வாய்க்காலில் அவர் நின்று கொண்டார். பிராமணர்கள் முணுமுணுத்தார்கள். அன்று மாலை நாங்கள் வழக்கம்போல் வெளியே போய்விட்டு வரும்போது அக்ரஹாரத்தில் ஏதோ கூட்டம் நடப்பதைப் பார்த்தோம். பெஞ்சின்மீது நின்று ஒரு வைதீகப் பிராமணர் பேசிக் கொண்டிருந்தார். மயில்ராவணன் நாடகத்தில் நாங்கள் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகவும், வாய்க்கால் படித்துறையில் அக்ரமம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார் நடத்தும் நாடகங்களுக்குப் பிராமணர்கள் போகக்கூடாதென்றும் பிரசங்கம் செய்தார். நாங்கள் அவருடைய அறியாமையை எண்ணிச் சிரித்தோம். இந்தப் பிரசங்கத்திற்குப் பிறகு மயில் ராவணனுக்கு அதிக வசூலாயிற்று. பக்கத்திலுள்ள சத்தியமங்கலத்திலும் மயில் ராவணன் போடவேண்டுமென்று அழைப்பு வந்தது. அங்கும் ஸ்பெஷலாகப் போய்ச் சில நாடகங்கள் நடத்திவிட்டு வந்தோம்.
------------------

35. மேனகா திரைப்படம்


கோபிச்செட்டிப்பாளைத்தில் நாடகங்கள் நல்ல வசூலில் நடந்துகொண்டிருந்தபோது, திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீசார் வந்தார்கள். நாங்கள் நடத்தி வந்த மேனகா என்னும் சமூக நாடகத்தைத்திரைப்பட மெடுக்க விரும்பினார்கள். எங்கள் கம்பெனியில் பெயரும் படக் கம்பெனியின் பெயரும் ஒன்றா யிருந்தது. இது, இரு கம்பெனிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் காட்டியது. நாடகங்களுக்குச் சுமாராக வசூலாகி வரும் சமயத்தில் திடீரென்று நிறுத்திவிட்டுத் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதென்றால் மனத்திற்குக் கஷ்டமாகத்தானிருந்தது. என்றாலும் எங்கள் உருவம் பாடுவதையும், பேசுவதையும், நடிப்பதையும் நாங்களே பார்த்து மகிழக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை இழந்துவிட விரும்பவில்லை. எனவே ஒப்புக்கொண்டோம். ஒப்பந்தம் முடிவாயிற்று. எங்கள் நால்வருக்கும், குழுவினார் அனைவருக்குமாகப் பதினாலாயிரம் ரூபாய்கள் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. கோபிச்செட்டிப் பாளையத்தில் சமூகச் சீர்திருத்தச் சங்கத்திற்காகப் பெரியார் ஈ. வெ. ரா. தலைமையில் பம்பாய் மெயில் நடைபெற்றது. பெரியார் நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். நல்ல வசூலும் ஆயிற்று. ஏற்கனவே எங்கள் மேல் கோபம் கொண்டிருந்த பிராமணர்களுக்கு இந்த நாடக நிகழ்ச்சி மேலும் கோபத்தை மூட்டியது. கோபி முடிந்ததும் ஈரோடு வந்து சேர்ந்தோம்.

ஈரோட்டில் எம். ஆர். சாமிநாதன் ஜம்புலிங்கம் என்னும் ஒரு சமூக நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை அவசரமாகத் தயாரித்து அரங்கேற்றினோம். இது விதவைக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சிறந்த நாடகம். தோழர் ஜீவானந்தம் ‘பெண்ணாரிமைக் கீதங்கள்’ என்னும் நூல் ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் “கன்னி விதவைத் துயர் நினைந்திடக் கண் கலங்கிடுமே” என்னும் ஒரு பாடலை எழுதியிருந்தார். அப்பாடல் ஜம்புலிங்கம் நாடகத்திற்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது. நாடகத்தில் அந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டோம். எல்லோரும் பாராட்டினார்கள். நாங்கள் பம்பாய் புறப்படவிருப்பதை யொட்டிப் பல நண்பர்கள் விருந்துகள் நடத்தி வாழ்த்தினார்கள். பெரியாரும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். சமூகச் சீர்திருத்த சங்கத்திற்கு நாடகம் நடத்திக் கொடுத்ததற்காகப் பெரியார் ஒரு பாராட்டுக் கூட்டமும் நடத்தினார். எல்லோரும் அதிசயப்படும் படும்படியாக அவர் அந்தக் கூட்டத்தில் எனக்கு ஒரு தங்கப்பதக்கமும் பரிசளித்தார். இந்தப் பதக்கம் ஒரு பவுனில் தமது சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது என்பதைப் பெரியார் அறிவித்தபோது எல்லோரும் வியப்படைந்தார்கள். பெரியார் அவர்களை நன்கறிந்தவர்கள் அவரிடமிருந்து பரிசு பெறுவது எவ்வளவு பெரிய காரியம் என்பதை நன்கு உணர்வார்கள். அதனால்தான் இதை இங்கே குறிப்பிட்டேன்.

1935, செப்டெம்பர், 2ஆம் தேதி எல்லோரும் மேனகா படப்பிடிப்பிற்காகப் பம்பாய்க்குப் பயணமானோம்.

புகைவண்டி பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சியின் தாண்டவம். ஆங்கிலப் படங்களைக் கண்டு அதிசயித்ததும், வட இந்தியப் படங்களைக் கண்டு மகிழ்ந்ததும், கடைசியாக நம் தமிழிலேயே படம் பேசுவதைக் கண்டு பிரமித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக என் மனக் கண்முன் தோன்றி மறைந்தன. ரயில் வண்டியே அல்லோல கல்லோலப்பட்டது. எல்லோருடைய நாவிலும் சினிமாப் பேச்சுதான், எடிபோலோவிலிருந்து எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிப்புவரை எங்கள் நடிகர்கள் பேசித் தீர்த்துவிட்டார்கள். நான் மட்டும் மற்றவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இன்பக் கனவுகளில் ஆழ்ந்திருந்தேன். நமது படத்தை, நமது பேச்சை, நமதுபாட்டை நாமே சிலமாதங்களில் சினிமாத் திரையில் பார்க்கவும் கேட்கவும் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி என் உள்ளம் பூரித்தது.

இவர்தானம்மா உன் கணவர்!

ரெயிச்சூர் ஜங்ஷனில் ஸ்ரீஷண்முகானந்தா டாக்கீசாரின் பங்குதாரர்களில் ஒருவரான திரு, எஸ். கே. மொய்தீன் அவர்கள் பெண் நடிகையர் இருந்த பெட்டிக்கு, எங்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எம். எஸ். விஜயாளுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவர் என்னைச் சுட்டிக் சுாட்டி கே. டி. ருக்மணியிடம், “இவர்தானம்மா உன் கணவர்” என்றார். கே. டி. ருக்மணி சளைக்கவில்லை. அவர் என் தம்பி பகவதியைச் சுட்டிக்காட்டி எம். எஸ். விஜயாளிடம், “இவர்தான் உன் கணவர்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேனகா படத்தில் நூர்ஜஹானக நடிக்கும் கே. டி. ருக்மணியின் கணவனாக நானும், மேனகாவும் நடிக்கும் எம்.எஸ். விஜயாளின் கணவனாகத் தம்பி பகவதியும் நடிக்க ஏற்பாடு செய்திருந்ததை யொட்டி அவர்கள் இவ்வாறு தமாஷாகப் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இளமங்கையர் கணவர் என்ற பதத்தை இவ்வளவு தாராளமாக உபயோகித்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. சில மணி நேரம் அந்த வண்டியில் இருந்துவிட்டுப் திரும்பியவுடன் என் மகிழ்ச்சியெல்லாம் எங்கோ பறந்தோடி விட்டது. மனம் பலவிதமாகக் குழப்பமுற்றது.

இரும்பும் காந்தமும்

ஐந்தாம் தேதி காலை பம்பாய் தாதர் ரயில் நிலையத்தில் இறங்கும்வரை இதைப்பற்றிய நினைவுதான். திரைப்படம் முடிந்து திரும்புவதற்குள், அப்சரஸ் திலோத்தமையால் சகோதரர்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்ட சுந்தோபசுந்தார் கதி எங்களுக்கு நேராதிருக்க வேண்டுமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டேன். அந்தச் சமயம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களைத் தவிர எங்களில் எவருக்கும் மணமாகவில்லை. நாங்களும் எங்கள் குழுவின் ஏனைய நடிகர்களும் துள்ளித் திரியும் பருவமுடைய வாலிபர்கள்! வந்திருக்கும் நடிகையரோ இளமையும் எழிலும் குலுங்க நிற்கும் மங்கையர்! இந்நிலையிலே “இரும்பும் காத்தமும் பொருந்தும் தன்மைபோல்” விபரீத விளைவுகள் ஏற்படுவது இயற்கையல்லவா? இந்தப் பயம் அண்ணாவுக்கும் ஏற்பட்டிருந்தது என்பது சினிமாக் கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்தது. தாதரில் ஸ்டுடியோவின் அருகிலேயே ஒரு பெரிய பங்களா ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பெண்களுக்கு மாடி மீதும். எங்களுக்குக் கீழேயும் இடம் ஒதுக்கப் பட்டது. வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனேயே எங்கள் பெரியண்ணா, “எல்லோருக்கும் சொல்கிறேன். எவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாடிக்கு அனுமதியின்றிப் போகக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டார்.
----------------

36. டைரக்டர் ராஜா சாண்டோ


மேனகா படத்தின் டைரெக்டர் ராஜாசாண்டோ அவர்களுடைய ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் பற்றி நாங்கள் பலவிதமாகக் கற்பனை செய்து வைத்திருந்தோம். அவற்றிற் கெல்லாம் மாறாக ராஜாசாண்டோ, ஒரு குடையைக் கையில் பிடித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக நடத்தே கம்பெனி வீட்டிற்கு வந்தவுடன் உண்மையிலேயே எங்களுக்குப் பெரும் வியப்புண்டாயிற்று. பல ஆண்டுகளாக வடநாட்டிலேயே இருக்கிறாரே, தமிழ் மொழியையே மறந்து, ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருப்பாரோவென எங்களிற்சிலர் ஐயுற்றிருந்தோம். முதல் நாள் சந்திப்பிலேயே அந்தச் சந்தேகத்தை நீக்கிவிட்டார் ராஜா. தமிழ் மொழியை மறவாதது மட்டுமன்று. தமிழிலே அருமையாக எழுதவும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழ் வரிவடிவ இலக்கணம், நன்னூல், நிகண்டு முதலியவற்றையெல்லாம் அவர் மனப்பாடம் செய்திருந்தது, எங்களுக்கு ஆச்சிரியமாயிருந்தது. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக வடநாட்டிலேயே வசித்து இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலேயே பேசிப் பழகிக் கொண்டிருந்த ராஜாவுக்குத் தமிழ் நாட்டுப் பழங் கிழவிகள் சொல்லக்கூடிய சாதாரணப் பழமொழிகளும் மறக்காமல் இருந்தன. நடிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ராஜாவுக்கு இணையான டைரக்டர் இந்திய நாட்டிலேயே இல்லையென்பது அன்று வடநாட்டாரும் ஒப்புக்கொண்ட உண்மை. ராஜா பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற நடிகப் பேரரசன். அவரிடம் பயிற்சி பெறும் போது, நடிப்பவன் சலிப்படைவானேயன்றிச் சொல்லிக் கொடுக்கும் ராஜா சிறிதும் சலிப்படைய மாட்டார்.

ஆண்களே பெண் வேடம்

ஏழாம் தேதி எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பட்டது. மேனகா, நூர்ஜஹானைத் தவிர மற்றும் சில பெண் பாத்திரங்கள் இருந்தார்கள். தாசி கமலம், கோமளம், கனகம்மா ஆகிய வேடங்களைப் போடுவதற்கு உடன் பிறந்த சகோதரியர் மூன்று பேர் வந்திருந்தார்கள். பிராமண விதவையாகிய பெருந்தேவி மேனகாவில் ஒரு முக்கியமான பாத்திரம். அந்த, வேடத்தை நாடகத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி போடுவது வழக்கம். தலையை மொட்டையடித்துக் கொண்ட பிராமணப் பெண்கள் யாரும் அந்த நாளில் சினிமாத் துறைக்கு வரச் சம்மதிக்கவில்லை. கடைசியில் சினிமாவிலும் சின்னண்ணாவே பெருந்தேவி வேடத்தைப் போட நேர்ந்தது. வேலையாள் ரங்கராஜூவின் மனைவியும் மகளும், எங்கள் குழுவில் அப்போது பிரதான நடிகர்களாக இருந்த டி.என்.சுப்பையாவும், பி.எஸ். திவாகரனும் போடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேனகா படம் வெளிவந்தபோது, அதற்கு ஆனந்தவிகடனில் விமர்சனம் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சின்னண்ணாவின் பெண் வேட நடிப்பைப் பிரமாதமாகப் புகழ்ந்து எழுதி இருந்ததோடு, “பெருந்தேவியாக நடிப்பவர் ஒரு ஆண் மகன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். பெரியண்ணா டிப்டி கலைக்டராக நடித்தார். நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம் தாசில்தார் தாந்தோனிராயராகவும், பிரண்டு ராமசாமி, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி, நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு முதலியோர் பைத்தியக்காரர்களாகவும் நடித்தார்கள். மேனகா பட ஒப்பந்தம் முடிந்த அன்றே சாமா ஐயராக நடிப்பதற்கு என். எஸ். கிருஷ்ணனையே அழைத்து வர வேண்டுமென்று பெரி யண்ணா கூறினார். அதன்படி என்.எஸ். கிருஷ்ணனும் எங்களோடு வந்திருந்தார். அவரே ஐயராகநடித்தார். மற்றும் எங்கள் குழுவி அலுள்ள பெரியவர்கள் பல சில்லரை வேடங்களில் நடித்தார்கள்.

பாட்டுத் தகராறு

மேனகா நாங்கள் நடித்த முதல் திரைப்படமாதலால் அந்தச் செய்திகள் மிகச் சுவையாக இருக்கும். அதனால்தான் சுருக்கமாகச் சொல்லாமல் சற்று விரிவாகவே எழுதுகிறேன். அப்பப்பா! பாடல்களுக்கு மெட்டு போடும் விஷயமாக ஏற்பட்ட தகராறு இருக்கிறதே, அதற்கே ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டும். எவ்வளவு ரசமான விஷயம்! பாட்டு வாத்தியார் பூமிபாலகதாஸ் பெரும் புலவர். அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பாட்டுக்கு மெட்டு அமைப்பதா, மெட்டுக்குப் பாட்டு அமைப்பதா என்று நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கடைசியாக மெட்டுக்கே பாட்டு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். புலவர் பூமிபாலகதாஸ் கொஞ்சம் சிரமபட்டார். சின்னண்ணா தான் சங்கீத டைரக்டர். தமிழிலேயுள்ள இசைப் பாடல்களைப்போல் ஒரு வரம்புக்குள் அடங்காத இந்தி மெட்டுகளிலே எதுகை மோனை முதலிய இலக்கண விதிகளுக்கு உட்பட்டுப் பாடல்கள் புனைவதென்றால் எளிதான காரியமா? அதிலும் இசைப்பயிற்சியில்லாத புலவர் என்ன செய்வார்? இந்தத் தொந்தரவுகளிலெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் என். எஸ். கிருஷ்ணன் அவர் பாத்திரத்துக்குரிய இரண்டு பாடல்களையும் அவரே போட்டுக் கொண்டார். எனக்குரிய மூன்று பாடல்களையும் நானே புலவருடன் இருந்து புனைந்து வாங்கிக்கொண்டேன்.

தாசி கமலமாக நடிக்க வந்திருந்த அம்மையார், அவர் பாடவேண்டிய பாட்டிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தகராறு செய்யத் தொடங்கினார்.

    ஆசை யென்பது அளவு மீறியே
    ஆஹா வெகு மோகமானேன்
    அணைய வாரும் துரையே கீரும்

என்பது அவரது பாட்டின் முதலடி. இதில் ‘அணைய வாரும் துரையே’ என்ற வரியைப் பாட முடியாதென்று அம்மையார் மறுத்துவிட்டார். பாட்டு வாத்தியாரோ அந்தவரியை மாற்றவே முடியாதென்று கூறி விட்டார். தகராறு முற்றியது. கடைசியில் சின்னண்ணா அவர்கள் ‘அணைய வாரும் துரையே’ என்பதை ‘அருகில் வாரும் துரையே’ என்று மாற்றிக்கொடுத்தார். இதைப் போன்ற சில சிக்கல்களுக்கிடையே பாட்டுப் போடும் படலம் முடிந்தது.

சாமிநாதன் துரதிர்ஷ்டம்

ஒத்திகை ஆரம்பமாயிற்று. முதல் நாள் எம்.ஆர்.சாமிநாதன் நடிக்க வேண்டிய காட்சிகள். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா விஷயங்களைத் தெளிவாக விளக்கிப் பச்சைக் குழந்தைகளுக்குச் சொல்லுவது போலப் பன்முறை சொன்னார். சாமிநாதன் நல்ல கற்பனா சக்தியுள்ள மிகச்சிறந்த நடிகர்தாம். என்றாலும் ஒத்திகையில் பூரணமாக நடிப்பதில்லை. எனவே ராஜா அவரை நடிக்கத் தெரியாதவர் என்று முடிவு கட்டி விட்டார். சாமிநாதனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி நாங்கள் வருத்தப்பட்டோம். பிறகு ராஜாவுக்கு ஏற்பட்ட அந்த எண்ணத்தை மாற்ற எவ்வளவோ முயன்றோம். கதையில் வரும் ரங்கராஜு பாத்திரத்தை ராஜா பிரமாதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தார். சாமிநாதன் ஒத்திகையில் நடித்ததைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் கவலையாகப் போய் விட்டது, “இந்தப் பாத்திரத்தைப் போட வேறு யாரும் இல்லையா?” என்று வெளிப் படையாகக் கேட்டது எங்களைத் துன்புறுத்தியது. நான் சாமி நாதனுக்குச் சமாதானம் கூறி, நடிக்கச் செய்தேன். ஒத்திகையில் சாமிநாதனுக்கு ஏற்பட்ட இந்த விபத்தைப் பார்த்ததும் நான் கொஞ்சம் விழித்துக் கொண்டேன். ஒத்திகையிலேயே முழுத்திறமையையும் காட்டி, ‘சபாஷ்’ பெற வேண்டுமென்று முடிவு கட்டி வைத்திருந்தேன். மறுநாளே என் ஒத்திகை.

காதல் சிரிப்பு

நைனா முகம்மது நூர்ஜஹான் காதல் காட்சி. நான் கே.டி. ருக்மணியோடு நடிக்க வேண்டிய சுவையான கட்டம், பெண் வேடத்தில் நிற்கும் ஆண்களோடுதான் நான் நடித்திருக்கிறேன். பருவப் பெண்களோடு காதல் காட்சியில் நடிப்பதென்பது அன்று தான் எனக்கு முதல் அனுபவம். வந்தது முதல் நான் மாடிக்குப் போகவும் இல்லை, பெண்கள் எவருடனும் பேசவும் இல்லை. இந்த நிலையிலே ஒத்திகை தொடங்கியது.

நூர்ஜஹான் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நைனா முகம்மது விரைந்து வந்து, அவள் முகவாய்க்கட்டையைப் பிடித்துத் தன்பக்கம் திருப்பிப் பேச வேண்டும்.

ராஜா இரண்டு முறை நடித்துக் காண்பித்தார். எனக்கு என்னவோ போலிருந்தது. ‘பெண்ணின் மீது கை வைத்துத் தொட்டு நடிக்க வேண்டிய இந்த எழவை எல்லாம் ஸ்டுடியோவில் படம் பிடிக்கும் போது வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று ராஜாவை மனத்திற்குள்ளாகவே சபித்தேன். பட முதலாளிகளில் ஒருவரான எஸ். கே. மொய்தீன் எதிரில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். என் நண்பர்கள், சகோதரர்கள் எல்லாரும் எதிரே வீற்றிருந்தர்கள். எல்லோருடைய கண்களும் என்மீதே பதிந்திருந்தன. எனக்கோ ஒரே கூச்சம். ராஜா ‘உம் ரைட்’ என்றார். நானும் மனதைத் திடப் படுத்திக்கொண்டு அவர் நடித்துக் காண்பித்தவாறே நடிக்க முயன்றேன். ருக்மணியின் முகவாய்க்கட்டையைப் பிடித்துத்திருப்பினேன். எங்கள் இருவருடைய கண்களும் சந்தித்தன. அவ்வளவுதான். ருக்குமணி சிரிக்கத் தொடங்கினார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் அந்தச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ருக்குமணிக்கும் அதே நிலைதான். அவருடைய முகம் நாணத்தால் சிவந்துவிட்டது. நல்ல வேளையாக அன்று பெரியண்ணா மட்டும் இல்லை. ராஜா இரண்டுமுறை கோபித்துப் பார்த்தார், நாங்களும் சிரிக்காமல் நடிக்க ஆன மட்டும் முயன்றோம். ஒன்றும் பலிக்கவில்லை. நாலைந்து முறை இவ்வாறு எங்கள் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். கோபித்தும் பயனில்லாததைக் கண்ட ராஜாவும் சிரித்து விட்டார். இவ்வாறு அன்றைய ஒத்திகை சிரிப்பிலேயே முடிந்தது. விஷயம் பெரியண்ணா காதுக்கு எட்டியதும் மிகவும் கோபப்பட்டார். ‘ஏன் அப்படிச் சிரித்தோம்?’ என்பது எனக்கே புரியவில்லை. “இதுதான் காதல் சிரிப்பு” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.

காப்பியடிக்காதே!

மறுநாள் மிகத் துணிவோடு ஒத்திகையில் நடித்தேன். ராஜா எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அப்படியே நடித்தேன். உடனே ராஜா கலகலவென்று சிரித்துவிட்டார்.

“நான் செய்வதை அப்படியே காப்பியடிக்காதே. அது நடிப்பல்ல. சொல்லுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு, அந்தக் கருத்தை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, உனக்கு இயற்கையாக எப்படி வருகிறதோ அப்படிச்செய். ஒவ்வொருவரும் அவர்களின் உடல் அமைப்பிற்கும், அங்க அசைவுகளுக்கும் ஏற்றவாறு தான் நடிக்க வேண்டும். ஒரு வரைப் பார்த்துக் காப்பியடிப்பது அவரவர்க்கு உண்டான இயற்கை நடிப்பைக் கெடுத்துவிடும்” என்றார்.

ராஜாவின் இந்த அறிவுரை நான் நடிப்புத் துறையில் வளர்ச்சிப் பெறப் பெருந் தூண்டுகோலாக இருந்தது.

அந்தநாளில் பம்பாய் ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் நாங்கள் தங்கிய தெருவிலேயேதான் இருந்தன. பேசாப் படத்திலேயும், பேசும் படத்திலேயும் நாங்கள் கண்ட பல நடிகர்கள் எங்கள் கண்களிலே தென்பட்டார்கள். பில்லிமோரியாவையும், ஜால்மெர்ச்சென்டையும், பேசாப் படக் கத்திச்சண்டை வீரர்களான விட்டல் பச்சு முதலியோரையும் நேரில் கண்டபோது எங்களுக்கு ஒரே குதுரகலமாய் இருந்தது.

தலையும் மீசையும் தப்பியது

முதன்முதலாக நான் வேடம் புனைய வேண்டிய நாள் வந்தது. ராஜா காலையிலேயே நாவிதரை அழைத்து என் தலையை கிராப், செய்ய வேண்டிய மாதிரியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு ‘மேக்கப்’ அறையில் நான் வேடம் புனைந்து கொண்டிருந்த போது அவர் வந்து பார்த்தார். கிராப் செய்திருந்த முறை அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. கோபத்துடன் நாவிதரை வரச்சொன்னார். அந்தச் சமயத்தில் நாவிதர் வருவது சாத்திய மில்லையெனத் தெரிந்தது. “கொண்டாடா கத்தரிக்கோலை” என்றதும் எனக்குக் குலை நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. கத்தரிக் கோல் வந்தது. எனக்குக் ‘கிராப்’ வெட்டத் தொடங்கி விட்டார் ராஜா. எங்கள் நடிகர்கள் சிரிப்பை அடங்கிக் கொண்டு மெளனமாய் நின்றார்கள். ஒருவாறு தலையலங்காரம் முடித்தது. என் முகத்தைப் பார்க்க எனக்கே கோரமாக இருந்தது. மீசை அடிக்கடி ஒட்ட வேண்டிய கஷ்டத்தை உத்தேசித்து, பம்பாய் சென்றதும் நான் மீசை வளர்த்துக் கொண்டேன். சிகையலங்காரத்தை முடித்ததும் ராஜாவின் கண்கள் என் மீசை மீது விழுந்தன. அதிலும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. மீசையையும் திருத்த ஆரம்பித்தார். கத்தரிக்கோலை மூக்கருகில் கொண்டுவந்தார். “அசையாமல் இரு” என்றார். மாற்றி மாற்றி சரிபார்த்தார். இரு புறமும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே போனார். இறுதியாகக் குரங்கு அப்பம் பங்கு வைத்தகதையாய் ஒட்டுமீசை வைக்கவேண்டி வருமோ என்று நான் பயந்தேன். என் அதிர்ஷ்டம் அப்படி ஏற்படவில்லை. முன்பொரு நாள் இதே மாதிரி நாவிதர் இல்லாத சமயத்தில் எங்கள் நடிகர் ஒருவருக்கு ஸ்டுடியோவில் உள்ள வறட்டுக் கத்தியால் ராஜா சவரம் செய்ய முனைந்தபோது எங்களுக்கெல்லாம் பயமாக இருந்தது. அந்த மாதிரி ஒருநிலை எனக்கு ஏற்படாததை எண்ணி உள்ளுர மகிழ்ச்சி யடைந்தேன்.
----------------

37. முத்தமிடும் காட்சி


நானும் ருக்மணியும் நடிக்க வேண்டிய காதல் காட்சி வந்த போது ஒத்திகையை நினைத்து என் உள்ளம் வெட்கத்தால் குன்றியது. காதல் கட்டம் என்றால் எப்படி?... அன்றுவரை நான் கேள்விப்பட்டிராத முறையில் புது மாதிரியாகக் காதல் செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. நான் ருக்மணியை ஒரு கையால் அணைத்தபடி அவருடைய வலது கையிலே முத்தம் கொடுக்க வேண்டும். எப்படி? சாதாரண முத்தமா? கைவிரல்களிலிருந்து தொடங்கித் தோள் வரையில் முத்தமழை பொழிந்த கொண்டே போகவேண்டும். சரியாக ஒரு டசன் முத்தங்கள்!... கூச்சத்தால் என் உயிரே போய்விடும் போலிருந்தது. ராஜா இதை நடித்தும் காண்பித்தார். நானும் ஒரு வகையாக நடிக்க முயன்றேன். அதிகமாக வெட்கப்படுவதைக் கண்ட ராஜா, சிரித்துக் கொண்டே படமுதலாளிகளில் ஒருவரான திரு எம். சோமசுந்தரம் அவர்களை நோக்கி,

“என்ன சோமு, இந்தப் பயல் சுத்தப் பேடியாக இருக்கிறான். சொந்தப் பெண்டாட்டியிடத்திலேயே இப்படிக் கூச்சப் படுகிறானே, அப்புறம் அன்னியன் மனைவியான மேனகாவை எப்படி பலாத்காரம் பண்ணப் டோகிறான்?” என்று கூறினார். எனக்கோ மானம் போயிற்று! ஆத்திரம் ஆத்திரமாகவும் வந்தது. எப்படியோ நடித்தேன். எனக்கும் குக்மணிக்கும் உள்ள காதல் காட்சி இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாம் நாள் புகைப்படம் பிடிப்பதற்காக எங்கள் இருவரையும் ‘லவ்போஸ்’ கொடுத்து நிறுத்தினார் ராஜா. அவர் நிறுத்தியபடி நான் ருக்மணியின் இடுப்பை அணைத்தவாறு நின்றேன். மின்சார விளக்குகளைப் போட்டுச் சரிசெய்யச் சில நிமிடங்கள் ஆயின. எவ்வளவு நாழிதான் இந்தக் கோலத்தில் நிற்பது? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஒத்திகையில் வந்த சிரிப்பு மீண்டும் தலையாட்டும்போல் தோன்றியது. கொஞ்சம் விலகி நின்று கொண்டேன். ‘ரெடி’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிய ராஜா, நான் சற்று விலகி நிற்பதைக் கண்டு அருகில் வந்து எங்கள் இருவரையும் பிடித்துச் சேர்த்து வைத்துவிட்டு, பட முதலாளி எஸ். கே. அவர்களை நோக்கி, நல்ல பையன்களைப் பிடித்துக் கொண்டு வந்தீர்களேயா!... அழகான இந்தப் பெண்ணை அணைக்கத் தெரியாமல் முழிக்கிறானே! ... என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார். இப்படியாக என் சொந்த மனைவியிடம் காதல் செய்யும் படலம் ஒருவாறு முடிந்தது. அடுத்தது இன்றாெருவன் மனைவியைப் பலாத்காரம் செய்யும் படலம். சொந்த மனைவியிடமே காதல் செய்யக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த நான், இன்னொருவன் மனைவியைத் தூக்கிக் கொண்டுவந்து எப்படித்தான் பலாத்காரம் செய்வதாக நடிக்கப் போகிறேனோ என்ற டைரக்டரின் திருவாக்குப்படி விழித்துக் கொண்டிருந்தேன்.

பலாத்காரக் காட்சி

நைனமுகம்மது மேனகாவை எட்டிப் பிடிக்கப் போகும் பொழுது மேனகா அவனை ஆத்திரத்தோடு கீழே தள்ளுவதாக ஒரு கட்டம். இது எங்கள் நாடகக்தில் இல்லாதது. மேனகாவாக நடித்த எம்.எஸ். விஜயாள் என்னைத் தள்ளினார். அவர் தள்ளியதில் சிறிதும் பலம் இல்லாததால் நான் வேண்டுமென்றே கீழே விழுவது போலிருந்தது. நடிப்பு இயற்கையாக இல்லையென்று கூறி ராஜா இரண்டாவது முறையும் அதை எடுத்தார். வேகமாக என்னைத் தள்ள விஜயாள் அஞ்சுகிறார் என்று எண்ணிய நான், அன்றுதான் முதன் முறையாகத் துணிந்து விஜயாளிடம் பேசினேன்,

“அம்மா, நல்ல பலத்தோடு தள்ளுங்கள். நான் சமாளித் கொள்கிறேன். பரவாயில்லை”. 305

என்று ரகசியமாகக் கூறினேன். மீண்டும் ஒத்திகை நடந்தது. விஜயாள் முழுப் பலத்தோடு என்னைத் தள்ளுவாரென்று எண்ணி நான் வேகமாக அவரைப் பிடிக்கச் சென்றேன். அவர் தள்ளியது முன்போலவே இருந்ததால், விரைந்து சென்ற நான் அவர் மார்போடு மோதிக் கொள்ள நேர்ந்தது. விஜயாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

“சீனில் குஸ்தி போட எனக்குத் தெரியாது” என்றார், அந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை எடுக்கப்பட்டு முடிந்தது. அடுத்த ‘ஷாட்’டுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு புறம் அமர்ந்து நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தேன். வேண்டுமென்றே நான் மோதிக்கொண்டதாக விஜயாள் எண்ணியிருக்க வேண்டும்! அதனால்தான் ‘குஸ்திபோட எனக்குத் தெரியாது’ என்று கோபித்துக் கொண்டிருக்கிறார்.

தேம்பி அழுதேன்

இதை நினைத்ததும் எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்து விட்டது. முதல் ஒத்திகையில் சிரிப்பை எப்படி நிறுத்த முடியவில்லையோ அதேபோல் அன்று அழுகையையும் என்னால் நிறுத்த முடியாமல் போயிற்று. நம்மைப்பற்றி விஜயாள் தவறாக நினைக்கும்படி நடந்துவிட்டோமே என்பதை எண்ணியெண்ணி அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். விஷயமறிந்த ராஜா என்ன அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். எஸ். கே., சோமு எல்லோரும் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். அன்று ஸ்டுடியோவில் சகோதரர்கள் யாருமில்லை. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஏங்கினேன். ஸ்டூடியோ முழுவதும் விஜயாளியின் மீது சினந்தது. அவருடைய தாயார்கூட அவரைக் கண்டித்தாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அழுது தீர்த்த பின்னரே என்னால் நடிக்க முடிந்தது. அன்று அப்படி அழுததை எண்ணினால் இன்றுகூட வெட்கமாக இருக்கிறது! பல நாட்களுக்குப் பின் எங்கள் மேனகா நாடகங்களில் ஸ்பெஷலாக நடிக்க எம். எஸ். விஜயாள் வந்தபோதுகூட என்னால் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேச முடியவில்லை.

கீழே விழுந்தார்

மறுநாள் எடுத்த காட்சியில் ஒரு ரசமான கட்டம். கதையின்படி நைன முகம்மது ஐயாயிரம் கொடுத்து மேனகாவைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறான். அவள் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி வெளியே ஒடுகினாள். நைனமுகம்மது வழி மறித்து அவளைத் துக்கிக் கொண்டு கட்டிலை நோக்கிச் செல்கிறான். இப்படித் தூக்கிக் கொண்டு செல்வது எங்கள் நாடகக் கதையிலோ, வடுவூராரின் நாவலிலோ இல்லாத சம்பவம். டைரக்டர் ராஜாவின் சொந்தக் கற்பனை. தூக்கிக் கொண்டு போவது வேண்டாமென்று நான் ராஜாவிடம் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். ராஜா சாண்டோ அலட்சியமாக,

“போடா, ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுத் தொட்டுத் தொந்தரவு பண்ணாமல் விட்டு விடுவானா?” என்றார்.

என்னைப்போலவே விஜயாளும் தகராறு செய்தார். ராஜா பிடிவாதமாய் இருக்கவே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு ஒத்திகை நடைபெறவில்லை. ‘டேக்’ என்று காமிராவை முடுக்கியதும் விஜயாள் ஓடினார். நான் வழி மறித்து அவரைத் தூக்கினேன். இயற்கையாக நடிப்பதானால் நான் அவரைக் கொஞ்சம் இறுகப் பிடித்து அணைத்தபடி இருந்திருக்கவேண்டும். முதல் நாள் சம்பவம் என் நினைவில் இருந்ததால் நான் அவரை அப்படியே எடுத்துக் கைகளில் தாங்கிய வண்ணம் கட்டிலை நோக்கிச் சென்றேன். விஜயாள் என் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயல்பவரைப்போல் கைகால்களை உதறிக் கொண்டார். நான் அவரை மார்போடு தழுவி அணைத்துக் கொள்ளாததால் எனது பிடியிலிருந்து விடுபட்டுத் தொப்பென்று கீழே விழுந்து விட்டார். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ராஜாவும் கலகல வென்று சிரித்து, “நல்லாக் கட்டிப்பிடிடா” என்றார். ஆனால் விஜயாள் அதை இரண்டாம் முறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. பெருத்த சண்டைக்குப் பின், “சரி, வேண்டாம்” என்று ராஜாவும் விட்டு விட்டார். படம் திரையிடப்பட்ட போது நான் தூக்கிச் சென்ற அந்தக் காட்சி அப்படியே இருந்தது. விஜயாள் கீழே விழுந்ததை மாத்திரம் வெட்டி விட்டார்.

தீண்டாத காதல்

மற்றொரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. சாமா ஐயராக நடித்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், தாசி கமலம் வீட்டில் அகப்பட்டுக் கொள்ளும் ரசமான காட்சி. முதலில் சாமாவுக்கும் கமலத்துக்கும் சிங்காரப் பேச்சுகள் நடக்கின்றன. இறுதியில் திருடர்கள் சாமாவைப் பிடித்து அடித்துச் சாக்குப் பையில் போட்டுக் கட்டி விடுகிறார்கள். இதை வேடிக்கை பார்க்க எங்கள் நடிகர்கள் பலரும் கூடியிருந்தார்கள். மேனகா நாடகத்தில் நான் முதலில் நைனமுகமதுவாக நடித்துவிட்டுப் பிற் பகுதியில் தாசி கமலாவாகவும், நடிப்பேன். எனவே என்னோடு நடித்த என். எஸ். கே. பெண்ணாேடு எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்த்து ரசிக்க எல்லோரையும் விட எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. டைரக்டர் ராஜா சுறுசுறுப்பாக வேலை செய்தார். சாமா ஐயரும் தாசி கமலமும் கட்டிலில் அமர்ந்தார்கள்; உரையாடினார்கள். சாமா ஐயர் காதல் பாட்டுப் பாடினார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்ற நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் படாதிபதிகளான எஸ். கே. மொய்தீனும், எம். சோமசுந்தரமும் செய்வது புரியாமல் விழித்தார்கள், நான் கலைவாணரை வியப்புடன் பார்த்தேன். கலைவாணர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் சிரிப்பில் சினமும் கலத்திருந்ததை நான் உணர்ந்தேன். காரணம் என்ன தெரியுமா? படப் பிடிப்பு நாங்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது. சாமா ஐயரை மயக்கிக் கொள்ளை யடிக்கும் நோக்கோடு அழைத்து வந்த தாசி கமலம், சாமாவைத் தொடவும் இல்லை; அவர் பக்கத்தில் நெருங்கி உட்காரவும் இல்லை. தீண்டாத காதலாக இருந்தது. ஒரு முழத் தூரத்திலேயே இருந்தபடி எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார்.

படாதிபதிகளின் ஏமாற்றம்

நாடகத்தில் நானும், என். எஸ். கேயும் இந்தக் காட்சியில் நடிப்பதைப் பல முறையும் பார்த்து ரசித்திருந்த படாதிபதிகள் அதைவிடச் சிறப்பாக சினிமாக் காட்சி அமையுமென எதிர்பார்த் திருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றம். டைரக்டர் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்று புரியவில்லை. ஆத்திரமும் கோபமும் அவர்கள் கண்களில் தெரிந்தன . ராஜாவிடம் நெருங்கிப் பேசப் பயம். நிலைமையைச் சரிப்படுத்த ஒரு வழியும் தோன்றாமல் திகைத்தார்கள்.

சாமாவின் சல்லாபப் பேச்சு முடிந்ததும் திருடர்கள் கட்டிலைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். தாசி கமலம் அவர்களைக் கண்டு பயந்தவள்போல் சாமா ஐயரைக் கட்டிக் கொள்ள வேண்டும். சாமா அவளை அணைத்தபடி திருடர்களோடு போராட வேண்டும்.

டைரக்டர் ராஜா இந்த விவரங்களையெல்லாம் நன்றாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

“கிருஷ்ணா, நீ இப்படி இருக்கிறே; கமலம் அங்கே நிக்கிரு; திருட்டுப் பசங்க வந்ததும் அவ பயந்து ஓடி வந்து உன்னைக் கட்டிக்கிறா. நீ உடனே வீராவேசத்தோட திருடனுங்க மேலே பாயனும்” -

என்று சொல்லிவிட்டுக் காமிரா அருகில் சென்றார். கலைவாணர் அதுவரையில் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் சினமும் அமைதியாக வெளிவரத் தொடங்கின.

“எல்லாம் சரி; ஆனா, அந்த அம்மா வந்து என்னைக் கட்டிக்காதபடி வேறே ஏதாவது வழி பண்ணாங்கோ”......என்றார்.

நான் பதிவிரதன் !

என். எஸ். கே. யின் இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜா திடுக்கிட்டார்.

ஸ்டுடியோவில் பூரண அமைதி நிலவியது. நாங்கள் எல்லோரும் ராஜாவின் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றோம்.

“ஏண்டா! உன்னைக் கட்டிக்கப்படாது?” என்றார் ராஜா. கலைவாணர் மேலும் அமைதியாக, “நான் பதிவிரதன்” என்றார்.

“பதிவிரதனா?... அதென்னடா, புதுசாயிருக்கு?” இது ராஜாவின் கேள்வி.

“புதுசு ஒண்ணாமில்லையே! பொம்பளையிலே பதி விரதையில்லே? அது மாதிரி ஆம்பிளேயிலே நான் பதிவிரதன். என் மனைவி நாகம் மாளைத் தவிர வேறே எந்தப் பொம்பளையும் என்னைத் தொட அனுமதிக்க மாட்டேன். நான் ஏக பத்தினி விரதன்” என்றார் கலைவாணர்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இப்படிச்சொன்னதும் டைரக்டர் ராஜா திடுக்கிட்டார். ஏதோ காரணத்தோடுதான் கிருஷ்ணன் இவ்வாறு பேசுகிறார் என்பது ராஜாவுக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் எஸ். கே. மொய்தீனை நோக்கி, என்ன எஸ். கே. ஒங்க கிருஷ்ணன் தகராறு பண்றானே? தொட்டு ஆக்டு பண்ணாதே போன படம் நல்லாயிருக்குமோ?”... என்று கேட்டார். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்ததும் எஸ். கே மொய் தீனுக்கும் பேசத் துணிவு வந்துவிட்டது. அவர் அதுவரையில் பொருமிக்கொண்டிருந்த தம் உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டத் தொடங்கினார்.

“பின்னே என்னுங்க, இந்த சீன நீங்க இப்படியா எடுக்கிறது? கிருஷ்ணனும் ஷண்முகமும் நாடகத்திலே எப்படி அற்புதமா நடிப்பாங்க; பொம்பளையாச்சே நாடகத்தை விட நல்லா அமையும் சினிமாவிலேண்ணா நாங்க சந்தோஷமா யிருந்தோம். நீங்க ஆரம்பத்திலேயிருந்தே சாமாவும் கமலமும் தொடாமலே எடுத்து முடிச்சிட்டீங்களே? பின்னே கிருஷ்ணனுக்கு வருத்தம் வராதுங்களா? நீங்க கேட்டதையே திரும்பிக் கேக்கிறேன். அந்த அம்மா கிருஷ்ணனைத் தொட்டு ஆக்டு பண்ணாத போனா படம் நல்லாயிருக்குங்களா? நீங்க முன்னாடி தாசி கமலத்தைத் தொட கிருஷ்ணனை அனுமதிக்கவேயில்லை... அதனாலேதான் இப்போ கிருஷ்ணன் தொட்றதுக்குத் தகராறு பண்றாரு ! என்று மேலும் படபடப்போடு பேசிக்கொண்டே போனார். அப்போதுதான் ராஜா தம் தவறை உணர்ந்தார். தாசி கமலமாக நடித்த அம்மையாரும் அவரது சகோதரிகளும் ஆரம்ப முதலே ராஜா வோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட வினை இது. ஆனால் உண்மையை யுணர்ந்ததும் ராஜா சிறிதும் தகராறு செய்யவில்லை. அவரல்லவா பெரிய மனிதர்! உடனே;

“அடடே, அப்படியா? இதை அப்பவே சொல்லியிருக்கலாமே. சரிடா கிருஷ்ணா, இந்த சீன மறுபடியும் எடுக்கிறேன். ஒன் இஷ்டம்போல் ஆக்டு செய்”

என்று சொல்லிவிட்டு மீண்டும் கேமரா அருகில் சென்றார் .

ராஜாவின் தனிச்சிறப்பு

இதுதான் ராஜாவிடமுள்ள தனிப் பெருங்குணம், ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாக விளங்கியவர் ராஜா. தவறு என்று உணர்ந்தால் உடனே அதைத் திருத்திக் கொள்ளத் தயங்கமாட்டார். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்’ என்று சாதிக்கும் பிடிவாதக் குணம் அவரிடம் இல்லை. ஒருநாள் ஸ்டுடியோவில் ஒருவரோடு பிரமாதமான சண்டை நடக்கும். மறுநாள் அதே மனிதரோடு ராஜா களிப்புடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். பழகுபவர் எவரையும் உரிமை பாராட்டி ஒருமைப்பதங்களால் அழைப்பது ராஜாவின் இயற்கை குணம். புதிதாகப்பழகுபவர்கள். இதைத் தவறாக எண்ணவுங் கூடும். ஆனால் மற்றவர்களின் விருப்பையோ வெறுப்பையோ ராஜா பொருட்படுத்து வதில்லை.

அந்தக்காலத்தில் பிரபல நடிகர்களாக விளங்கிய பில்லி மோரியா ஈஸ்வர்லால், ஜால்மார்ச்செண்ட், கோஹர், சுலோசன முதலியோர் எங்கள் மேனகா படப் பிடிப்பைப் பார்க்க வருவார்கள். அவர்களிடம் ராஜா,

“பார்த்தீர்களா, உங்கள் தமிழ்நாட்டு இளங் குழந்தைகளின் திறமையை? இன்னும் இரண்டொருபடங்களில் நடித்தால் உங்களையெல்லாம் தோற்கடித்துவிடுவார்கள்.”

என்று பெருமையோடு கூறுவார்.

ராஜாவின் இன உணர்ச்சி

ஒரு நாள் மேனகாவில் டிப்டிக் கலெக்டர் பங்களாக் காட்சிக்கு ஸ்டுடியோவிலுள்ள மட்டரகமான சோபாக்களையும், நாற்காலிகளையும் போட்டுவிட்டு செட்டிங் மாஸ்டர் அலட்சியமாக இருந்து விட்டார். அப்பொழுது ராஜா ரஞ்சித் மூவிடோனிலேயே நடிகராகவும், டைரக்டராகவும் மாதச் சம்பளத்திற்கு இருந்தபடியால் இதுபற்றி சிரத்தை எடுத்துக் கொண்டு கேட்பாரென செட்டிங் மாஸ்டர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ராஜா படப்பிடிப்பின்போது வந்தார். செட் அமைந்திருந்ததைச் சுற்றிப் பார்த்தார். கண்களில் கோபக்கனல் வீசியது.

“யாரடா அவன் ஸெட்டிங் மாஸ்டர், ரஞ்சித் மூவிடோனில் நல்ல சோபாக்கள் கிடையாதா? ஏன் இந்த ஒட்டை உடைசல்களே யெல்லாம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்?”

என்று இந்தியில் கேட்டார். செட்டிங் மாஸ்டரும், ஸ்டோர் கீப்பரும் முனகிக் கொண்டே,

“மற்ற சோபாக்களெல்லாம் நமது இந்திப் படங்களுக்கு ஸ்பெஷலாக உபயோகிப்பது” ... என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றார்கள். உடனே ராஜா கடுங் கோபத்தோடு இடை மறித்து,

“ஏண்டா ஸ்டுடியோவுக்கு முள்ளங்கிப் பத்தைப்போல் ரூபாய் பதிமூவாயிரம் வாங்கவில்லையா! எங்கள் தமிழ் நாட்டான் காசு உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?” என்றார். அதற்குள் ஸ்டோர் அறையின் சாவி வேறு யாரிடமோ இருப்பதாகச் சிப்பந்திகள் முணுமுணுத்தார்கள்.

“கொண்டாடா சுத்தியலேயும், கடப்பாறையையும்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு, சோபாக்கள் வைத்திருந்த ஸ்டோர் அறையின் பெரிய பூட்டை உடைப்பதற்குத் தயாரானார் ராஜா. உள்ளே இவ்வாறு கலவரம் நடந்துகொண்டிருந்தபோது வெளியிலிருந்து வந்த ஸ்டூடியோ முதலாளி திரு சந்துலால்ஷா நடந்த விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, ராஜா

இஷ்டப்படி செய்யுமாறு சைகை காட்டி விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய் விட்டார். பிறகு முறைப்படி காரியங்கள் ஒழுங்காக நடைபெற்றன. ராஜாவின் வலிமைக்கு அந்த நாளில் வடநாட்டார் அவ்வளவு தூரம் பயந்திருந்தார்கள்.

பட அதிபர்களும் நடித்தனார்

எஸ். கே. மொய்தீன், எம். சோமசுந்தரம், கேசவலால் காளிதாஸ் சேட் ஆகிய சண்முகானந்தா டாக்கீசின் படாதிபதிகளும் மேனகாவில் எங்களோடு நடித்தது படத்திற்கு ஒரு தனிச் சிறப்பினைத் தந்தது. சோமு, இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயராக நடித்தார். எஸ். கே. டாக்டராகவும், ‘கேசவலால் சேட், வராக சாமி காரில் அடிபட்ட இடத்திற்கு வரும் வணிகராகவும் நடித் தார்கள். இவர்களே யெல்லாம் நடிப்பதற்குத் துரண்டியவரே ராஜாதான். இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயர் கொஞ்சம் பெரிய பாத்திரம். நடிப்புத் துறையில் சிறிதும் பழக்கமில்லாத சோமு அவர்களே இவ்வேடம் தாங்கச் செய்து வெற்றிகரமாக நடிக்க வைத்த ராஜாவை எல்லோரும் புகழ்ந்தார்கள்.

முப்பதே நாட்களில் படம் முடிந்தது

படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்றது. இன்றைய நிலையைப்போல் ‘டீ’ வராத சண்டையோ, கார் வராத தாமதமோ, வேஷம் போடாத தடங்கலோ, செட்டிங் தயாராகாத தொல்லையோ எதுவும் மேனகா படப் பிடிப்பில் ஏற்படவில்லை. நடிகர்கள் பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். டைரக்டர் பூரணமாக ஒத்துழைத்தார். பெண் நடிகையரும் எவ்விதக்குழப்பமும் செய்யவில்லை. முப்பதே நாட்களில் மேனகா படப் பிடிப்பு முடிந்தது. ஏறத்தாழ இரண்டு மாத காலம் பம்பாயில் தங்கினோம். மேனகா படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் 9ஆம் நாள் நாங்கள் பம்பாயிலிருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டோம். அப்போது எங்களை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்த ராஜா, இரு கரங்களையும் மேலே உயர்த்தியபடி கண்களில் நீர் பெருக,

“டேய் பசங்களா, தொழில்நேரத்தில் உங்களைக் கோபமாக ஏதாவது திட்டியிருப்பேன்; தாறுமாருகப் பேசியிருப்பேன் என்ன தவறு செய்திருந்தாலும் மறந்திடுங்கடா!” என்று கூறியதை எண்ணும்போது இன்றும் என் விழிகளில் நீர் பெருகுகிறது! இத்தகைய வீர நடிக ராஜா 1944 நவம்பர் 24இல் கோவையில் மாரடைப்பினால் மாண்டார் என்ற செய்தி கேட்டு நாங்கள் எல்லாம் கண்ணிர் விட்டோம். வியப்பென்னவென்றால் தமிழ் நாட்டிலிருந்து வடநாடு சென்று, திரையுலகில் முப்பதாண்டு காலம் தனியரசு செலுத்திய அந்தக் கலைச்செம்மல் - வீரத் தமிழனின் மரணச்செய்தி எந்தப்பத்திரிகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை. தமிழன் என்ற இன உணர்வும் எழுச்சியும் இந்த நைந்த தமிழகத்திற்கு என்றுதான் வருமோ என்று அன்றே ஏங்கினேன்.
-------------------

38. கம்பெனி நிறுத்தம்


நவம்பர் 11ஆம் நர்ள் எல்லோரும் ஈரோட்டுக்குத் திரும்பினோம். மேனகா படத்திற்காக எங்களுக்கு மொத்த வருவாய் பதினாலாயிரம் ரூபாய்கள். அதில் நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் கொடுத்ததுபோக எங்கள் நால்வரின் உழைப்புக்கு எண்ணாயிரம் ரூபாய்கள் மிஞ்சியது. கம்பெனியைத் தொடர்ந்து நடத்தப் பெரியண்ணா விரும்பவில்லை. நாடகசாலை களெல்லாம் பேசும் படக்காட்சி சாலைகளாக மாறிக் கொண்டிருந்தன. வாடகை பன்மடங்கு உயர்ந்து விட்டது. நெடுங்காலம் நாடக எந்திரத்தில் சிக்கிக் கொண்டு சுழன்று வந்த எங்கள் வாழ்க்கையில், சினிமா உலகம் சிறிது சாந்தியை உண்டாக்கியது. இந்நிலையில் மீண்டும் தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே தோன்றியது. எங்கள் குடும்பத்திலும் சில அவசியமான காரியங்கள் நடைபெற வேண்டியிருந்தன. எல்லாவற்றையும் உத்தேசித்து 1935 நவம்பர் 11ஆம் தேதியோடு கம்பெனியைக கலைத்துவிட்டு நாகர்கோவிலுக்குப் போக திட்ட மிட்டார் பெரியண்ணா. நடிகர்கள் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தபோது, எங்கள் கண்கள் கலங்கின. மீண்டும் கம்பெனி துவக்குவோம் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாததால் துக்கம் தாங்க முடியவில்லை.

தேர்தல் பிரசாரம்

அந்தச் சமயத்தில் காங்கிரஸ், சட்ட சபையைக் கைப்பற்றும் முதல் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்றது; ஈரோட்டுப் பகுதியில் பழைய கோட்டை பட்டக்காரர் திரு நல்லதம்பிசக்கரை மன்றாடியார் காங்கிரஸ் சார்பிலும், அவருக்குப் போட்டியாகக் குட்டப்பாளையம் திரு கே. எஸ். பெரியசாமிக் கவுண்டரும் நின் றார்கள். திருமதி கே. பி சுந்தராம்பாள் அம்மையார், காங்கிரஸ் சார்பில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் பம்பாயிலிருந்து திரும்பியதும் அவர்களை ஈரோட்டில் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தம்முடன் என்னைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டுமென்று விரும்பினார்கள். திரு ஈஸ்வரன், திரு முத்துக்கருப்பன் செட்டியார், குழந்தைவேலு செட்டியார் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் இதை ஆமோதித்தார்கள். ஈரோடு ஈஸ்வரன் சிறந்த தேச பக்தர். நாங்கள் முதன் முதல் ஈரோட்டுக்குச் சென்ற காலத்தில் நெருங்கிப் பழகியவர். முற்போக்கான லட்சியங்களைக் கொண்டவர். நாங்கள் பம்பாய் சென்றபோது அவரையும் எங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றிருந்தோம். எல்லோரிடமும் இனிய முறையில் பழகுபவர். அவருடைய வேண்டுதலைப் புறக்கணிக்கப் பெரியண்ணாவால் இயலவில்லை. எனவே பெரியண்ணாவும் இதற்கு ஒப்புதல் தந்து, நாகர்கோவில் பயணத்தை இரண்டு நாட்கள் ஒத்திப்போட்டார், நான் கே. பி. எஸ். அவர்களுடன் கிராமம் கிராமமாகச் சுற்றித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன்; நான் பாடுவேன். கே. பி. எஸ். அவர்கள் பேசுவார்; கே.பி. எஸ். பாடினால், நான் பேசுவேன். இறுதியில் கே.பி. எஸ். மஞ்சள் பெட்டியின் மகிமையைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார். இப்படியே ஈரோடு தாலுக்காவில் பல கிராமங்கள் சுற்றினோம், அப்போது கே. பி. எஸ். அவர்கள் பேசிய ஆவேசப் பேச்சை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. கொடுமுடிவரை போய் சுந்தராம்பாள் அம்மையாரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

பிரியா விடை

19ஆம் தேதி நாகர்கோவிலுக்குப் பயணம் என்பது உறுதி செய்யப்பட்டது. எங்களிடமிருந்த சீன் சாமான்களையெல்லாம் அருகிலுள்ள பவானி கொட்டகையில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தோம். உடைகள் வைக்கும் பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாமாகப் பதினறு பெரிய பெட்டிகள் இருந்தன. அவற்றை எங்கள் நண்பரும், சமய சஞ்சீவியுமான கிட்டு ராஜூவிடம் ஒப்படைத்தோம். மற்றும் சில சாமான்களை சீன் வேலையாட்களுக்குக் கொடுத்தோம். எல்லா வேலைகளும் முடிந்தன. புறப்படும் நாள் காலையில் பெரியார் ஈ. வே. ரா. அவர்களிடம் விடைபெறச் சென்றோம், நாங்கள் கம்பெனியை நிறுத்தப் போகிறோம் என் பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்தியைக் கேட்டதும் மிகவும் வருந்தினார்.

“இனிமேல்தான் உங்கள் நாடகக் குழுவுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. இந்த நல்ல சமயத்தில் கம்பெனியை நிறுத்துவது சரியல்ல. அவசியமானல் சில மாதங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துங்கள். இதை என்னுடைய அறிவுரையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பரிவோடு கூறினார். மற்றும் ஈரோட்டிலிருந்த எங்கள் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு அன்று பகல் ரயிலில் புறப்பட்டு மறுநாள் இரவு ஏழு மணியளவில் நாகர் கோவில் வந்து சேர்ந்தோம். எங்கள் நாடக வாழ்க்கையில் ஒரு பகுதி முடிந்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பெரியண்ணாவுக்கு நாடக வாழ்க்கையில் அலுப்புத் தட்டி விட்டது. 1918 முதல் 1935 வரை பதினேழு ஆண்டுகள் ஒய்வின்றி உழைத்ததின் பலனை எண்ணிப் பார்த்த பிறகு அவருக்கு நாடகம் என்றாலே வேப்பங்காயாகிவிட்டது. படத்தில் கிடைத்த சொற்ப ஊதியத்தையும் பாழாக்கி விட மனமின்றி வேறுதொழில்களில் ஈடுபட முயற்சித்தார். படத்தில் எங்களுக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு அடகு வைத்திருந்த நிலத்தை மீட்டோம்.

தங்கையின் திருமணம்

தங்கை சுப்பமாளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம். நாடகக்காரர்களின் குடும்பத்தில் பெண் கொள்ளப் பெரும்பாலோர் விரும்பவில்லை. நாகர்கோவிலுக்கு மூன்றாவது மைலிலுள்ள சுசீந்திரம் அக்கரையில் தங்கைக்குப் பொருத்தமான வரன் கிடைத்தார். மாப்பிள்ளைக்குத் தாய் தந்தை இல்லை. தமையனும் தமக்கையும் முன்னின்று பேச்சு வார்த்தைகளை முடித்தார்கள். 1936 பிப்ரவரி 2 ஆம் தேதி சுப்பையாபிள்ளைக்கும், சுப்பம்மாளுக்கும் திருமணம் நடந்தேறியது.

தங்கையின் திருமணத்திற்கான செலவுகள் போகமீதியிருந்த் சொற்பத் தொகையைக் கொண்டு ஒரு சிறிய ஷராப் கடை வைக்க ஏற்பாடு செய்தார் பெரியண்ணா. நாகர்கோவில் மணி மேடையின் பக்கம் ஷராப் கடை தொடங்கப் பெற்றது.

மேனகா படம் வெளி வந்தது. அமோகமான வசூல், எங்கள் நால்வருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. பத்திரிகைகளில் வெளி வந்த விமர்சனங்களையெல்லாம் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தேன். திருநெல்வேலியில் மேனகா திரையிடப் பெற்றது. நாங்களும் என். எஸ். கிருஷ்ணனும் சென்று கலந்துகொண்டோம். இடைவேளையில் எங்களைப் பேசச் சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். நானும் என்.எஸ். கிருஷ்ணனும் ரசிகர்களுக்கு நன்றி கூறிப் பேசினோம். கலைவாணர் என்.எஸ். கிருஷணன் தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனக்கும் தம்பி பகவதிக்கும் தனித்தனியாகச் சிலரிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்புக்கள் வந்தன. பெரியண்ணா எங்களைப் பிரித்து அனுப்ப விரும்பவில்லை. நாங்களும் அப்படி போக விரும்பவில்லை. எனவே தொடர்ந்து நடிக்க இயலாது போயிற்று.

நண்பர்கள் வற்புறுத்தல்

சில மாதங்கள் ஒடிமறைந்தன. உழைப்பினிலே இன்பம் கண்ட எங்கள் மூவருக்கும் சும்மா இருப்பது கஷ்டமாக இருந்தது. பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தியதாக ஈரோட்டிலிருந்து நண்பர் ஈஸ்வரன் எழுதியிருந்தார். எங்கள் மீது அன்பு கொண்ட மற்றும் பல நண்பர்கள் நாடகக்குழுவை நடத்தியே தீரவேண்டுமென அன்புக் கட்டளைகள் விடுத்தனார். எங்கள் பால் மாருத அன்பு கொண்ட கலை வள்ளல் எட்டையபுரம் இளைய ராஜா திரு காசிவிசுவநாத பாண்டியன் மீண்டும் குழுவைத் தோற்றுவிக்குமாறு அன்புடன் வேண்டினார். இரவு நேரங்களில் எங்களுக்குச் சரியான உறக்கம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், முதலிய நாடகங்களையெல்லாம் பல்வேறு நூல்களைக்கொண்டு நன்கு ஆராய்ந்து புதுமுறையில் இந்த ஓய்வு நாட்களில் எழுதி முடித்தோம். நாடகக் கம்பெனியைத் தொடங்குமாறு நாங்களும் பெரியண்ணாவை வேண்டினோம். எங்கள் சோர்வுற்ற நிலையைக் கண்டு அவரது மனமும் மாறி யது. வாழ்ந்தால் நாடகத் துறையில் வாழ்வது, வீழ்ந்தாலும் இத்துறையிலேயே வீழ்வது என்ற முடிவுடன் நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டோம்.
----------------

39. மறு பிறப்பு


சுமார் ஆறுமாத கால ஓய்வுக்குப் பின்னார் புதிய உற்சாகத் தோடு கம்பெனியைத் துவக்கினோம். 1936 மே மாதம் 19ம் நாள் மீண்டும் ஈரோட்டிலேயே கம்பெனி புனார்ஜென்மம் எடுத்தது. எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் பெரும்பாலோரும் வேறு கம்பெனிகளுக்குச் செல்ல மனமின்றி இருந்ததால் கம்பெனியை மீண்டும் தோற்றுவிப்பதுஎளிதாக இருந்தது. பழைய நடிகர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள்.

எங்கள்மீது அன்புகொண்ட பெரியார் ஈ.வே. ரா. அவர்கள் விளம்பரச் சுவரொட்டிகளைத் தம் அச்சகத்தில் இலவசமாகவே அடித்துக் கொடுத்து உதவினார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் நட்பு

இந்தச் சந்தர்ப்பத்தில் 1934 முதல் எங்களோடு நட்புரிமை பூண்ட டாக்டர் கிருஷ்ணசாமி எனக்குப் பெரிதும் உதவினார். 1929 முதலே வலது கையில் எனக்கு ஒரு வலி ஏற்பட்டிருந்தது. அந்த வலிக்கு ஊசி போட்டுக் கொள்வதற்காக நண்பர் ஈஸ்வரன் எனக்கு டாக்டரை அறிமுகப்படுத்தினார். அது முதல் டாக்டர் சிருஷ்ணசாமிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. உடன் பிறந்த சகோதரரைப்போல் எண்ணி, டாக்டர் எனக்குச் சிகிச்சையளித்தார். மருந்துக் கூடப் பணம் பெறாமல் தாமே அனைத்தும் செய்தார். டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பொதுவுடமை வாதி. தோழர் ஜீவா, பி. இராமமூர்த்தி, பெரியார் ஈ வே. ரா. ஆகியோருடன் தொடர்புடையவர். மேனகா படத்திற்காக தாங்கள் பம்பாய்சென்றிருந்தபோது அவரும்பம்பாய்க்குவந்திருந் தார், நாங்கள் கம்பெனியை நிறுத்தியபோது மிகவும் வருந்திய வர்களில் டாக்டரும் ஒருவர். எனவே இப்போது மீண்டும் கம்பெனியைத் தொடங்கியதால் அவர் உற்சாகத்தோடு தேவையான உதவிகளைச் செய்தார்.

கொட்டகை வாடகை, விளம்பரம் முதலிய செலவுகளுக்குப் பயந்து பெரிய நகரங்களுக்குச் செல்லவில்லை. சிறிய ஊர்களுக்கே சென்றுவந்தோம். இம்முறை கம்பெனி முன்னேறிச் செல்லாவிட்டாலும் பின்னோக்கிப் போகவில்லை. நம்பிக்கையளிக் கும் முறையில் நடை பெற்றுவந்தது.

ஜூபிடர் அழைப்பு

தாராபுரத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது மேனகா படத்தில் பங்காளிகளாக இருந்த எஸ். கே. மொய்தீனும், எம்.சோமசுந்தரமும் வந்தார்கள். தாங்கள் ஜூபிடர் பிகசர்ஸ் என்னும் பெயரால் ஒரு படக் கம்பெனியைத் துவக்கியிருப்பதாகவும் சந்திர காந்தா நாடகத்தைப் படமெடுக்கப் போவதாகவும் கூறினார்கள். அப்போது நாங்கள் சந்திரகாந்தா நாடகத்தை நிறுத்தியிருந்தோம். என்னையும் தம்பி பகவதியையும் சுண்டுர் இளவரசனுக்கும் ராகவரெட்டிக்கும் ஒப்பந்தம் செய்ய விருப்புவதாகச் சொல்லி, அந்த நாடகத்தை ஒருமுறை பார்க்க வேண்டுமென்றும் கூறினார்கள். அப்போது சந்திரகாந்தா நாடகத்துக்குரிய காட்சியமைப்புகள் எதுவும் இல்லை. என்றாலும் அவர்கள் வேண்டுதலை மறுக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு நாடகத்தைத் தாயாரித்தோம். சந்திரகாந்தா நாடகம் ஒருநாள் நடந்தது. ஜூபிடர் பிக்சர்ஸார், சந்திரகாந்தா நாவலின் ஆசிரியர் ஜே. ஆர். ரங்கராஜு முதலியோர் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகம் முடிந்த பிறகு சென்னைக்குப்போய் விபரமாகக் கடிதம் எழுதுவதாகக் கூறிச் சென்றார்கள். சந்திர காந்தாவுக்கு டைரக்டராக ராஜா சாண்டோவையே ஏற்பாடு செய்திருந்தார்கள்.அவர் எங்கள் நால்வரையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் அவசியம் ஏற்படு செய்யும்படி சொல்லி யிருந்தாராம். இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் ஜூபிடரிலிருந்து கடிதம் வந்தது.

ராகவ ரெட்டி வேடத்திற்கு வேறு ஒருவரைப் போடும்படி படியாக ரங்கராஜு கூறிவிட்டாரென்றும், சுண்டுர் இளவரசனுக்கு மட்டும் என்னைப்போட உறுதி செய்திருப்பதாகவும் அதற்குச் சம்மதிக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தது. பெரியண்ணாவுக்கு என்னைத் தனியே அனுப்ப விருப்பமில்லை.

“வுண்முகத்தையும் பகவதியையும் அழைத்து போவ தானல் அனுப்புகிறேன். ஷண்முகத்தை மட்டும் அனுப்பிவிட்டுக் கம்பெனியை நிறுத்திவைக்க நான் விரும்பவில்லை” என்று ஜூபிடருக்குப் பதில் எழுதினார் பெரியண்ணா. எனக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பதாகவும் ராஜா சாண்டோ வற்புறுத்திக் கூறியிருப்பதாகவும் அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் மீண்டும் கடிதம் வந்ததது. பெரியண்ணா இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். வேறு வழியின்றி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் குண்டுர் இளவரசனுக நடித்த பி.யு. சின்னப்பாவை ரூபாய் ஐநூறுக்கு ஒப்பந்தம் செய்ததாக அறிந்தோம். சின்னப்பா அவர்களுக்கு சந்தரக்காந்தாதான் முதல் படம் என்பதும், அவருடைய வளர்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
----------------

40. பாலாமணி - பக்காத்திருடன்


நாடகங்கள் தொடர்ந்து சிரிய ஊர்களில் நடை பெற்று வந்தன. விருதுநகரில் நாங்கள் இருந்தபோது மேனகா படத்தின் மற்றும் இரு பங்காளிகளான ஈரோடு முத்துக் கருப்பன் செட்டியாரும், கேசவலால்காளிதாஸ் சேட்டும் வந் தார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பலாமணி - பக்காத் திருடன் நாவலைப் படமெடுக்கப் போவதாகவும் நாங்கள் நால் வரும் அதில் நடிக்க வேண்டுமென்றும் அழைத்தார்கள். எங்கள் நால்வருக்கும், எங்கள் குழுவிலுள்ள இன்னுஞ்சில முக்கிய நடிகர் களுக்குமாகச் சேர்த்து ஒன்பதியிைரம் ரூபாய்கள் தருவதாகக் கூறினார்கள். கம்பெனி வளர்ச்சியைக் கருதி இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.

சத்தியமூர்த்தியின் பெருந்தன்மை

அப்போது பண்டித ஜவர்ஹர்லால் நேரு தமது குடும்பத்தினருடன் விருதுநகருக்கு வருகை புரிந்தார். பிரமாண்டமான ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உள்ளுர் காங்கிரஸ் கமிட்டியார் விரும்பியபடி அன்று நாங்களும் நாடகத்தை நிறுத்தி னோம். நேருவுடன் சத்தியமூர்த்தி ஐயரும் சுற்றுப் பயணம் செய்தார். தேசபக்தர் சத்தியமூர்த்தி ஒரு சிறந்த கலா ரசிகர். பம்மல் சம்பந்தனார் நாடகங்களில் நடித்தவர். மேனகா படம் சென்னை யிலே திரையிடப்பட்டபோது ஒரு நாள் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். படத்தில் “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்னும் மகாகவி பாரதியார் பாடலைச் சேர்ந்திருந் தோம். இந்தப் பாடல்தான் முதன்முதலாகத் திரைப்படத்தில் பாடப் பெற்ற பாரதியார் பாடல். இந்தப் பாடலைப் படத்தில் சேர்த்திருந்தது குறித்து, சத்தியமூர்த்தி வெகுவாகப் பாராட்டி

னார். அதன் பிறகு கரூரில் ஒருமுறை நான் அவரை கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருடன் சந்தித்தபோது மேனகா படத் தைப் பிரமாதமாகப் பாராட்டினார். அவரோடு எனக்கு ஏற்கனவே பழக்கமிருந்ததால் அவரது வேண்டுகோளின்படி நான் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரைமணி நேரம் பாரதி பாடல்களையும், ஜீவானந்தம் பாடல்களையும் பாடினேன். நான் பாடிக்கொண்டிருக்கும்போதே நேரு வந்துவிட்டார். அவரோடு திருமதி கமலா நேருவும் செல்வி இந்திராவும் வந்தனார். அதன் பிறகும் சில நிமிடங்கள் பாடும்படி சத்திய மூர்த்தி ஆணையிட்டார். நான் பாடிக் கொண்டிருக்கும் போதே எங்கள் நாடகக் குழுவின் சிறப்பையும் எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்கள், தேசீய நாடகங்கள் ஆகியவற்றைப்பற்றியும் நேருஜியிடம் சத்தியமூர்த்தி வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். காலஞ்சென்ற தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் பெருங் குணத்தைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன். நான் பாடி முடித்ததும் நேரு என்னை யழைத்து அருகிருத்திப் பாராட்டினார். என் உள்ளமெல்லாம் பூரித்தது.

பாலாமணி படம்

இம்முறை படத்தில் கிடைக்கும் வருவாய் முழுவதையும் கம்பெனிக்குக் காட்சிகள், உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட முடிவு செய்தோம். அதற்கு வசதியாகக் கம்பெனியை எட்டைய புரம் கொண்டு சென்றோம். இளைய ராஜா அவர்களின் சொந் தக் கொட்டகையில் சாமான்களையெல்லாம் போட்டு விட்டு, வேண்டிய ஏற்பாடுகள் செய்தோம்.

சிறுவர்களை மட்டும் அவரவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். காட்சி அமைப்பாளர்கள் கொட்டகையி லேயே இருந்தார்கள். கணக்குப் பிள்ளை தர்மராஜு மேற்பார்வையாளராக இருந்து, எல்லாவற்றையும் கவனித்துக் கொண் டார். பெரிய நடிகர்கள் சிலர், படத்தில் நடிப்பதற்காக எங்க ளோடு வந்தார்கள். இவர்களில் எஸ். வி. சகஸ்ரநாமம், பிரண்டு ராமசாமி, டி.என். சிவதாணு,டி.பி சங்கரநாராயணன் ஆகியோரும் இருந்தனார்.

எஸ். வி. சகஸ்ரநாமம் பாலாமணி படத்தின் கதாநாயகன் எஞ்சிட் சிங்காக நடித்தார். சாண்டோ வி. கே. ஆச்சாரி, பக்காத் திருடனாக நடித்தார். சின்னண்ணா கதை வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றவர்கள் எல்லோரும் பல பாத்திரங்களை ஏற்று நடித்தோம். என். எஸ். கிருஷ்ணனையும் இந்தப் படத்தில் நடிக்கச் செய்ய வேண்டுமென்று பெரியண்ணா வற்புறுத்தினார். படாதிபதிகள் அதன்படி என். எஸ். கே. யை யும் ஒப்பந்தம் செய்தார்கள். அவரும் எங்களோடு பாலாமணி யில் நடித்தார்.

பாவேந்தர் பாரதிதாசன்

பாலாமணிக்குப் பாடல்கள் எழுதத் தமிழகத்தின் தன்னிக ரில்லாத புரட்சிக்கவினார் பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களோடு தங்கினார். பாரதிதாசன் பாடல்களிலே உள்ளத்தைப் பறிகொடுத்தவன் நான். பாடல்கள் எழுத அவரை ஏற்பாடு செய்யும்படி நான்தான் படாதிபதிகளிடம் வற்புறுத்தினேன். கவிஞரோடு நெருங்கிப் பழகவும் உரையாடவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உயர்ந்த மேதைகளோடு பழகுவதென்பது ஒரு அரியகலை. காலமறிந்து மென்மை யாகப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொண்டு பழக வேண்டும். புரட்சிக் கவினார் அப்படிப் பழகி உறவாட வேண்டிய பெரிய மேதை என்பதை அந்நாளிலேயே நான் புரிந்து கொண்டேன். சின்னண்ணா டி. கே, முத்துசாமிதான் படத்தின் சங்கீத டைரக்டர். பாரதிதாசன் அவரோடு நல்ல முறையில் ஒத்துழைத்தார். பாலாமணிக்குரிய பாடல்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே எழுதப் பெற்றன.

திரைப்படங்களுக்குப்பாடல்கள் எழுதுவதிலே புரட்சிக்கவிஞருக்கு உற்சாகமில்லை. மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக ஏதோ எழுதினார். பாடல்கள் எழுத உட்காருவார், இரண்டு வரிகள் எழுதுவார். உடனே ஏதாவது இலக்கிய பேச்சு தொடங்கும். அதிலேயே மூழ்கிவிடுவார்.சுவையோடு பேசிக் கொண்டிருப்பார். பாடல்களைப் பற்றி யாராவது நினைவுபடுத்துவார்கள். “அது கெடக்குதுப்பா; எழுதினால் போச்சு. சினிமாப் பாட்டுத் தானே?"ன்று சொல்லிவிட்டு மீண்டும் பேச்சைத் தொடங்குவார்.

ஈரோட்டிலும் ஏற்காடு மலைப்பகுதியிலும் பாலாமணிக்குச் சில வெளிப்புறக் காட்சிகள் படமெடுக்கப்பட்டன.

டைரக்டர் பி. வி. ராவ்

பாலாமணியை டைரக்ட் செய்ய பி. வி. ராவ் வந்து சேர்ந்தார். அவர் ஒத்திகை பார்க்கும் முறையும், படம் எடுக்கும் விதமும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தன. யார் எதைச் சொன் ஞலும் கேட்கமாட்டார். தாமே சர்வாதிகாரியாக இருந்து செய லாற்றினார். எங்களோடு நடிக்க வந்திருந்த பெண்கள் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்தது மிகவும் பரிதாபமாக இருந்தது. அடிக்கடி எங்களுக்குள் தகராறு நடந்து கொண்டே இருந்தது. எங்களுக்கு வந்த ஆத்திரத்தையெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, 1937இல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் தயாரித்தபோது டைரக்டர் வி.பி.வார் என்று ஒரு பாத்திரத்தைப் படைத்தோம், ராவ் செய்த அட்டூழியங்களே அந்த வார் என்னும் பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிக் காட்டி எங்கள் வயிற். றெரிச்சலைத் தீர்த்துக் கொண்டோம். சபையோர் அந்தக் காட்சியைப் பிரமாதமாக ரசித்தார்கள்.

டைரக்டர் பி.வி.ராவ் சாதாரணமாக எப்போதுமே நிதா னத்தில் இருப்பதில்லை. அரை மயக்கத்திலேயேதான் காரியங் களைச் செய்வது வழக்கம். அதே நிலையில் படத்தையும் டைரக்ட் செய்தார். நாங்கள் பம்பாயில் இருந்த அதே சமயத்தில் புளுவில் சந்திரகாந்தா, வசந்தசேனா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எல்லோரும் புனா சென்று ராஜாவைப் பார்த்து வந்தோம். டைரக்டர் ராவும் எங்களோடு ராஜாவைப் பார்க்க வந்திருந்தார். எல்லோரும் மகிழ்ச்சியோடு அளவளாவிக் கொண் டிருக்கும் நேரத்தில் டைரக்டர் ராஜா,

“டே பசங்களா, ராவ் ஒன்னும் தெரியாதவன்; அப்பாவி. நீங்கதான் கூட இருந்து படத்தை உருப்படியாச் செய்யனும்” என்று எங்களிடம் கூறினார். டைரக்டர் ராவிடம்,

“டே ராவ், பையன்களெல்லாம் நல்ல புத்திசாலிங்க. நீ சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடாதே. அவங்களோட ஒத்துழைச்சு படத்தை ஒழுங்கா எடுக்க முயற்சி பண்ணு” என்று கூறினார். ராஜாவின் வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போல் இருந்தன.

பெருக் தோல்வி

பம்பாயில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்டையபுரம் அரண்மனைக் கொட்டகையில் கம்பெனிக்குப் புதிய காட்சிகள் தயாராகி வந்தன. பம்பாயில் எங்களுக்கு நிம்மதியே இல்லை. கம்பெனியின் வளர்ச்சிபற்றிக் கனவுகள் கண்டோம். மனத்திலேயே புதிய புதிய கோட்டைகளைக் கட்டினோம்.

அந்தேரி ராம்னிக்லால் மோகன்லால் ஸ்டுடியோவில் இரண்டு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. எப்படியோ படத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு திரும்பினோம். படத்தின் எடிட்டிங்'கின் போது சின்னண்ணா உடனிருப்பது நல்லதென எல்லோரும் எண்ணினோம். டைரக்டர் ராவ், பிடிவாதமாக மறுத்து விட்டார்.

நாங்கள் திரும்பிய இரண்டு மாதத்திற்குப் பிறகு பாலாமணி படம் மதுரையில் திரையிடப்பட்டது. நாங்கள் நால்வரும் போய்ப் பார்த்தோம். எங்களுக்கே மூளை குழம்பியது. எடுத்ததே மோசம். அதிலும் காட்சிகளை முன்னும் பின்னுமாக வெட்டி ஒட்டி ஒரே குளறுபடி செய்திருந்தார். பி. வி. ராவ். படத்தை முழுதும் பார்க்க மனமின்றிப் பாதியிலேயே எழுந்து வந்து விட்டோம். முதல் படம் மேனகா சிறந்த படமெனப் பரிசு பெற்றது. இரண்டாவது படம் பாலாமணி படுதோல்வி அடைந்தது.
-----------------

41. சின்னண்ணா திருமணம்


பம்பாயிலிருந்து நாங்கள் திரும்பியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த வடிவீசுரத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் செல்வி கோலம்மாளுக்கும் 30.4.1937 இல் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

திருமணம் முடிந்தபின் எல்லோரும் எட்டையபுரம் சென்றோம், நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. எட்டைய புரத்திலும் கோவில்பட்டியிலும் சில நாடகங்கள் நடத்தினோம். அடுத்து, திருநெல்வேலியில் புதிய புதிய முறைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்து, புதிய காட்சிகளுடன் பாம்பாய் மெயில் நாடகத்தை நடந்தினோம். முன்பெல்லாம் பம்பாய் மெயில் கம்பெனியின் முக்கிய நாடகங்களில் ஒன்றாகவும், வசூலைத்தரும் நாடகமாகவும் இருந்தது. இப்போது புதிய காட்சிகளோடு நடித்தும் என்ன காரணத்தாலோ அதற்கு வசூல் ஆகவில்லை. படுமோசமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. மனதைத் தளர விடாமல் உற்சாகத்தோடு நடித்து வந்தோம்.

தேசபக்திக்குத் தடை

அப்பொழுது, நடத்தப் போகும் நாடகங்களே முன்னதாகவே அறிவிக்க வேண்டுமென ஒரு புதிய உத்திரவு கலைக்டரிடமிருந்து வந்தது. நாங்கள் நாடகங்களைக் குறித்து அனுப்பினோம். தேசபக்தி, கதரின் வெற்றி, ஜம்புலிங்கம் ஆகிய மூன்றுநாடகங்களை மட்டும் தடை செய்திருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ்காரர்கள் சட்டசபையைக் கைப்பற்றி, தலைவர் ராஜாஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த சமயம் அது. தேசியவாதிகள் அமைச்சர்களாக இருக்கும் நேரத்தில் தேசீய நாடகங்களுக்குத் தடையா? எங்கள் உள்ளம் குமுறியது. திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரின் பெயர் ராமமூர்த்தி என்று நினைவு. அவருடைய போக்கைக் கண்டித்து எங்கள் சார்பில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறை வேற்றியது. சுதந்திரச்சங்கு என்னும் பெயரால் அப்போது சென்னையில் நடைபெற்று வந்த காலணா வார இதழ், கலெக்டரின் செயலைக்கண்டித்துத் தலையங்கம் எழுதியது. கல்லிடைக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமதி லட்சுமி சங்கரய்யர் எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டார். எதுவும் பயனளிக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செலுத்துகிறது; ஆனால் மாவட்டத்தில் கலெக்டர் ஆதிக்கம் செலுத்துகிறார்! நாங்களும் என்னென்னவோ செய்து பார்த்தோம். நாடகத்தின் தடை நீங்கவே இல்லை. அப்போது விளம்பர அமைச்சராக இருந்த திரு. எஸ். ராமநாதன் எங்கள் பழைய நண்பர். நாங்கள் பெரியார் அவர்களோடு தொடர்பு கொண்ட நாள் முதலே எஸ்.ராமநாதனோடும் நெருங்கி பழகினோம். அவரும் எங்கள் தேசப்பக்தியைப் பார்த் திருக்கிரு.ர். எனவே, அவருக்குத் தனிப்பட்ட முறையில் நிலைமையை விளக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.

அதற்கு அவர் ஆறுதல் கூறிப் பதில் எழுதியிருந்தார். தங்களுக்கிருக்கும் தற்போதைய அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வதாக அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தேசபக்தியையும் கதரின் வெற்றியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த ஊரிலும் நடத்த முடியாமலை போய் விட்டது. அப்போது எட்டையபுரம் இளைய ராஜா அவர்களின் கம்பெனியிலிருந்த சில நடிகர்கள் எங்கள் குழுவில் சேர்க்கப் பெற்றார்கள், அவர்களில் டி. வி. நாரயணசாமி, பி. எஸ் வேங்கடாசலம், எஸ். பி. வீராச்சாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

சுசீந்திரம் கோமதி

முதலாவதாக எங்கள் கம்பெனியில் இருந்த நடிகை, நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதனின் தங்கை மீனாட்சி. இவ ளுக்குப் பின் நீண்ட காலமாகப் பெண்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவோடு இருந்தோம். ஆனால் 1936இல் பாலாமணி படம் முடிந்து மீண்டும் குழுவைத் தொடர்ந்து நடத்தியபோது சுசீந்திரம் கோமதி எங்கள் குழுவிலே சேர்க்கப் பெற்றார், இவர் நன்றாகப் பாடும் திறமை பெற்றவர். இவருடைய இசைஞானத்துக்காகவே இவரை விரும்பிச்சேர்த்துக் கொண்டோம். வயது வந்த பெண்ணாக இருந்ததால் வந்த உடனேயே முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஏறத்தாழ அப்போது நடைபெற்ற எல்லா நாடகங்களிலும் கதாநாயகி வேடம் இவருக்கே கொடுக்கப்பட்டது. எட்டையபுரம், கோவில் பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஏறக்குறைய ஏழுமாத காலம் இவர் கம்பெனியில் நடித்தார். நாகர்கோவிலில் இவர் தாமாகவே விலகிக் கொண்டார். நல்லமுறையில் நடித்து வந்த இவர் திடீரென்று விலகியது எங்களுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. நாகர்கோவிலிலிருந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

ரங்கராஜு நாடகங்கள் நிறுத்தப்பட்டன

அப்போது பெரும்பாலும் ரங்கராஜுவின் நாடகங்களே எங்கள் குழுவில் அதிகமாக நடைபெற்று வந்தன. இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தைந்து ரூபாயும், இராஜேந்திரன், சந்திர காந்தா, மோகனசுந்தரம் ஆகிய நாடகங்களுக்கு நாடகம் ஒன்றுக்கு முப்பது ரூபாயும் ராயல்டியாகக் கொடுத்து வந்தோம். வசூல் மிக மோசமாக இருந்த நிலையில் இந்தத் தொகையைக்கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

நாவல் நாடகங்களுக்குச் சில சமயங்களில் ஐம்பது, அறுபது ஆான் வசூலாயிற்று. எனவே பெரியண்ணா ரங்கராஜாவுக்குக் கடிதம் எழுதினார். சுமார் பத்தாண்டுகளாகத் தங்கள் நாட கங்களை நாங்கள் நடித்து தருகிறோம்.இதுவரை பல ஆயிரங்களை ராயல்டியாகக் கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் உத் தேசித்து. இப்போது வசூல் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், ராயல்டி தொகையைக் கொஞ்சம் குறைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்குக் கொடுப் பதுபோல நாடகம் ஒன்றுக்குப் பத்து ரூபாய் தாங்கள் நாடகங் களுக்கு அனுப்பி விடுகிறோம். தயவு செய்து அனுமதியுங்கள்” என்று உருக்கமாக எழுதினார். ரங்கராஜு அதற்கு எழுதிய பதில் சிறிதும் அனுதாபம் இல்லாததாகவும் கடுமையானதாகவும் இருந்தது.

“ராயல்டித் தொகையைச் சிறிதும்குறைத்துக் கொள்ளமுடி யாது. முழுத்தொகையையும் முன் பணமாக அனுப்பிவிட்டுத் தான் நாடகம் நடத்த வேண்டும். அதற்கு இஷ்டமில்லா விட் டால் என் நாடகத்தை நிறுத்திவிடலாம்.”

இவ்வாறு எழுதப் பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் கடிதத்தைக் கண்டதும் எங்கள் மனம் சொல்லொன வேதனை அடைந்தது. நாங்கள் நால்வரும் நீண்டநேரம் விவா தித்தோம். இறுதியாக இனிமேல் என்றுமே ரங்கராஜுவின் நாடகங்களை நடிப்பதில்லை யென்று முடிவு செய்தோம். அதே வேகத்தில் புதிய சமுக நாடகங்களை நடத்தத் திட்டமிட்டோம்.

தலைவர் காமராஜ் தலைமை

அரசியல் தலைவர்கள் பல்வேறு கட்சியினராயினும் அவர்கள் அனைவருடனும் எங்களுக்கு நெருங்கிய பழக்கமுண்டு. என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று சில லட்சியங்களைக் கடைப் பிடிப்பவன் நான். அவற்றுக்கு மாருன கருத்துக்கொண்டவர் களோடும் நான் பகைமை கொள்வதில்லை. பண்புடனேயே பழகு வேன். தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடம் எனக்குப் பெரு மதிப்புண்டு. அந்த வகையில் தலைவர் காமராஜ் அவர்களிடமும் மட்டப்பாறை வெங்கட்ராமையர் அவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தேன். தலைவர் காமராஜ் அவர்களைத் திண்டுக்கல்விலுள்ள எங்கள் நண்பர் திரு கருப்புச்சாமி அவர்களின் கதர் கடையிலேயே அடிக்கடி சந்தித்து உரையாடியதுண்டு. திண்டுக்கல் தங்கரத்தினம், நீராம் சேஷன், நகரமன்றத் தலைவர் பி. வி. தாஸ், மணிபாரதி, கணேசய்யர் போன்ற தேசீயப் பற்று டைய நண்பர்களோடெல்லாம் எங்களுக்குப் பழக்கமுண்டு. பொதுவாக எங்களுக்கு நண்பர்கள் அதிகம் நிறைந்த நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்று எனச் சொல்லலாம். ‘தேசபக்தி’ நாடகத்தைப் பார்வையிட்டு ஆசி கூறும்படி தலைவர் காமராஜரையும், மட்டப்பாறை வெங்கட்ராமையரை யும் அழைத்திருந்தோம். 20. 11- 37ல் நடந்த தேசபக்தி நாடகத் ‘திற்குத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மட்டப்பாறை வெங்கட்ராமையரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இருவரும் நாடகத்தை மிகவும் பாராட்டினார்கள். அத்துடன் நற்சான்றுகளும் எழுதித் தந்து உதவினார்கள். அந்த நாளில் எங்களுக்கு வசூல் இல்லாது போனலும் இது போன்ற பாராட்டுக்களே மேன்மேலும் இத் துறையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வந்தன.

18. 12. 37ல் பொதுவுடமைக் கட்சிப் பத்திரிக்கையான ஜனசக்திவார இதழுக்காக சந்திரகாந்தா நாடகம் நடிக்கப் பட்டது. அன்று தோழர் ஜீவானந்தம் தலைமை தாங்கிப் பாராட்டினார், அவரது கம்பீரமான ஊக்கம், உணர்ச்சி நிறைந்த பேச்சு மேலும் எங்களை உற்சாகப்படுத்தியது.

சின்னண்ணாவின் நாடகத் திறமை

எங்கள் நால்வரில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி அவர்களுக்கு நாடகம் புனையும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. அப்போது அன்னபூர்ணா மந்திரம் என்னும் மலையாள நாவல் ஒன்றை நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். அது வங்காளியிலிருந்து மொழி பெயர்க்கப் பெற்ற கதை. அந்தக்கதையின் அமைப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியிலிருந்து மொழி பெயர்த்ததாக மலையாள ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எனவே நாங்கள் ‘அன்ன பூர்ணிகா மந்திர்’ என்னும் அதன் இந்திமொழி பெயர்ப்பை வரவழைத்துப் படித்தோம். நாகர்கோவிலில் ஒய்வாக இருந்த நாட்களில் நானும்சின்னண்ணாவும் ஒரளவு இந்தி படிக்கக் கற்றுக் கொண்டோம். மலையாளம், இந்தி ஆகிய இரு மொழி பெயர்ப்புகளின் துணையோடு அந்தக் கதையைத் தமிழ் நாடகமாக எழுதி முடித்தார் சின்னண்ணா. குமாஸ்தாவின் பெண் என்று அந்த நாடகத்திற்கு பெயரிட்டார்.

குமாஸ்தாவின் பெண்

எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சிறப்பு உண்டு. ஒரு எழுத்தாளருடைய நாவலையோ, நாடகத் தையோ அவரது அனுமதியின்றி நாங்கள் நடித்ததே இல்லை. எழுத்தாளருக்குச் சிறப்பளிக்க வேண்டுமென்பது எங்கள் லட்சி யங்களில் ஒன்று. எனவே ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தை எழுதி முடித்ததும் அந்தக் கதையை எழுதியவரைத் தேடி அவரிடம் அனுமதிபெற மிகவும் சிரமப்பட்டோம். இந்தி மலையாள நூல்களில் அதன் மூல ஆசிரியரின் முகவரி இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்ட கல்கத்தா நூல் நிலையத்தின் முகவரி இந்தி நூலில் இருந்தது. எனவே அந்நூல் நிலையத்திற்கு எழுதிக் கதாசிரியரின் முகவரியைப் பெற்றோம். அதன்பிறகு அந்நூலின் ஆசிரியை கிருபாதேவிக்கு ஒரு தொகை கொடுத்து, அதன் உரிமையைப் பெற்று நாடகத்தை அரங் கேற்றினோம். 1937 டிசம்பர் 25ந் தேதி திண்டுக்கல்லில் *குமாஸ்தாவின் பெண் நாடகம் சிறப்பாக அரங்கேறியது. நாடக நுணுக்கங்களை நன்கறிந்த புலவர்கள் பலர் இத்தகையை ஒரு அற்புதமான நாடகம் தமிழ் நாடக உலகில் இதுவரை நடை பெற்றதில்லையெனப் புகழ்ந்தார்கள். பிரசித்தி பெற்ற தேசீயக வி க. ஆ. ஆறுமுகனார் இந் நாடகத்திற்கு அருமையான பாடல் களைப் புனைந்து தந்தார்.

கவி ஆறுமுகனார்

கவி ஆறுமுகளுர் அவர்களைப்பற்றி இங்கே சில வார்த்தை கள் குறிப்பிடுதல் கடமையென எண்ணாகிறேன். ஆறுமுகனார் பழம் புலவர்களின் அடிச்சுவட்டிலேயே பாடல்கள் புனைபவர். யாப்பிலக்கண விதிமுறைகளை முறையாகப் படித்தவர் மகாகவி பாரதி யிடம் அளவற்ற பக்தியுடையவர். யாரதி படிப்பகம் என் னும் பெயரால் தாம் வாழும் இராமலிங்கம்பதியிலே ஒரு படிப்ப கம் நிறுவி, நிரந்தரமாக ஹரிஜனத் தொண்டு புரிந்து வருபவர். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற நல்ல தியாகி. சிறந்த பண்புடையவர். குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் இவர் எனக்கு அறிமுகமானார். அதன் பின் தயாரான வித்தியாசாகரர், மற்றும் பல நாடகங்களுக்கும், ஏற்கனவே நடைபெற்று வந்த பழைய நாட கங்களுக்கும் இவர் பாடல்கள் புனைந்தார். எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்களைப் பற்றி ஏராளமான கவிதைகள் பாடியிருக் கிறார். எனக்கு எழுதும் கடிதங்கள் பலவற்றையும் இவர் கவிதை யாகவே எழுதுவார். என்னுடன் ஆண்மீக உறவு கொண்டுள்ள நண்பர்களில் இவரும் ஒருவர்.

கே. ஆர். சீதாராமன்

குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. அப்போது எங்கள் குழுவில் முக்கிய பெண் வேடங்களைப் புனைந்து வந்தவர் கே. ஆர். சித்தாராமன் என்ற இளைஞர். இவர் நன்றாகப் பாடும் திறமையுடையவர். மிகுந்த சுறுசுறுப்புள்ளவர். குமாஸ்தாவின் பெண்ணில் கதா நாயகி சீதையாக இவர் நடித்தார். ரசிகர்களில் பலர் இவரைப் பெண்ணென்றே எண்ணி ஏமாற்றம் அடைந்தனார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக இவர் திறம்பட நடித்தார். எனக்கு மகளாகவும், மனைவியாகவும், மாதாவாகவும் நடித்த பெருமை இவருக்குண்டு. நடிப்பதில் மட்டுமல்ல, நாடகத்தை மேடையில் உருவாக்குவதிலும் இவருக்கு நிறைந்த ஆற்றல் உண்டு. எங்கள் நாடகக் குழுவில் சட்டாம்பிள்ளை ஸ்தானத்தில் இவர் நீண்ட காலம் பணி புரிந்திருக்கிரு.ர். நாடகம் சிறப்பாக நடைபெற வேண்டு மென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். பெண்களே பெண் பாத்திரங்களை நடிக்கத் தொடங்கியபின் பல் வேறுப்பட்ட ஆண் பாத்திரங்களையும் தாங்கி நடித்துப் புகழ் பெற்றார் இவர்.

1948இல் நாங்கள் கோயமுத்துTரில் இருந்தபோது பில்ஹணன் படப்பிடிப்பிற்காக நான்இரவு நேரங்களிலும் ஸ்டுடியோ வில் இருக்க நேர்ந்தது.அந்தச் சமயங்களில் சேர்ந்தாற்போல் பதி னேந்து நாட்கள் எனக்குப் பதில் ஒளவையார் வேடத்தை, சீதா ராமன் ஏற்றுத் திறம்பட நடித்தார். நானே சிலநாட்கள் அவரது ஒளவையார் நடிப்பைச் சபையில் வீற்றிருந்து பார்த்து பெருமிதம் அடைந்தேன். 1955இல் நாங்கள் தயாரித்த இராஜராஜ சோழன் நாடகத்தில் கதானாயகன் வீர விமலாதித்தனாக நடித்து மங்காத புகழைப் பெற்றார் கே. ஆர். சீத்தாராமன். இவருடைய நாடக நடிப்பினைப் பாராட்டித் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் இவருக்குக் கலைமாமணி என்ற விருதினை வழங்கியுள்ளது.

எம். எஸ். திரெளபதி

திண்டுக்கல் முடிந்து தாராபுரம் வந்தோம். தாராபுரத்தில் நல்ல வசூலாயிற்று. ஆனால் நகரசபை அதிகாரிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது. அதனால் நீண்ட காலம் நாடகம் நடத்த முடியாமல் திருப்பூருக்கு வந்தோம். திருப்பூரில் எம். எஸ். திரெளபதி எங்கள் குழுவில் சின்னஞ்சிறுமியாக வந்துசேர்ந்தாள். அதற்கு முன்பும் எங்கள் குழுவில் சுசீந்திரம் கோமதி, மீனாட்சி முதலிய நடிகையர் இருந்தார்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். என்றாலும், நீண்டகாலம் பாலர் குழுவில் இருந்த முதல் தர நடிகையாக எம். எஸ். திரெளபதியைத்தான் குறிப்பிட வேண்டும். திரெளபதி நன்றாக பாடுவாள். அவள் முதன் முதலாகப் போட்ட வேடம் பபூன். ‘மஞ்சள் குருவி ஊஞ்ச லாடுதே’ என்னும் பாடலைப் பபூகை வந்து அவள் பாடும் போது சபையோர் தம்மை மறந்து கைதட்டி ஆரவாரிப்பார்கள். இராமாயண நாடகத்தில் குரங்குகளின் நடனம் உட்பட எல்லாக் கோஷ்டி நடனங்களிலும் திரெளபதி கலந்துகொள்வாள். சிறுவர் களிடையே அரைக்கால் சட்டையோடு நின்று கொண்டிருக்கும். அவளைப் பெண்ணாகவே யாரும் எண்ணவில்லை. ஒரே ஒரு பெண்ணை குழுவில் வைத்துக் கொண்டு அவளுக்குப் பிரத்தியேக வசதிகளைச் செய்து கொடுப்பது சிரமமாக இருந்தது. பெரியண்ணா அவளை விலக்கிவிட எண்ணினார். எனக்கு அவள் திறமையில் அபார நம்பிக்கை இருந்ததால் அவள் எதிர்காலத்தில் கம்பெனியின் சிறந்த நடிகையாக விளங்குவாளென்று அண்ணாவிடம் உறுதி கூறினேன். அதன் பிறகு அவளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. திரெளபதி பிற்காலத்தில் நான் எதிர்பார்த்த படி எங்கள் சபையின் முதல்தர நடிகையாக விளங்கினாள். வீரம், காதல், சோகம் ஆகிய எச்சுவையையும் அதற்குரிய மெய்ப்பாட்டுணர்ச்சியுடன் திறம்பட நடித்துப் பெரும் புகழ் பெற்றாள். குமாஸ்தாவின் பெண், வித்யாசாகரர், ராஜா பர்த்ருஹரி பில்ஹணன், உயிரோவியம், முள்ளில் ரோஜா, அந்தமான் கைதி மனிதன் முதலிய நாடகங்களில் திரெளபதியின் அற்புதநடிப்பை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் திரெளபதியின் சிறந்த நாடக நடிப்பினைப் பாராட்டி கலைமாமணி என்னும் விருதினை வழங்கியுள்ளது.

வித்யாசாகரர்

திருப்பூரில் மற்றொரு புதிய நாடகம் தயாராயிற்று. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் வித்யாசாகரர் என்னும் நாவலை ஒரு சிறந்த நகைச்சுவை நாடகமாக எழுதினார் சின்னண்ணா. இக் நாடகம் 23. 6. 38இல் அரங்கேறியது. வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறந்த நாடகம் வித்யாசாகரர். இதில் நான் வித்யாசாகரராக நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்தேன். ஏற்கனவே நடைபெற்று வந்த சமுதாய நாடகங்களில் குறைந்தது முப்பது பாடல்களாவது இருக்கும். ஆனால் புதிதாக தயாரித்த குமாஸ்தாவின் பெண் வித்தியாசாகரர் நாடகங்களில் பாடல்களே வெகுவாகக் குறைத் தோம். அதை ஒரு குறையாக கூடப் பொதுமக்கள் அந்நாளில் குறிப்பிட்டார்கள். வித்தியாசாகரர் நாடகத்திற்கு மொத்தம் பத்தே பாடல்கள்தாம் பாடப்பெற்றன. ஏற்கனவே நடைபெற்று வந்த நாடகங்களிலும் பல பாடல்கள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக, எல்லோரும் பாடத் தெரிந்திருக்க வேண்டு மென்ற கம்பெனியின் நீண்டநாள் கட்டுப்பாடு சிறிது தளர்ந்தது. சுமாராகப் பாடிக்கொண்டிருந்த நடிகர்கள் சிலரும் பாடுவதையே மறந்துவிட்டார்கள். ஒரு சிலர் பாடுவதற்கே வெட்கப்பட்டார்கள். நாடக மேடையில் பாடலுக்கு இருந்து வந்த ஆதிக்கம் ஆட்டம் கொடுக்கத் தொடங்கியது.

அறிவுச்சுடரும் அறிவு அபிவிருத்திச் சங்கமும்

நாடக மேடையையும், வேடிக்கை விளையாட்டையும் தவிர வேறு எதையும் அறியாதிருந்த நடிகர்களிடையே பொது அறிவு மலருவதற்காகச் சங்கம் ஒன்று தோற்றுவித்தேன். அறிவு அபி விருத்திச் சங்கம் என்பது அதன் பெயர். பல்வேறு நூல்களையும் பத்திரிகைகளையும் சங்கத்தில் வாங்கிப் போட்டேன். நடிகர்கள் உற்சாகத்தோடு படிக்கத் தொடங்கினார்கள். நான் எண்ணியபடி நடிகர்களின் பொது அறிவு மலர்ந்தது. நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களைப் பற்றியும் உலக நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொற் போர் நிகழ்த்தும் அளவுக்கு நடிகர்கள் பயிற்சி பெற்றார்கள். பண்ணுருட்டியில் 1934இல் நிறுத்தப் பெற்ற மாதக் கையெழுத்துப் பத்திரிகையாகிய அறிவுச்சுடர் மீண்டும் வார இதழாக மறு மலர்ச்சிபெற்றது. நடிகர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். நன்றாக எழுதவும் திறமை பெற்றார்கள். எழுதப் படிக்கத் தெரியாமல் கம்பெனியில் சேரும் இளைஞர்கள் பலர். அவர்களின் அறிவுப்பசியினைப் போக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம். சுந்தரமூர்த்தி என்னும் தமிழாசிரியர் ஒருவரையும் தேவராஜு என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவரையும் மாதச் சம்பளத்திற்குக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் . அவர்கள் காலையிலும் மாலையிலும் பாடம் சொல்லித்தர வேண்டும். இரவு நேரங்களில் தேவைப்பட்டால் அரங்க வாயில்களில் நிற்க வேண்டும். இவை போன்ற பொது அறவு வளர்ச்சிக்குரிய முயற்சிகளெல்லாம் எங்கள் குழுவிலேதாம் நடை பெற்றன என்று சொல்லிக்கொள் வது எங்களுக்குப் பெருமையல்லவா? நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கடிகமணி டி.வி. நாராயணசாமி, நக்கீரர், என். எஸ். காராயணபிள்ளை, தம்பி பகவதி, பிரண்டு ராமசாமி மற்றொரு சிறந்த நடிகர் சி.வி. முத்து முதலிய பலர் அறிவுச் சுடரில் தொடர்ந்து கட்டுரை கதைகள் எழுதி, நன்கு பயிற்சி பெற்றார்கள். இப்போது அறிவுச் சுடர், வாரப் பத்திரிகையாதலால் எனக்குச் சிறிதும் ஒய்வே கிடைப்பதில்லை. ஆங்கிலம் பயில எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. பகல் உணவுக்குப்பின் உறங்குவதைக் கூட நிறுத்தி விட்டேன். எல்லோரும் இரவு நாடகத்தை முன்னிட்டு உறங்குவார்கள். நான் அமைதியாக அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். அறிவுச் சுடரை வாரந் தோறும் தவறாமல் வெளியிட்டு வந்தேன்.

இம்முறை ‘அறிவுச் சுடர்’ பத்திரிகையினுல் குழப்பம் எதுவும் உண்டாகவில்லை. நடிகர்கள் அனைவரும் உற்சாகமாக எழுதி வந்தார்கள். வாரந்தோறும் இரண்டு பிரதிகளை எழுதி வெளியிடுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எல்லோரும் புனே பெயரிலேயே எழுதி வந்ததால் பத்திரிகை எழுதும் பொறுப்பை மற்றவரிடம் விடவும் முடியவில்லை. இரவு நாடகம் முடிந்து உறங்குவதற்கு மூன்று மணியாய்விடும். காலையில் மற்ற நடிகர்களைப் போல் பத்து மணிவரை உறங்கும் பழக்கமும் எனக் கில்லை. ஆறுமணிக்கே எழுந்துவிடுவேன். பகல் உணவுக்குப்பின் வழக்கமாக மூன்று மணிநேரம் உறங்குவேன். இப்போது அந்த நேரத்தில் பத்திரிகை எழுத நேர்ந்ததால் பகல் உறக்கம் இல்லாமல் போய் விட்டது. எனவே, இரவுநாடகத்தின் போது கொட்டாவி விடத்தொடங்கினேன். சில சமயங்களில் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன. இந்நிலையில் கம்பெனி சேலம், ஆம்பூர் முதலிய ஊர்களுக்குச் சென்றது.

ஜீவானந்தம் பாடல்கள்

தோழர் ஜீவானந்தம் அடிக்கடி எங்களோடு வந்து தங்கு வாறென்று முன்னல் குறிப்பிட்டேனல்லவா?இது பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டியது என் கடமையாகும். அவர் எங்க ளோடு தங்கியிருந்த நாட்களில் புதிது புதிதாகப் பல பாடல்களை இயற்றியதுண்டு. எல்லோரும் பாடும்படியான எளிய மெட்டுகளிலேயே பாடல்கள் அமைய வேண்டுமென்பது அவர் விருப்பம். எங்கள் நாடகங்களிலுள்ள புதிய மெட்டுகள் சிலவற்றை நான் பாடுவேன், கோவைத் தோழர் ராமதாஸ் திரைப்படப் பாடல்களைப் பாடுவார். அந்த மெட்டுகளிலெல்லாம் ஜீவா உடனுக்குடன் பிரசாரப் பாடல்கள் புனைந்து தருவார். அப்படி ஜீவா பாடிய பாடல்கள் எத்தனை எத்தனையோ!

    சிவபெருமான் கிருபை வேண்டும்-அவர்
    திருவருள் பெற வேண்டும்
    வேறென்ன வேண்டும்
இந்தப் பாடல் தியாகராஜ பாகவதர் அவர்களால் திரைப் படத்தில் பாடப் பெற்றது. அந்தக் காலத்தில் பொதுமக்கள் எல்லோருடைய நாவிலும் நின்றது. இதே மெட்டில் ஜீவா பாடினார்.

    பொதுவுடமை பெற வேண்டும்-உடன்
    புரட்சி செய்திட வேண்டும்
    வேறென்ன வேண்டும்
    (பொது)
இந்தப்பாடலை நான் எங்கள் தேசபக்தி நாடகத்திலே ஒரு காட்சியில் இணைத்துப் பாடினேன்.

    நானோர் தொழிலாளி-ஒரு
    நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை
    ஏனோ புவி வாழ்வு?

மிக உருக்கமான பாடல் இது. இப்பாடலைப் பதிபக்தி நாட கத்தில் தேயிலைத் தோட்டக் காட்சியிலே நான் பாடுவேன். சபை யோரில் சிலர் கண்ணிர் விட்டு அழுவதைப் பலமுறை பார்த் திருக்கிறேன். ஜீவாவின் பாடல்களில்,

    “ஏழைத் தொழிலாளர் வாழ்வு இன்பம் சூழ்கவே”
    “காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை”

ஆகிய இரு பாடல்களும் அந்நாளில் நான் பாடிய பாடல் களில் சிறப்பும், முதன்மையும் பெற்ற பாடல்களாகும். சபையோர் இவ்விரு பாடல்களையும் விரும்பிக் கேட்பது வழக்கம். எனவே, எந்த நாடகம் நடந்தாலும் இந்தப் பாடல்களை நான் அடிக்கடி பாட நேர்ந்தது.

மயில்ராவணனில் தொழிலாளர் வாழ்வு

ஒருநாள் மயில்ராவணன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையிலிருந்து ஏழைத் தொழிலாளர் வாழ்வு என்ற குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் காலுக்குச் செருப்புமில்லை என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். “இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்” என்றேன். மக்கள் என் பேச்சைக் கைதட்டி வரவேற்றார்கள். நாடகம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக் கலைந்து சென்றனார்.
---------------

42. சீர்திருத்த நாடகக் கம்பெனி


இக்காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது சீர்திருத்த நாடகக் கம்பெனி என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடைபெற்று வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர் முதலிய சமூக, தேசீய நாடகங்களே அதிகமாக நடைபெற்று வந்தன. ரங்கராஜு நாடகங்களை அறவே நிறுத்தி விட்டதால், இடையிடையே சுவாமிகளின் புராண, இதிகாச நாடகங்களையும் நடத்தி வந்தோம். இவ்விரு வகை நாடகங்களுக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. எப்போதாவது இராமாயணம், மனோஹரா போட்டால் அதற்கு மட்டும் கொஞ்சம் வசூல் ஆகும். சுவாமிகளின் நாடகங்களில் பாடல்கள் முக்கியமாதலால் நன்றாகப் பாடக் கூடிய இளைஞர்கள் அதிகமாக இல்லாத நிலையில் அவற்றிற்கு வரவேற்பு இல்லை. மறு மலர்ச்சி உற்சாகத்தில் பாடல்களைக் குறைத்து வந்த எங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு உற்சாகம் அளிக்கவில்லை. இருந்தாலும் பேருக்கு நடத்திக் கொண்டிருந்தோம்.

ஸ்ரீ கிருஷ்ண லீலா

அப்போது எங்கள் குழுவின் முக்கிய நடிகராக இருந்த நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகத்தைச் சிறந்த காட்சியமைப்புகளோடு நடத்த வேண்டுமென யோசனை கூறினார். ஏற்கனவே ஸ்ரீ கிருஷ்ண லீலாவை நடத்தி யிருக்கிறோம். என்றாலும், அவ்வளவு ஆடம்பரமாக நடைபெற வில்லை. ஆம்பூரில் இரண்டு சினிமாவும் சர்க்கஸும் எங்களுக்குப் போட்டியாக இருந்தன. நிர்வாகச் செலவும் அதிகரித்தது. பெரிய பெரிய விளம்பரங்களிடையே நாடக விளம்பரம் மங்கியது. நாடகங்களுக்கு நல்ல பேர். ஆனால் அதற்கு தக்க வருவாய் இல்லை. கண்கவர் காட்சிகளையும் வனப்பு மிக்க உடைகளையும் மக்கள் விரும்பினார்கள். ஆடம்பரமும் விளம்பரமும் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்தோம். சீர் திருத்த தேசீய நாடகங்களை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாப் போட்டியைச் சமாளிக்க இயலவில்லை. எனவே வருவாய் முழுவ தையும் செலவிட்டு ஸ்ரீ கிருஷ்ண லீலாவைத் தயாரித்தோம். ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதற்கொப்ப பழைய கிருஷ்ண லீலாவுக்குப் புது மெருகிட்டோம். நாடகம் ஆடம்பரத் தோடு அரங்கேறியது.

தினசரி நாடகம்-தரை இரண்டணா

மாதம் பதினைந்து நாடகங்கள் நடத்துவது தான் வழக்கம். செலவினங்கள் அதிகரித்ததால் பல கம்பெனிகள் தினசரி நாடகம் நடத்தும் முறையைக் கையாண்டன. அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியதால் நீண்ட காலமாக நாங்கள் இந்த வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. வேறு வழியில்லாததால் கால வெள்ளம் எங்களையும் அதில் இழுத்துச் சென்றது. ஸ்ரீ கிருஷ்ண லீலா ஆம்பூரில் தினசரி நாடகமாக நடந்தது. அதுவரை நான்கணாவுக்குக் குறைவாகக் கட்டணம் போட்டதே இல்லை. ஸ்ரீ கிருஷ்ண லீலாவுக்குத் தொடக்கத்திலிருந்தே தரைக்கு மட்டும் இரண்டணா கட்டணம் வைத்தோம். கட்டணம் இரண்டணா என்றதும் தாய்மார்கள் கூட்டம் பிரமிக்கக்கூடிய அளவுக்கு வந்து கொட்டகையை முற்றுகையிட்டது. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாகக் கிடைக்காதிருந்த ஓய்வு கிருஷ்ண லீலாவில் கிடைத்தது. நானும் டிக்கட் விற்கும் அறையில் உட்கார்ந்து கணக்குப் பிள்ளைக்கு உதவியாக டிக்கெட் விற்றேன். ஜனங்கள் கட்டம் சொல்லி முடியாது. எங்களுக்கு வேறென்ன வேண்டும்? ஒரே குதூகலம்!

திறமை மிக்க நடிகர்கள்

கம்பெனியிலிருந்த நல்ல நடிகர்களின் திறமை ஸ்ரீ கிருஷ்ண லீலாவில் பரிமளித்தது. அப்போது பாஸ்கரன், கருணாகரன், கிருஷ்ணன் என்ற மூன்று சகோதரர்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். அவர்களில் கருணாகரன், அப்போது சின்னஞ்சிறுவராக இருந்தார்.அவர் வெண்ணெய் திருடும் கண்ணளுகத் தோன்றி அற்புதமாக நடித்தார். கோவிந்தராஜன் அப்போது கம்பெனி யின் குட்டி நகைச்சுவை நடிகராக விளங்கினார். இவருடைய மெலிவான உடலைக்கண்டு நடிகர் எல்லோரும் இவரைக் ‘காமா’ என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள். காமா என்ற பெயரோடு ஒரு பெரிய பயில்வான்-குஸ்தி வீரர் இருந்தாரல்லவா? அந்தப் பெயரால் இந்த எலும்புருவத்தை வேடிக்கையாக அழைத்தோம். இவர் கிருஷ்ணனோடு விளையாடும் ராமனாகத் தோன்றி எங்களையும், சபையோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார். கே. ஆர். ராமசாமியும், தம்பி பகவதியும் பயங்கர கம்சனக நடித்தார்கள். இருவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வேடம் புனைவார்கள். நகைச்சுவை நடிகர் சிவதானு நடன ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்பு காரைக்குடியில் கிருஷண லீலாவைத் தயாரித்தபோது பிரபல நடன ஆசிரியர் தர்மாஞ்சலு நாயுடு கம்பெனியில் இருந்தார். அப்போதே சிவதாணு நாயுடுவின் பிரதம மாணவராக விளங்கினார். இடையே நாயுடு கம்பெனியை விட்டுப் போய் விட்டதால் நடனப் பொறுப்பு முழு வதையும் அதன் பிறகு சிவதானுவே ஏற்றுக் கொண்டார். கிருஷ்ண லீலாவில் பல நடனங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சிவதானு சிரத்தையோடு சொல்லி வைத்தார். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடிகர்கள் உற்சாகத்தோடு நடித்தார்கள். கிருஷ்ண லீலா நாடகம் எங்களுக்கு புது நம்பிக் கையை உண்டாக்கியது. இரண்டாவது கிருஷ்ணகை நடித்த இளைஞர் ஜெயராமனுக்கு நல்ல இனிமையான குரல்; திக்குவாய். பேசும் போது திக்கித் திக்கித்தான் பேசுவார். பாடும் போது மட்டும் அவர் திக்குவாய் என்பதே தெரியாது. அருமையாகப் பாடுவார். நன்முக நடிப்பார். எல்லோரும் சேர்ந்து கிருஷ்ண லீலா நாடகத்தைச் சிறப்பித்தார்கள். ஆம்பூர் நாடகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சித்துார் சென்றோம்.

சித்துரரில் தமிழ் நாடகம்

சித்தூர் அப்போது சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருந்தது. மொழிவாரி ராஜ்யம் பிரிக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசம் உருவான
போது, தமிழகத்தைச் சேரவேண்டிய சித்துார் மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்த்துக்கொண்டார்கள். இந்த அநீதத்தை எதிர்த்துத் தமிழரசுக் கழகம் பெரும் போராட்டம் நடத்தியபிறகு அதில் ஒரு பகுதியாகிய திருத்தணி தாலுகா இப்போது நமக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. சித்துரர் மக்களில் பெரும்பாலோர் தமிழர்கள். நெல்லூர், சித்தூர் முதலிய நகரங்களில் எல்லாம் அந்த நாளில் தமிழ் நாடகங்கள் மாதக்கணக்கில் வெற்றிகரமாக நடை பெற்றிருக்கின்றன. ஆந்திரர்களோடு போராடி நியாயத்திற்காக வாதாடும் ஆற்றல் நம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இல்லாததாலும் இந்த உரிமையை அறிவுறுத்தும் முறையில் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டங்களுக்குக் காங்கிரஸ் அமைச்சர்களின் தார்மீக ஆதரவு கூட இல்லாததாலும்தான் அந்தத் தமிழ்ப்பகுதிகளை நாம் இழக்க நேர்ந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமருங் காலத்தில் இழந்த திருப்பதி வேங்கட எல்லையை மீண்டும் பெற்று மகாகவிபாரதி கூறியபடி “குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'’ நம் தாயகமாக அமைய வேண்டுமென்பதே என் கருத்தாகும்.

சித்துாரில் இரண்டு மாதங்கள் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினோம். அது வேறுமொழி பேசப்படும் பகுதி என்னும் எண்ணமே எங்களுக்கு ஏற்படவில்லை. சித்துரரில் கிருஷ்ண லீலாவுக்கு மேலும் புதிய உடைகள் தயாராயின. எல்லா நாடகங்களையும் விட கிருஷ்ண லீலாவுக்கு அமோகமான வசூலாயிற்று. வந்தவருவாய் முழுவதும் காட்சிகள் உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட்டோம்.

நாடகம் தினசரி நடைபெறத் தொடங்கிவிட்டதால் ‘அறிவுச்சுடர்’ பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது சிரமமாகி விட்டது. இதற்காக இரவும் பகலும் கண் விழிக்க நேர்ந்ததால் உடல் நலம் குன்றியது. ஏற்கனவே இருந்து வந்த கைவலி அதிகமாயிற்று. எனவே 1.10.38ல் வெளியிட்ட இதழோடு பத்திரிக்கையை நிறுத்திக்கொண்டேன்.

இளைய தங்கையின் திருமணம்

அடுத்தபடியாக வேலூருக்கு வந்தோம். அங்கும் நல்ல வசூலாயிற்று. இராமாயணத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த நாடகமே பலமுறை வைக்கப்பெற்றது. வேலூரில் இருந்த போது எங்கள் இளைய தங்கை காமாட்சியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்காகப் பெரியண்ணா நாகர்கோவில் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். வேலூர் நாடகம் முடிந்து திருவண்ணாமலை போவதாக முடிவு செய்யப்பட்டது. எல்லோரையும் திருவண்ணாமலைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் நால்வரும் பாளையங்கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். 1939ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாளையங்கோட்டையில் இளைய தங்கை செல்வி காமாட்சிக்கும் செல்வன் சண்முகசுந்தரம் பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது. என்னுடைய திருமணத்திற்கும் பெரியண்ணா இதையடுத்து ஏற்பாடு செய்வதாக அறிந்தேன். இந்தச் சூழ் நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையென்று உறுதியாகக் கூறி விட்டதால் அம்முயற்சி கைவிடப் பட்டது. தங்கையின்திருமணம் நிறைவேறியதும் நாங்கள் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.

மறுமலர்ச்சி நாடகாசியா மறைவு

திருவண்ணாமலையிலும் கம்பெனிக்குநல்லவசூலாயிற்று. அப்போதெல்லாம் நான் அடிக்கடி வெளியேபோய் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வேன். பெரியண்ணா இதுபற்றி வருத்தப்படுவதாக அறிந்தேன். “ஒன்று நாடகத்தில் முழுதும் ஈடுபட்டு வேலை செய்யவேண்டும். அல்லது அரசியலிலேயே முழுநேரத்தையும் செலவிடவேண்டும். இரண்டுங்கெட்டானாக இருதுறை களிலும் காலை வைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று பெரியண்ணா கண்டித்ததாகக் கூறினார்கள். என்போக்கு தவறென்று எனக்குப் பட்டது. அன்று முதல் வெளியே பொது இடங்களில் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

திருவண்ணாமலையில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் எங்கள் அன்புக்குரிய வாத்தியார் கந்தசாமி முதலியார் காலமானதாகச் செய்திகிடைத்தது. 1939 மார்ச் 8ஆம் நாள், நாடகத்துறையிலே மறுமலர்ச்சி கண்ட அந்தப் பெருந்தகையின் ஆவி பிரிந்தது. உடனே சென்னைக்கு விரைந்தேன். அவரது புதல்வர் எம். கே. ராதா என்னைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். ஆசிரியர் முதலியார் அவர்கள் என்பால் அளவற்ற அன்புடையவர். ‘நான் சொல்லிக் கொடுப்பதை என் இஷ்டப்படி நடித்துக் காட்டுபவன் சண்முகம்’ என்று தமது புதல்வரிடம் அடிக்கடி கூறுவாராம். மரணத் தருவாயில் கூட ‘ஷண்முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாக நண்பர் எம். கே. ராதா கூறிக் கண்ணிர் விட்டார். இரண்டு நாள் தங்கி ராதாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.

மேனகா பேசும் படமாக வெளிவந்த பிறகு எங்கள் நாடக மேனகாவுக்கு வசூலாவதில்லை. திரையில் தோன்றிய நடிகையரையே நாடகத்திலும். எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கே. டி. ருக்மணியையும், எம். எஸ். விஜயாளையும் ஸ்பெஷலாக வரவழைத்து நடிக்க வைத்தோம். திரைப்படத்தில் போட்ட நூர்ஜஹான், மேனகா வேடங்களிலேயே மேடையிலும் தோன்றி அவர்கள் நடித்தார்கள். கே. டி. ருக்மணி மனோஹரன் நாடகத்தில் என்னோடு விஜயாளாகவும் நடிந்தார். ஒவ்வொரு ஊரிலும் மனோஹரன் மேனகா நாடகங்களைச் சேர்ந்தாற்போல் வைத்துக்கொண்டு இவ்விரு நடிகையரையும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.

கலைவாணர் மனத் தாங்கல்

திருவண்ணாமலையிலிருந்து நான் சென்னைக்குச் சென்றிருந்த போது என். எஸ். கிருஷ்ணனுடன் தங்கவும், நீண்ட நேரம் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் மேனகா நாடகத்தில் சாமா ஐயராக நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றிக்குறை கூறினார். அழைத்தால் எப்போதும் வரச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தார். “கே. டி. ருக்மணி, எம். எஸ். விஜயாள் இருவரையும் ஸ்பெஷலாக அழைத்துப் போகும்போது உங்களோடு என்றும் உரிமையுள்ளவனான என்னைமட்டும் பெரியண்ணா ஏன் அழைக்கவில்லை?’’ என்று கூறி வருத்தப் பட்டார். எனக்கும் அது சரியாகவே தோன்றியது. நான் சென்னையிலிருந்து திரும்பியதும் அவர் என்னிடம் கூறியதைப் பெரியண்ணா காதில் போட்டு வைத்தேன். திருவண்ணமலை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

மனத்தாங்கல் வளர்ந்தது

காரைக்குடியில் நாங்கள் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை. நல்ல வசூலாகும் என்று எதிர்பார்த்த ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகமும் தோல்வி யடைந்தது. அப்போது என். எஸ். கிருஷணனுக்குத் திரையுலகில் அபார மதிப்பிருந்தது. அவரை அழைத்து மேனகா நாடகம் போடலாமென நானும் பகவதியும் பெரியண்ணாவுக்கு யோசனை கூறினோம். பெரியண்ணா அதுபற்றிச் சிந்திப்பதாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் நாங்கள் சற்றும் எதிர்பாராதபடி என். எஸ் கிருஷ்ணன் காரைக்குடிக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சில மணி நேரத்தில் அவரே கம்பெனி வீட்டுக்கும் வந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அவரை அன்புடன் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா வழக்கம்போல் தம் அறையில் அமர்ந்து கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார். என். எஸ். கே. எங்களோடு சிறது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்று பெரியண்ணாவை வணங்கினார். அவர் எப்பொழுதும் புன்னகையுடன் பதில் வணக்கம் புரிந்து விட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசினார். மீண்டும் கணக்கில் கவனத்தைச் செலுத்தினார். இது என். எஸ். கே.க்குப் பிடிக்கவில்லை. தம்மைச் சரியாக வரவேற்று அன்பு காட்டவில்லை யென்று அவர் எண்ணிக் கொண்டார். கம்பெனி வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம். ஆனால் வேறு அவசர அலுவல் இருப்பதாகக் கூறி அவர் புறப்பட்டு விட்டார். காரைக்குடியில் எங்களுக்கும் அவருக்கும் வேண்டிய சில நண்பர்கள் இருந்தார்கள். பெரியண்ணா ஏற்ற முறையில் தம்மை வரவேற்க வில்லையென்று அவர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக அறிந்தோம். இந்தச் செய்தி என் செவிக்கு எட்டியதும் நான் கலைவாணருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில், அவரைப் பழைய கிருஷ்ணனாகவே எண்ணிப் பண்புடன் வரவேற்றதாகவும், பிரசித்த பெற்ற திரைப்பட நட்சத்திரம் என்ற முறையில் ஒரு தனி மரியாதை காட்டும் இயல்பு எப் போதுமே பெரியண்ணாவிடம் இல்லையென்பதையும் நினைவு படுத்தி யிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு என்.எஸ் கே. யிடமிருந்து பதில் வரவே இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னைப் போலவே கே. ஆர். ராமசாமியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதை என்னிடமும் காண்பித்தார். இந்த விபரங்களையெல்லாம் அறிந்ததும் பெரியண்ணா மிகவும் வருத்தப் பட்டார். இந்த நிலையில் அவரை அழைத்து மேனகாவில் நடிக்க வைக்கப் பெரியண்ணா விரும்பவில்லை. “தேவையற்ற ஆடம்பர மரியாதைகளையெல்லாம் நீண்ட காலம் பழகிய நம்மிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை நாம் எப்படி அழைப்பது? அவருக்குத் தனி மரியாதை செய்யவோ, கெளரவிக்கவோ எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின் என். எஸ். கே. யை நாடகத்திற்கு அழைக்கும் எண்ணத்தையே கைவிட நேர்ந்தது.

இலட்சிய வெற்றி

காரைக்குடியில் வசூல் நிலை மிகவும் மோசமாக இருந்த தென்று குறிப்பிட்டேனல்லவா? இதற்காக அடிக்கடி யாராவது ஒரு பிரமுகரைத் தலைமை தாங்கச் செய்தோம். ஒருநாள் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்திற்குத் தோழர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏறத்தாழ அரை மணிநேரம் நாடகக் கதையையும் அதனை நாங்கள் நடிக்கும் சிறப்பினையும் வியந்து பேசினார். பேச்சின் முடிவில்,

“இன்று இந்த அற்புதமான நாடகத்தைக் காண மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். காலம் மாறத்தான் போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் இதே நாடகத்தைக் கண்டு மகிழப் போகிறார்கள் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினார். ஜீவாவின் இந்தத் தீர்க்கதரிசனம் 1940-ஆம் ஆண்டில் உண்மையாகவே நிறைவேறியது. ஆனால் அப்போது ஜீவா தலைமறைவாக இருந்தார், ஆம்; அவருடைய மகிழ்ச்சிக் கடிதம் எனக்கு மதுரையில் கிடைத்தது.

மற்றொரு நாள் காரைக்குடி நகரக் காங்கிரஸ் பிரமுகர் சா. கணேசன் குமாஸ்தாவின் பெண் நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகக் கதை அவரது இதயத்தை மிகவும் கவர்ந்தது. நாடகத்தைப்பற்றி மேடையில் பேச விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். வழக்கம் போல் நாடகம் முடிவதற்கு ஒரு காட்சி இருக்கும்போது பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கு ஒப்பவில்லை. “சுவையான கதையினிடையே நான் பேச மாட்டேன். நான் பேசுவதாக அறிவித்து விடுங்கள். சபையோர் கலையமாட்டார்கள்” என்று கூறினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது, அப்படி ஒரு போதும் இதற்குமுன் யாரும் பேசியதில்லை. என்றாலும் அவர் கூறியபடியே நாடகம் முடிந்தபின் நகரக் காங்கிரஸ் தலைவர் திரு சா. கணேசன் பேசுவார் என்பதை அறிவித்தோம். நாடகம் முடிந்தது. சா. கணேசன் மேடைக்கு வந்து பேசினார். சபையோர் கலைந்து விடுவார்கள் என்று நாங்கள் பயந்தோம்.என்ன ஆச்சரியம்! ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எல்லோரும் அவர் பேச்சு வன்மையிலே கட்டுண்டு அமைதியாக இருந்தார்கள். அன்றைய வசூல் என்ன தெரியுமா? நூற்றி இருபத்தி நான்கு ரூபாய்கள்! இந்தக் குறைந்த வசூலிலும் அஞ்சாமல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பலமுறை நடித்தோம். இலட்சிய வெற்றியையே பெரிதாக மதித்தோம். “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் (Workers’ of the World, Unite) என்ற பொன்மொழியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் திரையில் எழுதி வைத்தோம். இந்தப் பொன் மொழி சில தனவந்தர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்! கம்பெனி எங்கோ பொதுவுடைமைப் பாதையில் செல்வதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள் போல் இருக்கிறது. கட்டுப்பாடாக நாடகங்களைக் காண மறுத்து விட்டார்கள். நல்லவர்களின் அமோகமான பாராட்டுக்கள் இருந்தன. நாடகங்கள் சிறந்த முறையில் நடைபெற்றன. காரைக்குடியிலிருந்து வெளி வரும் திரு சொ. முருகப்பாவின் ‘குமரன்’, தமிழ்க்கடல் ராய சொக்கலிங்களுரின் ‘ஊழியன்’ வார இதழ்களில் சிறந்த விமர்சனங்கள் வந்தன. ஆனால் இறுதி வரை வசூலே இல்லை.
------------------

43. கலைஞர் ஏ.பி. நாகராஜன்


காரைக்குடியில் சேலம் தேவாங்கா அச்சகத்தைச் சேர்ந்த நண்பர் சங்கரன் மூலம் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் கம்பெனியில் சேர்க்கப் பெற்றான். பெண் வேடத்திற்குரிய நல்ல தோற்றமும் இனிமையான குரலும் அவனிடம் அமைந்திருந்தன. வந்த சில நாட்களில் காரைக்குடியிலேயே அவன் இராமாயணத்தில் பால சீதையாக அரங்கேறி விட்டான். அவனுடைய நடிப்பிலே நல்ல மெருகும் புதுமையும் இருந்தன. அச்சிறுவனை நான் பிரத்தியேகமாகக் கவனிக்கத் தொடங்கினேன். அப்போது நடந்து வந்த நாடகங்களில் முக்கிய பெண் பாத்திரங்களையெல்லாம் அச்சிறுவனுக்குக் கொடுக்கச் செய்தேன். பம்பாய் மெயில் நாடகத்தில் கதாநாயகன் சுந்தரத்தின் காதலி பார்வதியாக ஒரு நாள் திடீரென்று அவன் நடிக்க நேர்ந்தது. புதிதாய் நடிப்பதாகவே தோன்றவில்லை. நீண்ட காலம் அனுபவம்பெற்ற நடிகனைப் போல் பிரமாதமாக நடித்தான். நாடகத்தின் நடுவே ஒரு சுவை யான காதல் காட்சி. பம்பாய் மெயிலாகவும், சுந்தரமாகவும் நான் தான் நடித்தேன். என் காதலி பார்வதியோடு சல்லாபமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் வந்துவிடுகிறார். நாணிக் கோணிக்கொண்டு உள்ளே போக முயல்கிறாள் பார்வதி . நான் அவளைப் போக விடாமல் குறும்பாக அவள் சடை நுனியைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறேன். இந்தக் காட்சி நடந்தது. பார்வதி போகும்போது நான் சிரித்துக் கொண்டே சடைப் பின்னலைப் பிடித்து இழுத்தேன். அவ்வளவுதான். சடை என் கையோடு வந்துவிட்டது. என் காதலி பார்வதி ஒரு சாண் நீளமுள்ள தலைமுடியுடன் உள்ளே ஓடிவிட்டாள். அந்த நாளில் பெண்வேடம் புனைபவர்கள் அனைவரும் கூந்தலை வளர்க்க வேண்டும், பார்வதியாக நடித்த அந்தச் சிறுவனுக்கு முடி கொஞ்சந்தான் வளர்ந்திருந்தது. ஒப்பனையாளர் இராஜமாணிக்கம் அந்த முடியிலேயே கொண்டை ஊசி, கரல் பின் ஆகியவற்றின் துணையோடு பின்னிவிடப்பட்ட ஒரு சடையைத் தொங்கவிட் டிருந்தார். நான் இழுத்ததும் சிறுவன் சட்டென்று நிற்காமல் போக முயன்றதால் சடை கையோடு வந்தது. சபையில் ஒரே கரகோஷம். சடையைக் காதலனிடம் பறி கொடுத்துவிட்டு ஓடிய அந்தச் சிறுவன்தான் கலைஞர் ஏ.பி.நாகராஜன்.

மனத்தாங்கலின் உச்ச கட்டம்

காரைக்குடியில் பட்டாபிஷேகத் தேதி முன் கூட்டி அறிவிக்கப் பட்டது. அந்தத் தேதிக்கு மறுநாள் நாங்கள் நடிக்கும் அதே கொட்டகையில் “திரைப்பட நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடிக்கப் போகிறார்” என்ற விளம்பரத்தைப் பார்த்தோம் எனக்குத் திகைப்பாய் இருந்த்து. உடனடியாக என்.எஸ்.கேக்குக் கடிதம் எழுதினேன். “வசூல் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் இவ்வாறு வந்து நடிப்பதும், அதை முன்கூட்டியே விளம்பரப் படுத்துவதும் போட்டி நாடகம் போல் கருதப்படுமல்லவா?” என்று குறிப்பிட்டிருந்தேன். என்.எஸ்கிருஷ்ணன் எனக்குப் பதில் எழுதியிருந்தார்.

“நம்முடைய கம்பெனி நாடகம் முதல் நாள் இருப்பது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் நாடகம் ஒருவருக்கு உதவி யளிப்பதற்காக ஒப்புக் கொண்ட நாடகம். அதை இனி நிறுத்து வது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதில் எனக்குத் திருப்தி அளிக்க வில்லை. காரைக்குடி நகரில் பலமுறை என்.எஸ்.கே. எங்கள் குழுவில் பணி புரிந்திருக்கிறாராதலால் நகரத்தார் பலருக்கு எங்கள் தொடர்பு நன்றாகத் தெரியும். எனவே, அவர்களில் பலரும் என்.எஸ்.கே. இப்படிச் செய்வது தவறு என்று அபிப்பிராயப் பட்டார்கள்.

இந்த நிலையில் எங்கள் பட்டாபிஷேக நாடகம் முடிந்தது . மறுநாள் என்.எஸ்.கே. நடிக்கும் நாடகத்திற்காக நாடகாசிரியர் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை குழுவினரில் சிலர் வந்திருந்தார்கள். அவர்களும் எங்களோடு சேர்ந்து வருத்தப்பட்டார்கள். மறு நாள் நாடகமாதலால் இரவு, நாடகம் முடிந்ததும் உடனடியாகச் சாமான்களையெல்லாம் அப்புறப்படுத்தி விடவேண்டுமென்று கொட்டகைக்காரர் உத்திரவு போட்டார். இது மிகவும் சிரமமான காரியம் என்பது கொட்டகைச் சொந்தக்காரருக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் வேண்டுமென்றே இப்படிச் செய்தார். பெரியண்ணா எதற்கும் மனம் கலங்கவில்லை. நாடகம் முடிந்ததும் சாமான்கள் அத்தனையையும் அரங்கத்திலிருந்து அகற்றிவிடும்படி ஆணையிட்டார். காட்சியமைப்பாளரும் நடிகர்களுமாகச் சேர்ந்து சாமான்கள் முழுவதையும் இரவோடிரவாகக் கொட்டகைக்கு வெளியே வெட்ட வெளியில் கொண்டு வந்து போட்டார்கள்.

மறுநாள் நாடகத்தன்று மாலை சின்னண்ணா கொட்டகை வாயிலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த என். எஸ். கிருஷ்ணனுக்கும் சின்னண்ணாவுக்கும் பலத்த வாக்குவாதம் நடை பெற்றதாக அறிந்தேன். வருந்தினேன். ஆனாலும் எங்களுக்கெல்லாம் அன்றைய நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெரியண்ணாவுக்குப் பயந்துகொண்டு ஒருவரும் போக வில்லை. நாடகம் முடிந்த மறுநாள் சீன் வேலையாட்களில் சிலர் வந்து, நாடகத்தில் கூச்சலும் குழப்பமும் இருந்ததாகவும், அமைதியாக நடைபெறவில்லையென்றும், வசூலும் எதிர் பார்த்தபடி இல்லையென்றும் சொன்னார்கள். நாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நாங்களே காரணமென்றும், முன் கூட்டியே திட்டமிட்டு வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறதென்றும் கலைவாணர் கருதியதாக அறிந்தோம். எங்களிடையே இருந்து வந்த மனத்தாங்கல் இந்த நிகழ்ச்சியால் மேலும் வளர்ந்தது. பொன்னமராவதி போய்ச் சேர்ந்தோம்.

சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர்

பொன்னமராவதி எங்களுக்குக் கொஞ்சம் கைகொடுத்தது. அங்குப் பிரசித்திபெற்ற கதா காலட்சேப வித்வான் சூலமங்கலம் வைத்தியகாத பாகவதர் எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் நடித்த இராமாயணம் அவரை மிகவும் கவர்ந்தது. அதைப் பாராட்டு வதற்காக ஒரு நாள் காலையில் கொட்டகைக்கு வந்தார். பாடல்களைச் சுத்தமாகவும் கர்னாட சங்கீதத்திலும் அமைந்திருப்பதாகவும், நன்றாகப் பாடியதற்காகவும் எங்களை மனமாரப் பாராட்டினார். அன்று முதல் அவரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புராண இதிகாசங்களில் புதுமை காண விழைந்தோம். திருமாலின் லீலைகளே தசாவதாரம், ஸ்ரீ கிருஷ்ணலீலா, இராமாயணம், மகாபாரதம் முதலிய கதைகளாக நாடக சினிமா உலகில் நடமாடி வந்தன. சிவபெருமானின் திருவிளையாடல்கள் எதுவும் மேடையிலோ, திரைப்படங்களிலோ வந்ததில்லை. எனவே அவற்றை மேடையில் தோற்றுவிக்க எண்ணினோம்.

சூலமங்கலம் பாகவதர் சிவபுராண ஆராய்ச்சியில் பெரும் புகழ் பெற்றவர். எனவே அவரிடம் எங்கள் எண்ணத்தை வெளியிட்டோம். திருவிளையாடல் புராணத்தை நாடகமாக்கித் தருவதாக அவர் ஒப்புக் கொண்டார். அந்நாடகத்திற்குச் சிவலீலா என்ற பெயர் பொருத்தமாயிருக்குமெனச் சின்னண்ணா கூறினார். சிவலீலா நாடக முயற்சி தொடங்கப் பெற்றது. பாகவதரும் சின்னண்ணாவும் தனியே கலந்து திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்தப் படலங்கள் நாடகத்திற்குச் சுவையளிக்கும் என்பதைப் பற்றி ஆராய்தார்கள்.

சிவலீலா

பொன்னமராவதியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தோம். திருச்சியில் நாடகங்களுக்கு வசூல் இல்லை. பாகவதர் எழுதிய சிவலீலா வந்தது. புதிய நாடகத்தைத் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டோம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் எங்கள் குடும்பத் தோழர். பிரபல அமைச்சூர் நடிகர் எப்.ஜி. நடேசய்யர் எங்கள் உற்ற நண்பர். டாக்டர் ஒ.ஆர். பாலு எங்களுக்குப் பலவகையில் உதவியவர். இவர்களெல்லாம் சிவலீலா பெற்றிகரமாக உருவாக யோசனைகள் கூறினர். பொருள் வசதியில்லாத நிலையில் எந்த யோசனையைத்தான் செயல்படுத்த முடியம்? இருந்தாலும் சிவலீலாவைத் திருச்சியில் எப்படியும் அரங்கேற்ற முனைந்தோம். பாடம் கொடுத்தோம். முஸ்லீம் கவிசர் சையத் இமாம் புலவர் சிவலீலாவுக்குப் பாடல்களை புனைந்தார். ஏற்கனவே எப்.ஜி. நடேசய்யரின் ஞான சௌந்தரிக்குப் 351

பாடல்கள் எழுதியவர். எப். ஜி. என். தான் புலவரை அறிமுகப் படுத்திவைத்தார். கிறித்துவக் கதையாகிய ஞானசெளந்தரிக்கும் இந்து புராணக்கதையாகிய சிவலீலாவுக்கும் ஒரு முஸ்லீம் புலவர் பாடல் புனைந்தது குறிப்பிடத்தக்க செய்தியல்லவா? இதில் வியப்பென்னவென்றால் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் இவற்றையெல்லாம் புலவர் சையத் இமாம் நன்கு அறிந்திருந்தார். அவரோடு நெருங்கிப் பழகியபோது எளக்கு எங்கள் நாஞ்சில் நாட்டுப் பெரும் புலவர் கோட்டாறு சதாவ தாளம் செய்குத்தம்பிப் பாவலர்தாம் நினைவுக்கு வந்தார்.

சிவலீலா ஒரு புது விதமான நாடகமாக உருவாகியது. இறைவன் விறகு விற்ற படலத்தில் தமிழ் இசையின் சிறப்பு வலி யுறுத்தப் பெற்றது. தருமிக்குப் பொற் கிழி அளித்த படலத்தில் தமிழ் மொழியின் வளமையைச் சொல்ல வாய்ப்புக் கிட்டியது. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம் தந்திரக் காட்சிக்குரிய தாக இருந்தது. கால்மாறியாடிய படலம் சிவசக்தி கடனத்திற்கு ஏற்றதாக அமைத்தது. வலைவீசும் படலம் காதல்சுவை நிறைந்த பகுதியாக விளங்கியது. பெரிய புராணத்திலிருந்து திருக்குறிப்புத் தொண்ட நாயனரைச் சேர்த்துக்கொண்டோம். அஃது பக்தியின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகத் திகழ்ந்தது. ஆக நாடகம் பல்வேறு சுன்வகளைக் கொண்டதாகவும் பயனுடையதாகவும் அமைந்தது. நல்ல காட்சிகளும், உடைகளும் தயாரித்து நடத்தி னால் சிவiலா பொதுமக்களை ஈர்க்கும் நாடகமாக அமையு மென்பது நன்றாகப் புரிந்தது. நிலைமையைக் கருதி அவசியமான சிலவற்றை மட்டும் செய்து சிவலீலா நாடகத்தை 25-12-39 இல் அரங்கேற்றினோம். சிவசக்தி நடனத்திற்குப்பயிற்சி அளிக்கும் பொறுப்பை எப். ஜி. என். அவர்களின் மூத்தமகன் தியாகராஜன் ஏற்றுக்கொண்டார்.

நடனமாடும் சிவனுகவும், பார்வதியாகவும் கம்பெனியில் அப்போது முக்கிய பாத்திரங்களே ஏற்று நடித்து வந்த ஜெயராம னும், சோமசுந்தரமும் பயிற்சி பெற்றார்கள். இவ்விருவரும் மிகவும் திறமையாக ஆடினார்கள்.

சிவசக்தி நடனம், நாடகத்திற்குச் சிகரமாக அமைந்தது. எங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்ட எப். ஜி. நடேசய்யர் டாக்டர் ஒ. ஆர். பாலு முதலியோர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

டி. வி. நாராரணசாமி

எட்டையபுரம் ராஜாவின் பரிந்துரையோடு எங்கள் குழுவில் சேர்ந்த டி. வி. நாராயணசாமி சிவலீலாவில் சிவபெருமானாக நடித்தார். சிவபெருமான் பக்தர்களுக்காக மேற்கொள்ளும் மாறு வேடங்களை எல்லாம் நான் நடித்தேன். ஏ. பி. நாகராஜன் பார்வதியாகவும், பின்னல் வலை வீசும் படலத்தில் கயற்கண்ணியாகவும் நடித்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி வடநாட்டு இசைப்புலவர் ஹேமநாதனாகவும், எட்டையபுரம் அரசர் கம்பெனி யிலிருந்த நன்றாகப் பாடும் திறமைப் பெற்ற சங்கரநாராயணன் பாணபத்திரராகவும், பிரண்டு இராமசாமி தருமியாகவும் நடித்தார்கள். நகைச் சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரைப் பல வேடங்களில் தோன்றிச் சபையோரைப் பரவசப்படுத்தினார். டி. வி. நாராயணசாமிக்குச் சிவபெருமான் வேடப்பொருத்தம் சிறப்பாக அமைந்தது. கம்பெனியில் சேர்ந்த தொடக்க நாளில் நாராயணசாமி துச்சாதனகை நடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீர அபிமன்யு நாடகத்தில் துச்சாதனனுக்கு வசனம் எதுவும் இல்லை. பேருக்கு ஒருவர் வேடம் புனைந்து நிற்க வேண்டியதுதான். அப்படி எண்ணித்தான் இவரை போட்டோம். ஆனால் துரியோதனாதியர் அனைவரையும் கட்டி நிறுத்தி இலக்கண குமாரனுக்கு ஐந்து குடுமிவைத்து, அரசாணிக் காலிலே கட்டும்நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் டி. வி.நாராயண சாமி எங்களேயெல்லாம் திணறவைத்துவிட்டார். அவர் காட்டிய வீரமும் ஆவேசமும் அடேயப்பா!... துச்சாதனனை அடக்குவது எங்களுக்குப் பெரிய தொல்லையாகப் போய்விட்டது. அதற்கு முன்பெல்லாம் இவ்வேடம் புனைந்த துச்சாதனார்கள் இடித்த புளி போல் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் எவ்வித உணர்ச்சியும்இராது. வார்த்தைகள் எதுவுமில்லாத அந்தவேடத்திலேயே டி. வி. நாராயணசாமியின் நடிப்பாற்றல் என்னைக் கவர்ந்தது. அதன் பிறகு அவருடைய திறமைக்கேற்றவாறு விரைவில் முன்னேறினார். இராமாயணத்தில் அவர் இலட்சு மணனாக நடித்தது இன்னும் என் மனக்கண் முன் நிற்கின்றது. மந்திரி சுமந்திரர், தந்தைக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஏதேனும் உண்டா?’ என்று கேட்கும் நேரத்தில், அது யாரவன் எனக்குத் தந்தை?’ என்று கண்களில் கோபக் கனல் தெறிக்கக் கூறி, கம்பன் பாடியுள்ள மூன்று பாடல்களை ஆவேசத்தோடு முழக்கும் அவரது ஆற்றல் மிக்க நடிப்பு, அவையோரை மட்டு மல்ல; மேடையில் அவரோடு இராமராக நடிக்கும் என்னையும் மெய்சிலிர்க்க வைக்கும். சிவலீலாவில் சிவபெருமாகை நின்று பார்வதி, முருகன், நந்திதேவர் முதலியோருக்கு அவர் சாபம் கொடுக்கும் கட்டம், பார்த்து மகிழ வேண்டிய அருமையான காட்சி. அக் காட்சி நடைபெறும்போது நான் பக்கத்தட்டியில் மறைவில் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.

சீனிவாச ஐயங்கார்

திருச்சியில் சிவலீலா நாடகம் நான்கு நாட்கள் நடந்தன. இவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்த சிவiலாவுக்கும் வசூல் இல்லை. வழக்கம்போல் கே.டி. ருக்மணியை வரவழைத்து மனே கரா நாடகம் போட்டோம். சுமாராக வசூலாயிற்று. திண்டுக்கல் போக முடிவு செய்தோம். பணநெருக்கடி அதிகமாக இருந்தது. எதிர் பார்த்த நண்பர்களின் உதவி உரிய சமயத்தில் கிடைக்க வில்லை. இந்த நிலையிலும் மணவை ரெ. திருமலைசாமியின் நகரதுாத னுக்கும், எதிரொலி என்னும் இதழை நடத்தி வந்த நண்பர் கணபதிக்கும் திருச்சியில் உதவி நாடகங்கள் நடத்தி கொடுத் தோம். அவற்றிற்கு டிக்கட் தனியாக விற்பனை செய்ததால் ஒரளவு வசூல் ஆயிற்று. கணபதியின் எதிரொலிக்காக 9-12-39 இல் நடந்த தேசபக்தி நாடகத்திற்கு முன்னுள் காங்கிரஸ் மகா சபைத்தலைவர் எஸ். சீனிவாசஐயங்கார் தலைமை வகித்தார். அவர் ஆங்கிலந்தில்தான் பேசினார். என்றாலும், தமிழில் பேச இயலாத தம் நிலையை எடுத்துச்சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். “இந்த நடிகமணிகள் தேசபக்தி நாடகத்தில் பேசிய தமிழைப்போல் என்னுல் பேச முடிந்திருந்தால் சாதாரணத் தமிழ் மக்களிடையே யும் நான் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பேன், நான் படித் துள்ள ஆங்கிலக் கல்வி, படித்த கூட்டத்தாரிடம் மட்டுமே என்னைத் தொடர்பு கொள்ள வைத்து விட்டது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறினார்.

மணவை திருமலைசாமி

மணவை ரெ. திருமாலைசாமி அவர்களின் நகர தூதன் ஏட்டுக்காக 29.12.39.ல் நடந்த நாடகத்திற்குப் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தலைமை வகித்தார்கள். அன்பர் திருமலைசாமி ஒரு சிறந்த எழுத்தாளர். நகர தூதனில் ‘பேணு நர்த்தனம்’ என்னும் தலைப்பில், அவர் எழுதிவந்த அரசியல் கட்டுரைகள் அந்த நாளில் மிகவும் கவர்ந்தன. பிரபல எழுத்தாளராகிய கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மணவை திருமலைசாமி அவர்களின் எழுத்தாற்றலைப் பற்றி அடியில் வருமாறு பாராட்டியுள்ளார்.

“திருச்சி நகர தூதன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ‘பேனாநர்த்தனம்’ என்னும் தலைப்பில் ஒருவர் எழுதுகிறாரே, அவர் மிகவும் பொல்லாத எழுத்தாளர். அவருடைய பேனாநர்த்தனத்தில் பரத நாட்டியத்திலேயுள்ள சகல ஜதி வகைகளையும் காணலாம். அப்படித் துள்ளிக் குதிக்கும் வேகமுள்ள தமிழ் நடையில் எதிர்க்கட்சிகாரர்களையும், எதிர்க் கட்சிக் கொள்கைகளையும் அவர் தாக்குவார். நானும் பார்த்து வருகிறேன்; சென்ற இருபது ஆண்டுக்கு மேலாக அவருடைய கொள்கையும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. அவருடைய தமிழ் நடையும் ஒரேவித நோக்கமுள்ளதாய் இருந்து வருகிறது. இவரால் தாக்கப்படுகின்ற மனிதர் நல்ல ரசிகராக மட்டும் இருந்தால் ‘'தாக்கப்பட்டாலும் இப்படிப் பட்ட பேனாவினாலல்லவா தாக்கப்பட வேண்டும்’ என்று அவருக்கு எண்ணத் தோன்றும்.”

1947இல் இவ்வாறு ரா. கிருஷ்ண மூர்த்தி பாராட்டினாரென்றால் அவருடைய அபாரமான எழுத்தாற்றலுக்கு வேறன்ன நற்சான்று வேண்டும்? அன்று நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் கூறிய மொழிகள், எனக்கு நன்முக நினைவிலுள்ளன. “நான் டி. கே. எஸ். சகோதரர்களை எவ்வளவோ பாராட்டியிருக்கிறேன். விருந்துகள் நடத்தியிருக்கிறேன். என் பத்திரிக்கைக்கு அவர்கள் இப்படி நாடகம் நடத்திக் கொடுத்ததில்லை. மணவை திருமலைசாமி நிரம்பவும் கெட்டிக்காரர். எனக்குக்கிடைக்காத அந்தநிதி-உதவி அவருடையப்பத்திரிகைக்குக் கிடைத்துவிட்டதே!” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

திருச்சி நாடகம் முடிந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.
----------------

44. பூலோகரம்பை


ஈ. வெ. ரா.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, இப்போது பொதுவுடைமைப் புரட்சி வீரராக விளங்கினார் தோழர் ஜீவானந்தம். அவர்மூலம்பொதுவுடைமை வீரர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகமாயினார். இவர்களில் ஏ. கே கோபாலன், பி.இராமமூர்த்தி, கே. பாலதண்டாயுதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாலதண்டாயுதம் தம்பதி சமேதராகவே நாடகம் பார்க்க வருவார். எனக்கு அவர் அளித்த ஒரு சிறிய வெள்ளிப் பரிசினைக்கூட நான் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறேன். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று வெளிப்படையாகவே எழுதித் தொங்கவிட்ட எங்கள் முகப்புத் திரை பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் காரணமாக சர்க்கார் அதிகாரிகளின் தொல்லையும் அதிகரித்தது. பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வெளியிடப் பெற்ற ‘ஜன சக்தி’ வார இதழுக்கு எங்கள் குழுவின் நடிகர் ராஜநாயகம் ஏஜண்டாகவே இருந்தார். சமுதாய நாடகங்களில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் சமதர்மக்கருத்துக்களைப் பிரசாரம் செய்து வந்தோம்.

பூலோகரம்பையில் ஒப்பந்தம்

திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்தத் தொடக்கத்திலேயே அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. சின்னண்ணா துணைவியாரின் கழுத்திலிருந்த சில நகைகளைப் பாங்கில் அடகு வைத்துப்பணம் வாங்கினோம். காரியங்கள் நடந்தன. குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென்று சின்னண்ணா திட்டமிட்டார். அதற்காக எங்கள் குழுவிலிருந்த பழைய நடிக நண்பர் கே.வி. சீனிவாசனைக் கம்பெனிக்கு வரவரைத்தார். நாடகத்தைத் திரைப்படத்திற் கேற்றவாறு எழுதும்பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தார். கே. வி. சீனிவாசன், சதிலீலாவதி பட டைரக்டர் ஏல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவியாளராக இருந்து அனுபவம் பெற்றவர். அவர் கம்பெனியில் இருந்து கொண்டே சின்னண்ணாவுக்கு ஆதரவாகப் பெரியண்ணா உட்பட எங்கள் எல்லேருடைய அபிப்ராயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் கோவையிருந்து பூலோக ரம்பை படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. 20.1-40இல் ஷண்முகா பிலிம்ஸ் எம். சோமசுந்தரம் சேலம் கந்தசாமி செட்டியார் நடிகை கே. எல் வி. வசந்தா ஆகியோர் திண்டுக்கல் வந்து பூலோகரம்பையில் நடிக்க எனக்கு மூன்றுமாத காலத்திற்கு ரூ.3750 சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்துச் சென்றார்கள் நெருக்கடியான நேரத்தில், கிடைத்த இந்தப்பணம் தெய்வம்தந்த வரப்பிரசாதமாக இருந்தது.

‘நாஷ்’ கார் வாங்கினோம்

பூலோக ரம்பை படப்பிடிப்புக்காக அடிக்கடி கோவைக்குப் போய் வர ஒரு கார் தேவைப்பட்டது. அதைக் கம்பெனிக்குச் சொந்தமாகவே வாங்குவதென முடிவுசெய்தார் அண்ணா. காரைக்குடியிலிருந்த எங்கள் நண்பர் மெக்கானிக் சங்கர் நாயுடு இதற்கு உதவினார், 30-1- 40 இல் ஒரு பழைய ‘நாஷ்’ கார் 1225 ரூபாய்களுக்கு வாங்கப்பட்டது. அப்போது நான் முக்கிய பாத்திர மேற்று நடிக்காத நாடகம் ஸ்ரீகிருஷ்ணலீலா ஒன்று தான். எனவே அந்த நாடகத்தைத் தொடங்கிவிட்டு, என்னைக் கோவைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் அண்ணா.

6 . 2. 40 இல் பூர் கிருஷ்ணலீலா தொடங்கியது. பூலோக ரம்பைபடத்தில் நடிப்பதற்காக அன்றிரவு 7மணிக்கு நான் காரில் கோவைக்குப் புறப்பட்டேன். இரவு 10 மணியளவில் ஈரோடு வந்து, எனது இனிய நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் தங்கினேன். மறுநாள் பகல் பெரியார் ஈ. வே. ரா அவர்களின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் நான்படத்தில் நடிக்க இருப்பதைப் பாராட்டும் முறையில் எனக்கு விருந்தளித்தார். இந்த விருந்தில் அறிஞர் அண்ணா, தோழர்கள் எம். ஏ. ஈஸ்வரன்,

ஏ.சங்கரய்யா முதலிய நண்பர்கள் கலந்து கொண்டு என்னை வாழ்த்தினார். 8 ஆம் தேதி காலை புறப்பட்டுக் கோவை சேர்ந்தேன்.

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி. சகஸ்ரநாமம் முதலியோர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். சகோதரர் சகஸ்நாமம் அப்போது என். எஸ்.கே. படக்கம்பெனியின் நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்தார். அவர் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். நீண்ட காலம் பழகிய நண்பர்களோடு இருந்ததால் சகோதரர்களைப் பிரிந்த தனிமை உணர்வு எனக்கு ஏற்படவில்லை.

பி. எஸ். இராமையா

கோவைராயல் இந்து ரெஸ்டாரண்டில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கதாசிரியர் பி.எஸ். இராமையாவும் அங்கேயே தங்கியிருந்தார். நான் என் அறைக்குச் சென்றதும், “வாங்கோ மிஸ்டர் ஷண்முகம்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். “நான்தான் பி.எஸ்.இராமையா, பூலோகரம்பை கதையை நான்தான் எழுதுகிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர். பி.எஸ்.இராமையாஅவர்களோடு அதுதான் எனக்கு முதல் சந்திப்பு. அவருடைய அற்புதமான சிறுகதைகளை மணிக்கொடியில் நிறையப் படித்திருக்கிறேன். பூலோகரம்பைக்கு அவர் வசனம் எழுதுகிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ந்தேன். இருந்தாலும் அவர் இவ்வளவு எளிமையாகப் பழகுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. பிரபலமான ஒர் எழுத்தாளர் என் அறைக்கே வந்து, என்னை வரவேற்றது, அவருடைய எழுத்தில் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. நானும் பி.எஸ்.இராமையாவும் நெடுநாளைய நண்பர்களைப் போல் மனம் விட்டுப் பேசினோம். நெருங்கி உறவாடினோம்.

பாடலாசிரியர் ஆனை வைத்தியநாதய்யரும் எங்களோடு தங்கியிருந்தார், நான் போன மறுநாள்பாட்டு ஒத்திகைநடந்தது. டி.ஆர்.மகாலிங்கமும் நானும் பாடினோம். படத்தில் எங்க ளோடு என். எஸ். கே. டி. ஏ. மதுரம், கே, எல். வி. வசந்தா,

டி.எஸ்.துரைராஜ், டி.பாலசுப்பிரமணியம், டி. எஸ். பாலையா, பேபி ருக்மணி, பி.ஜி. வெங்கடேசன் முதலியோரும் நடித்தார்கள். பி, என்.ராவ், படத்தை டைரக்ட் செய்தார்.

தம்பியின் முதன்மை

திண்டுக்கல்லில் நான் இல்லாமலை நாடகங்கள்தொடர்ந்து நடைபெறுவதற்கு நடிகர்கள் வழிவகை செய்தார்கள். சிவலீலாவில் நான் புனேந்த விறகுவெட்டி, புலவர், சிவனடியார், எல்லாம் வல்ல சித்தர், வலைஞன் ஆகிய வேடங்களை நடிப்பதற்குத் தம்பி பகவதியே துணிவோடு முன்வந்தார். அதேபோல் குமாஸ்தாவின் பெண்ணிலும் நான் நடித்த ராமு வேடத்தைப் பகவதியே நெட்டுருப் போட்டார். ராமதாசில் இரண்டாவது ராமதாசாக நடிக்க கே. ஆர். ராமசாமி இசைவளித்தார். ஆக, ஷண்முகம் இல்லாமலே நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைமையை உருவாக்க நடிகர்கள் அனைவரும் ஒத்துழைத்தார்கள். சம்பூர்ண இரமாயணம், மனோகரா முதலிய சில நாடகங்களுக்குத்தான் நான் தேவைப்பட்டது. திண்டுக்கல்லுக்கும் கோவைக்குமாக இரண்டு மூன்றுமுறை இவ்வாறு காரில் பயணம் செய்ய நேர்ந்தது. பெரியண்ணா என் உடல் நலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். கோவைக்கு அருகிலேயே இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்குமென்று எண்ணினார். பொள்ளாச்சி, திருப்பூர் இரு ஊர்களுக்கும் சென்றார். திருப்பூர் கொட்டகை உறுதிப்பட்டது. நான் எவ்விதக் கவலையுமின்றித் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். குதிரையேற்றம் பழகினேன். சிறுவாணி, பேரூர் முதலிய இடங்களில் நானும் மகாலிங்கமும் குதிரை சவாரி செய்தோம். பாலையாவுக்கும் எனக்கும் சிறுவாணிக் காட்டில் பலத்த சண்டை நடந்தது. படப் பிடிப்பில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். திடீரென்று திருப்பூரிலிருந்து உடனே புறப்பட்டு வரும்படியாகப் பெரியண்ணா தொலைபேசி மூலம் அறிவித்தார். 15-3-40-ஆம் நாள் அதிகாலை காரில் புறப் பட்டுத் திருப்பூர் வந்தேன். தங்கை சுப்பம்மாளின் கணவருக்கு உடல் நலமில்லையென்றும் உடனே நாகர்கோவில்செல்ல வேண்டு மென்றும் கூறினார். சிறிதும் தாமதிக்காமல் திண்டுக்கல்வந்தோம். அன்றிரவு நடைபெற இருந்த நாடகம் நிறுத்தப்பட்டது. மாலை யிலேயே நாகர்கோவில் போய்ச் சேரும் எண்ணத்துடன் தம்பி பகவதியையும் அழைத்துக் கொண்டு காரில் பயணமானோம். சின்னண்ணா தம் மனைவியுடன் முன்பே நாகர்கோவில் சென்றிருந்தார்.

தங்கையின் கோலம்

நாம் நினைத்தப்படி எதுவும் நடப்பதில்லையே! பயணத்தில் பல்வேறு இடையூறுகள்; தடங்கல்கள். விருதுநகரைத் தாண்டியதும் டயர் பஞ்சர். ஸ்டெப்னியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். சாத்துரைக் கடந்ததும் ‘டியூப் பஞ்சர்.’ மீண்டும் எப்படியோ சமாளித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். கயத்தாற்றின் அருகே வரும்போது மற்றொரு டியூப்பும் பஸ்டு ஆகி விட்டது. மேலே பயணத்தைத் தொடர வழியில்லை. நான் பஸ்ஸில் திருநெல்வேலிக்குச் சென்றேன். இரவு நேரம். மிகுந்த சிரமபட்டு அலைந்து, புது டியூப் வாங்கினேன். வாடகைக் காரில் வந்து சேர்ந்தேன். டியூப்பைப்போட்டுக் கொண்டு புறப்பட இரவு மணி 10க்கு மேலாகிவிட்டது. எங்கும் நிற்காமல் இரவு 2 மணி யளவில் நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். கீழத் தெருவிலுள்ள எங்கள் இல்லத்தை அடைந்தோம். எங்கோ ஒரு நாய் ஊளை யிட்டது. கதவைத் தட்டினோம். அண்ணியர் கதவைத் திறந்தார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தோம். அண்ணியார் வாயிலிருந்து வந்த சொற்கள் எங்களை அதிர்ச்சியடையச் செய்தன. தங்கையின் கணவர் சுப்பையாபிள்ளை 15.3.40 அதி காலை 5 மணிக்கே காலமாகிவிட்டார். எங்கள் வருகைக்காகக் காத்திருந்து இரவு 7 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நாங்கள் வந்துவிட்டதை அறிந்த தங்கை சுப்புவின் அழுகுரல் என் செவிகளில் கேட்டது. 20 வயதே நிரம்பிய இளமைப் பருவம் இரு பெண் குழந்தைகள் ஏதுமறியாத நிலையில் அந்தப் பச்சிளங் குழந்தைகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. வெள்ளைச் சேலையைப் போர்த்திக் கொண்டு கைம்மைக் கோலத்தில் கிடந்த என் அருமைத் தங்கையின் திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் என்னல் முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

முன்பணம் பெற முயற்சி!

நாகர்கோவிலில் நான்கு நாட்கள் இருந்தோம். 18ஆம் தேதி திண்டுக்கல் திரும்பி நாடகத்தில் பங்கு கொண்டோம். நாலைந்து நாடகங்களில் நடித்துவிட்டு மீண்டும் கோவை சென்றுபடப்பிடிப்பில் ஈடுபட்டேன். முன்னரே திட்டமிட்டபடி என்னுடைய படப் பிடிப்பின் வசதியை முன்னிட்டுக் கம்பெனி திருப்பூரில் முகாம் இட்டது. கோவை பிரிமியர் சினிடோன் கூட்டுறவோடு குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுப்பதற்குரிய ஆயத்தங்களைச் சின்னண்ணா செய்து வந்தார். பொருளாதார நிலை சரியில்லாததால் பெரியண்ணாவுக்குப் படப்பிடிப்பில் விருப்பமில்லை, என்றாலும் இளையவரின் முயற்சியை அவர் தடை செய்யவில்லை. சின்னண்ணா சென்னை சென்று திரு எஸ். எஸ். வாசனைக் கண்டு பேசினார். குமாஸ்தாவின் பெண் படத்தின் விநியோக உரிமையை அவருக்கு அளிக்கவும், முன்கூட்டியே பணம் பெறுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.

அரங்க நாடகம் அச்சேறியது

கம்பெனி திருப்பூருக்கு வந்தது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. திரைப்படத்தில் நடிப்பது என்னதான் வருவாய்க்குரியதாக இருந்தாலும் என்னுடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்தது. கம்பெனி தளர் நடைவிட்டுக் குதித்தோடும் பருவத்தில் இருந்ததால் எனக்கும் சொந்தப் படப்பிடிப்பில் அவ்வளவு சிரத்தை ஏற்படவில்லை. ஆயினும் சின்னண்ணா முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேவையில் இரவு படப்பிடிப்பு இல்லையென்றால் நான் உடனே திருப்பூருக்குக் காரில் வந்துவிடுவேன். அரங்கில் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண்நாடகத்தை அச்சில் கொண்டு வரவும் முயன்றேன். திருப்பூரில் குமாஸ்தாவின் பெண் நாடகம் நடைபெற்றபோது, அந்நாடகம் திருப்பூர் யூனியன் அச்சகத்தில் அச்சாகி நூல் வடிவிலும் வெளிவந்தது.

படாதிபதிகள் திட்டமிட்டபடி பூலோகரம்பை படம் மூன்று மாதங்களில் முடியவில்லை. எனவே அதனை அனுசரித்து நாங்களும் உடனே கோவையில் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைத் தொடங்க முடிவு செய்தோம்.
----------------

45. அண்ணாவின் விமரிசனம்


கம்பெனி ஈரோடு சென்றது. அங்கும் குமாஸ்தாவின் பெண் வெற்றிகரமாக நடைபெற்றது. ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்கள் அனைவரும் நல்ல முறையில் பாராட்டி நாடகம் திரைப்படமாக வந்து அமோக வெற்றி பெறவேண்டுமென்று வாழ்த்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் “விடுதலை”யில் இந்நாடகத்திற்கு ஓர் அருமையான இலக்கிய விமர்சனம் எழுதினார். அதன் தொடக் கத்தில் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“வனிதைகளை மணந்து வாழ்வதென்றாலே வெறுப்புக் கொள்ளும் வேதாந்தி! கண்டவர் கனியோ, மணியோ எனக் கூறி கட்டி யணைக்க விரும்பும் கட்டழகு படைத்த இருமங்கைகள்! கூனோ குருடோ-எவனோ ஒருவன் வரமாட்டான, வயதுக்கு வந்துவிட்ட பெண்னைக் கட்டிக் கொண்டு சாதியாசாரம் கெடாதபடி, பழி வராதபடி, தடுத்து ஆட்கொள்ள மாட்டான என்று சதா கவலைப் படும் தந்தை; சோகத்தில் பங்கு கொள்ளவே ஜனித்த அவரது மனைவி; அவர்களின் இணை பிரியாத் தோழன் வறுமை; உல்லாசமே உயிர் வாழ்க்கையின் இலட்சியம் என எண்ணி வாழும் செல்வச் சீமான்; அவனது உதவி இருக்கும் போது வீட்டைப்பற்றிக் கவலை எதற்கு என்று எண்ணாம் இளங்காளை; காளையைக் சுற்றிலும் கண் சிமிட்டிக் கையசைத்துக் காலம் தள்ளும் காரிகைகள்; அத்தகை யோரைக் கொண்டே நடிப்புக் கலையை நடத்தி நல்ல பணம் பெற முடியும் என எண்ணாம் சினிமா டைரக்டர்; இவ்வளவு பேருக்கும் இடையே நின்று அகப்பட்டதைச் சுருட்டி வாழும் சில அந்தணர்கள்!

“குமாஸ்தாவின் மகள்” என்னும் நாடகத்தில் வரும் பாத்திரங்கள் இவைகளே. குடும்பபாரம்; வறுமையின் கொடுமை வரதக்ஷிணையின் குரூரம்: மண அறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளை விட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்’ தருகிறாள்-அதாவது அந்த நாடகத்தில் உண்டு.”[1]

இவ்வாறு விமர்சனத்தைத் தொடங்கி ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் விரிவாகப் எழுதிவிட்டு இறுதியில் “பல நாட்களில் நான் கண்டறியாதன இதில் கண்டேன். நான் கண்டதைச் சுருக்கித் தான் எழுதினேன். முழுவதையும் நீங்கள் காணவேண்டுமே; ஈரோடு வாசிகள் இன்றே செல்லுங்கள். மற்ற ஊரார் அழைப்பு அனுப்புங்கள் கம்பெனிக்கு. குமாஸ்தாவின் மகள் சினிமாவாகவும் வரப் போகிறது. கவனம் இருக்கட்டும்!!” என்று முடித்திருந்தார். இந்த விமர்சனம் எங்கள் நடிகர் அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் ஊட்டியது. பலமுறை படித்துப்படித்துச் சுவைத்தோம்.

ஈரோடு நண்பர்களுக்கெல்லாம் ஒரு இனிய விருந்து நடத்தி னார் பெரியண்ணா. இதில் பெரியார் ஈ. வே. ரா,அறிஞர் அண்ணா, டாக்டர் கிருஷ்ணசாமி, எம். ஏ. ஈஸ்வரன் முதலிய அனைவரும் கலந்து கொண்டனார்.

வியக்கத் தக்க நடிப்பு

குமாஸ்தாவின் பெண்ணில் கதாநாயகி சீதாவாக நடிக்க திருமதி எம். வி. ராஜம்மா ஏற்பாடு செய்யப்பட்டார். இவர் நாடகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார். திரைப்பட விநியோக உரிமையைப் பெறுவதற்காக முன் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். 30-6.40 இல் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு எஸ்.எஸ்.வாசன், நாராயண ஐயங்கார், சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு, மூர்த்தி பிலிம்ஸ் மருதாசலம் செட்டியார், எம். வி. ராஜம்மா, பெரியார் ஈ. வெ. ரா. அறிஞர் அண்ணா முதலியோர் வந்திருந்தனார். அன்று நாடகம் மிகச் சிறப்பாக நடந்தது. மிகுந்த ஆர்வத்தோடு நாடகம் முழுவதையும் பார்த்த எம். வி. ராஜம்மா, வாசன் ஆகியோர் நாடகம் முடிந்ததும் உள்ளே வந்தனார். பெண் வேடத்தோடிருந்த கலைஞர் ஏ. பி. நாகராஜனை ஏற இறங்கப் பார்த்தார்கள். உற்று நோக்கினார்கள். “சீதாவாக நடித்த இந்தப் பையனப்போல் ராஜம்மா நடித்துவிட்டால் போதும். படம் முதல் தரமாக அமைந்து விடும்” என்றார் எஸ். எஸ். வாசன். உடனே ராஜம்மா, ஐயோ! இந்தப் பையனைப்போல் எப்படி நான் சீதாவாக நடிக்கப் போகிறேன்? எனக்கு பயமாக இருக்கிறது!” என்று நாகராஜனின் நடிப்பை வியந்து போற்றினார். ஆம்; அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை! கலைஞர் நாகராஜனின் அந்தப் பெண் வேட நடிப்பு, அன்று நடிகர்களாகிய எங்களை யெல்லாம் கூட பிரமிக்க வைத்தது.

ஸ்பெஷல் ரயில்

சமுதாயச் சீர்திருத்த நாடகமாகிய குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுக்க முன் வந்த எங்களைப் பாராட்டும் முறையில் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் கம்பெனி முழுவதுக்கும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். 18-7.40இல் நடைபெற்ற இவ் விருந்தில் நகரப் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனார். எல்லோர் உள்ளத்திலும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.

குமாஸ்தாவின் பெண் படபிடிப்புக்குரிய எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால் அதற்கு வசதியாகக் கம்பெனி கோவைக்குச் சென்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம் ஈரோட்டிலிருந்து கோவைக்கு, ஸ்பெஷல் ரயில் ஒன்று எங்களுக்காகவே விடப்பட்டது. அறிஞர் அண்ணா உட்பட ஈரோடு நகரப் பிரமுகர்கள் அனைவரும் வந்து எங்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பினார்கள்.

[1] இவ்விமர்சனம் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வெளியிட்டுள்ள நாடக உலகில் அண்ணா என்னும் நூலில் உள்ளது.
----------------------

46. குமாஸ்தாவின் பெண் படம்!


குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பு 31-7.40இல் கோவை பிரிமியர் சினிட்டோனில் தொடங்கப் பெற்றது. மறு நாள் கோவை ராஜா தியேட்டரில் நாடகமும் ஆரம்பமாயிற்று. அடுத்து, குமாஸ்தாவின் பெண் நாடகத்தை, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமையில் தொடங்கினோம்” நாடகத்தைப் பாராட்டிய அவர் படமும் வெற்றி பெற வேண்டு மென்று வாழ்த்தினார்.

எங்கள் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைப் பற்றிச் சொல்வதென்றால் அது ஒரு மகாபாரதமாகும். கதை, சீனரியோ டைரக்ஷன்,நடிகர்கள், பின்னணி, இசை இவையெல்லாம்.எங்கள் பொறுப்பு. ஸ்டுடியோ நிருவாகம் மூர்த்தி பிலிம்ஸைச்சேர்ந்தது. பெண் நடிகையர் எம். வி. இராஜம்மா, டி. எஸ். இராஜலட்சுமி, சகுந்தலா, இரண்டொருவரைத் தவிர எம். எஸ். திரெளபதி உட்பட எங்கள் நடிகர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாதலால் ஒத்திகை முதலிய வகைகளில் தகராறு வராது; கோவையில் மூன்று மாத காலம் நாடகம் ஆடிக்கொண்டே படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்பது எங்கள் திட்டம். ஆனால் நடந்தது வேறு. படப்பிடிப்பு நடந்த பிரிமியர்சினிடோன் ஸ்டுடியோவின் அன்றைய நிலை நைந்து போன பழைய வேட்டியைப் போன்றது தொட்ட இடமெல்லாம் கிழியும். ஒரு புறம் தைத்தால் மறுபுறம் பிய்த்துக் கொள்ளும், அப்பப்பா! எவ்வளவு தகராறுகள்! எத்தனை மனஸ்தாபங்கள் !! ஸ்டுடியோ தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தங்கள்; எடுத்த பிலிம் சுருணையை அடிக்கடி கழுவுவதற்கு ‘ஐஸ்’ இல்லாத தொல்லை; வெளிக் காட்சிகளைப் படமெடுக்க அடிக்கடி சவுண்ட் ட்ரக்” வெளி வர முடியாத நிலைமை. டெலி போன்’ இருந்தும் பேச முடியாத பரிதாபம். இப்படி எத்தனே, எத்தனையோ தொல்லைகள்!

ஒய்வின்றி உழைத்தோம்

‘ரீ டேக்’ எடுக்காத படமென்றுதான் எங்கள் படத்தைச் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? எடுத்த படத்தை உடனே போட்டுப்பார்க்க வசதியில்லை. ஒருவகையாய் சரிப்படுத்தி ‘ரஷ் பிரின்ட்’ போட்டுப் பார்க்க முயல்வோம். அதற்குள் ‘செட்டிங்’ மாறிவிடும். இதனால் அவசியம் என்று கருதப்பட்ட கட்டங்களைக் கூட மறுமுறை எடுக்கவில்லை. எப்படியாவது மானம் போகாமல் படம் முடிந்தால் போதும் என்ற நிலையிலேயே படத்தை முடித். தோம். எங்கள் மூன்று மாதத் திட்டத்தில் படம் முடியவில்லை. கோவை முடிந்து கள்ளிக்கோட்டை, பாலக்காடு ஆகிய ஊர்களில் நாடகத்திலும், படத்திலுமாக ஒய்வின்றி உழைத்தோம். அவ்வாறு உழைப்பதிலேயே இன்பம் கண்டோம், நாங்கள் நடிகர்களாக இருந்தமையால்தான் படம் முடிந்தது என்று சொல்லலாம். பட அதிபர்களுக்கு மட்டும் எங்கள் நிலை ஏற்பட்டிருந்தால் படப்பிடிப்பை விட்டுவிட்டு ஓடியிருக்க வேண்டியதுதான். இது தற்புகழ்ச்சியல்ல. உண்மை.

இயக்குநர் கே. வி. சீனிவாசன்

குமாஸ்தாவின் பெண்படம் எடுப்பதற்கு சீனரியோ தயாரித்ததோடு அஸோஸியேட் டைரக்டராகவும் இருந்துபடத்தை முடிப்பதற்கும் பெருந்துணையாக இருந்தவர் கே.வி.சீனிவாசன், இவர் எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். படம் நல்லமுறையில் வெளிவர இதயபூர்வமாக உழைத்தவர்களில் இன்று பிரபல டைரக்டர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன்-பஞ்சு இவ்விருவரையும் குறிப்பிட வேண்டும். பஞ்சு படத்திற்கு எடிட்டராகவும் கிருஷ்ணன் ‘லேபரட்ரியின்’ முதல்வராகவும் இருந்து அவ்வப் போது எங்களுக்கு அரிய யோசனைகளைக் கூறி ஒத்துழைத்தார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்தப்படம் என்ற உணர்விலேயே நடித்தனர்.

பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிவு பெறாத நிலையிலேயே குமாஸ்தாவின் பெண் படப்பிடிப்பு வேலையும் தொடங்கியதால் இருபடங்களிலும், அத்துடன் நாடகங்களிலும் நடிக்கவேண்டிய, நெருக்கடி எனக்கு ஏற்பட்டது.

உதட்டுக்கோபமும், உள்ளத் தூய்மையும்

ஒருநாள் பூலோகரம்பை படப்பிடிப்பின்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்; அப்போது குமாஸ்தாவின் பெண்ணில் நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றி அவர் மிகுந்த வேதனைப்பட்டார். “மேனகா, பாலாமணி படங்களில் நானும் நடிக்க வேண்டுமென்று நீங்களே பட அதிபர்களை வற்புறுத்தி அழைத்தீர்கள். சொந்தப் படம் எடுக்கும் இப்போது மட்டும் என்னை அழைக்காதது ஏன்?” என்று கேட்டார். நியாயமான கேள்விதான். இதற்கு நான் எப்படிப் பதில் அளிக்க முடியும்? ஒரு முறை குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்புக்கு அவர் வந்தால் பெரியண்ணாவோடு ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனத் தாங்கல் தீருமென எண்ணினேன். வரும்படியாக வற்புறுத்தி அழைத்தேன். என் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கொஞ்சம் கோபத்தோடு பேசினார். “குமாஸ்தாவின் பெண் படக் கதைதானே உங்களுக்குச் சொந்தமானது. அதிலுள்ள டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை வேறு யார் எடுத்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்றேன் நான்.

“அந்தக் காட்சியை நானே உங்கள் படம் வருவதற்குமுன் எடுத்து வெளியிடப் போகிறேன்” என்றார்.

அவருடைய இந்தப் பதில் எனக்குச் சிறிது வேதனையைத் தந்தது என்றாலும் நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தேன். அவரே மேலும் பேசினார். “கண்டிப்பாக டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை நான் எடுக்கத்தான் போகிறேன்"

என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார். தொடர்ந்து நான் பூலோகரம்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட போதெல்லாம் இதை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கு அச்ச மாகத்தான் இருந்தது. ஒரு நாள் நான் சின்னண்ணாவிடம் கலைவாணர் கூறியதைத் தெரிவித்தேன். உடனே அவர் சிரித்துக் கொண்டு, “நம்மைப் பாதிக்கும் வகையில் என். எஸ் கிருஷ்ணன் எதையும் செய்வானென்று நான் நினைக்கவில்லை. நாம் படத் திற்குக் கூப்பிடவில்லையே என்ற கோபத்தில் ஏதோ பேசலாம்; இதெல்லாம் உரிமையோடு வரும் கோபம் ஆனால் நம்மைப் பொறுத்தவரை தவறான காரியம் எதுவும் நடைபெறாது’ என்றார். அவர் சொன்னபடியேதான் நடந்தது. இறுதிவரையில் கலைவாணர் உதட்டளவில் கோபத்தை வைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரது உள்ளம் துய்மையாகதான் இருந்தது என்பதைப் பின்னால் உணர்ந்தேன்.

பாலக்காடு முகாமில் குமாஸ்தாவின் பெண் ‘அவுட்டோர்’ காட்சிகள், பெரும்பாலும் கல்பாத்தி ஆற்றிலும், பாலக்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கப்பட்டன. பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிந்து விட்டது. குமாஸ்தாவின் பெண்ணில் சில சில்லரைக் காட்சிகளே எடுக்க வேண்டியிருந்தன. டைரக்டர் பி. என். ராவ் இருபடங்களையும் இயக்கி வந்ததால் இயன்றவரை முழுமையாக ஒத்துழைத்தார்.

இந்து முஸ்லீம் கலவரம்

படப் பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதால் கம்பெனி மதுரைக்குச் சென்றது. நான் குழுவினரை வழியனுப்பிவிட்டு கோவை சென்றேன். எனக்கு மட்டும் இரண்டொரு நாள் படப்பிடிப்பு இருந்தது. குழுவினர் மதுரைக்குச் சென்ற மூன்றாம் நாள், மதுரையில் பலத்த இந்து முஸ்லீம் கலவரம் நடப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன், பெரியண்ணாவின் கடிதமும் வந்தது. மதுரையில் கலவரம் நடப்பதால் நாடகம் சினிமா முதலிய கேளிக்கைகளை யெல்லாம் தடை செய்திருப்பதாகவும் ஒரு மாத காலம் இராஜபாளையத்தில் நாடகம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் எழுதியிருந்தார். என் மனம் கவலைப்பட்டது. வட

நாட்டில்தான் இப்படியுள்ள கலவரங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகள்போல் வாழும்தமிழ்நாட்டிலும் இப்படியொருநினைவு ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் வருந்தினேன். கம்பெனியைப் பொறுத்தவரை இது எதிர்பாராத நஷ்டத்தையே அளித்தது.

நாலேந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இராஜபாளையம் வந்து சேர்ந்தேன். இராஜபாளையத்தில் சற்றும் எதிர் பாராத வகையில் முதல் நாடகம் இராமாயணத்துக்கு நல்லவசூலாயிற்று. தொடர்ந்து குமாஸ்தாவின்பெண் நாடகம் நடந்தது. அதற்கும் சிறந்த வரவேற்பு.

இராஜபாளையம் நல்ல ரசிகர்கள் நிறைந்த இடம். குமாஸ்தா இராசாமி ஐயராக கம்பெனியின் பழம் பெரும் நடிகர் சிவகங்கை நடராஜன் நடித்தார். மிகச் சிறந்த நடிகர் இவர். உருக்கமாக நடிப்பார். வறுமை நிறைந்த தமது குடும்பத்தைத் தவிக்கவிட்டு ஐயர் மரணமடையும் காட்சியில் நானே உள்ளேயிருந்து அழுவேன். அவையோரும் கண்கலங்குவார்கள். இக்காட்சியில் பெரும்பாலும் சபையோரின் ரசனையை நான் உள்ளிருந்தபடியே, எங்கள் ரகசியத் துளைகளின் வழியாகப் பார்ப்பது வழக்கம். இராஜபாளையம் ரசிகர்கள் இக்காட்சியில் தேம்பித் தேம்பியழுதார்கள். குமாஸ்தாவின் பெண் 20 நாட்கள் நடந்தன.

மதுரைக் கலவரம் ஒருவாறு அடங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. இராஜபாளையம் நாடகத்தை முடித்துக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தோம்.
-------------------

47. என் திருமணம்


8- 4- 41இல் மதுரையில் ‘இராமாயணம்’ நாடகம் தொடங்கினோம். அடுத்துக் குமாஸ்தாவின் பெண் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் தொடர்ந்து நடைபெறும் சமயத்திலேயே மதுரை சென்ட்ரல் டாக்கீசில் குமாஸ்தாவின் பெண்படமும் திரையிடப்பட்டது. நாடகம், படம் இரண்டுக்கும் நல்ல பெயரும் புகழும் கிடைத்தன.

எங்கள் மனப்படி படம் சிறப்பாக வெளிவரவில்லை, என்றாலும் தமிழ் மக்களின் பாராட்டுக்குறித்தான படமாக இருந்தது. தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கைகளெல்லாம் படத்தைப் பாராட்டி எங்களுக்கு நல்வாழ்த்துக் கூறின. அறிஞர் அண்ணாவும் விடுதலையில் ஒருஅருமையான மதிப்புரை எழுதியிருந்தார் “நல்ல ஸ்டூடியோவும் திறமையான டைரக் ஷனும் இருந் திருந்தால் ‘குமாஸ்தாவின் பெண்’ இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கியிருக்கும்” என்று பம்பாயின் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான ‘பிலிம் இந்தியா’ விமர்சனம் எழுதியிருந்தது. பாராட்டுக்கு முக்கிய காரணம் கதையமைப்புத்தான் குமாஸ்தாவின் பெண் படத்தினால் கம்பெனிக்குத் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் கிடைத்தது. எங்கள் உழைப்புக்குக் கிடைத்த லாபம் அதுதான் என எண்ணி மன நிறைவு பெற்றோம்.

புராணப் படங்கள் ஒரளவு தோல்வியடைந்தாலும் போட்ட பணத்திற்கு மோசமில்லை. சமூகப் படங்கள் அப்படி யல்ல; பெரும் வெற்றி பெற்றால்தான் சிறிதாவது லாபம் கிடைக்கும். இதுதான் அன்றைய நிலை. இனி, எவருடைய கூட்டுறவுமின்றிப் படம் பிடிக்க முடிந்தால் அதில் ஈடுபடுவது;

எ. நா-24

இல்லையேல் இந்தப் படத்துறையே நமக்கு வேண்டாம் என்று எண்ணினோம். படமும் நாடகமும் ஒரே சமயத்தில்பல வாரங்கள் மதுரையில் ஓடியதால் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. நல்ல காலம் பிறந்ததாகவே கருதினோம். வெற்றிக் களிப்பில் வருவாய் முழுதும் செலவிட்டுச் சிவலீலாவுக்குப் புதிய காட்சிகள் தாயாரித்தோம்.

இனிக்கும் இராமாயணம்

சிவலீலாவைத் தயாரிக்க உதவியாக ஸ்ரீகிருஷ்ணலீலா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றது. சம்பூர்ண ராமாயணமும் தொடர்ச்சியாக நடந்தது. அது இரவு 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் விடிய 6 மணிவரை நடைபெறும் நாடக மாதலால் இடையே ஒரு நாள் ஒய்வு விட்டு மறுநாள் நடை பெற்றது. இராமாயணத்திற்கு மதுரையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் இடமின்றித் திரும்பிச் சென்றனார். அன்று நடைபெற்ற இலக்கியச் சுவையும் இசைச் சுவையும் நிரம்பிய இராமாயணத்தை இன்று நினைத்தாலும் உள்ளமெல்லாம் இனிக்கிறது! நடிகர்களின் பட்டியலைப் பாருங்கள். கலைஞர் ஏ. பி. நாகராஜன் சீதை, கலைமாமணி எம். எஸ் திரெளபதி மாயா சூர்பநகை; சங்கீதமேதை சங்கரநாராயணன் தசரதர்; பிரண்டு ராமசாமி விசுவாமித்திரர்; நடிகமணி டி. வி. நாராயணசாமி இலட்சுமணன்; தம்பி பகவதி இராவணன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அனுமார் இராமர் நான், நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரை பல நகைச்சுவை வேடங்கள். திருவாரூர் சீனிவாசன் பரதன். இவருடைய பரதன் நடிப்பைக் கண்டு தோழர் ஜீவானந்தமும் அறிஞர் அண்ணாவுமே கண்ணீர் விட்டிருக்கிறார்களென்றால் இவர் நடிப்பின் சிறப்புக்கு வேறென்ன நற்சான்று வேண்டும்?

திருமண ஏற்பாடுகள்

சிவலீலா தொடங்குமுன் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நாகர் கோவிலிலும் திருவனந்தபுரத்திலும் என் ஒன்றுவிட்ட அண்ணா திரவியம் பிள்ளையுடன் சென்று முன்பே நாலைந்து பெண்களைப் பார்த்தேன். அவர்களில் எவரும் என் மனதுக்குப் பிடிக்கவில்லை. இப்போது புதிய நாடகத்தயாரிப்பில், தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் நான் திருமணம் செய்து கொள்ள உண்மையில் விரும்பவில்லை. என்றாலும் பெரி யண்ணா விருப்பத்தை மறுக்காது ஒப்புக் கொண்டேன். சேலத்திலுள்ள எங்கள் நண்பர் திரு பஞ்சகதம் செட்டியார் சேலம் செவ்வாய் பேட்டையில் ஒரு பெண் இருப்பதாகவும், அவள் எனக்குப் பொருத்தமான பெண் என்றும் பெரியண்ணாவிடம் சொன்னதாக அறிந்தேன். சேலம் பெண்ணைப் பார்த்து வருவதற்காகத் தான் பெரியண்ணா என் ஒப்புதலை அறிய விரும்பினார் என்பது புரிந்தது. நான் இசைவு தெரிவித்ததும் பெரியண்ணா சேலம் போய் பெண் பார்த்துவர முடிவு செய்தார். அண்ணாவின் விருப்பற்திற்கு இணங்கினேன் என்றாலும் வடமொழி மந்திரங்கள் சொல்லாமல் தமிழ்த் திருமண முறையிலேயே எனக்குச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்பதை வற்புறுத்தினேன். இதைப் பெரியண்ணாவிடம் நேராகச் சொல்ல எனக்குத் துணிவு வரவில்லை. அண்ணா திரவியம் பிள்ளையவர்களிடம் அழுத்தமாகச் சொன்னேன். “அதற்கென்ன, அப்படியே செய்யலாம்” என்றார் அவர். நான் சேலம் மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் எங்கள் பஞ்சநதம் செட்டியார்.

புதுமனை புகு விழா

நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மதுர பவனம் புதுமனை புகுவிழா 9-7-41இல் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் கே. ஆர். இராமசாமியும் சென்றிருந்தோம். என். எஸ். கே.யின் விருப்பத்திற்கிணங்க மேலும் ஒருநாள் அவர் இல்லத்தில் தங்கினோம். மதுர பவனம் திறப்பு விழா நடைபெற்ற அதே தேதியில் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் பெரியண்ணா எனக்குப் பெண் பார்த்ததாக அறிந்தேன். 11-7-41 இல் நானும் சகோதரர் இராமசாமியும் பாளையங்கோட்டை வந்து தங்கை காமாட்சி வீட்டில் தங்கினோம். என்னை உடனே அவசரமாகப் புறப்பட்டு வரும்படி மதுரையிலிருந்து சின்னண்ணா தந்தி கொடுத்திருந்தார். மறுநாட் காலை நானும் இராமசாமியும் மதுரை வந்து சேர்ந்தோம். சேலத்தி லிருந்து பெரியண்ணா எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். பெண்ணைப் பார்த்ததாகவும், நானும் வந்து பார்த்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சேலம் பஞ்சநதம் செட்டியார் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கடிதத்தில் கண்டிருந்தது. நான் உடனே என் திருமணம் தமிழ் மண முறை யில் நடை பெறவேண்டும் என்பதை வற்புறுத்தி, அதற்கான காரணங்களையும் விளக்கிப் பெரியண்ணாவுக்கு நீண்ட கடிதம் எழுதி அவசரத் தபாலில் போட்டேன். சின்னண்ணா விரும்பியபடி அன்றிரவே நானும் எங்கள் நண்பர் எம். கே. கிட்டுராஜூவும் பெண் பார்த்து வரச் சேலம் புறப்பட்டோம்.

தமிழ்த் திருமணம்

மறுநாள் சேலம் வந்து சக்தி பிலிம்ஸ் நிர்வாகி நண்பர் சீனிவாசன் இல்லத்தில் தங்கினேன். நான் சேலம் வருவதற்குள் பெரியண்ணா மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். முதல்நாள் நான் பெரியண்ணாவுக்கு அனுப்பிய அவசரக் கடிதம் பஞ்சநதம் செட்டியார் வீட்டுக்குச் சென்றபோது கிடைத்தது. அதை வாங்கி மீண்டும் ஒருமுறை படித்தேன். இந்தக் கடிதத்தைப் பார்த்தால் பெரியண்ணாவின் மனம் ஏதேனும் புண்படுமோ என்ற ஐயம் தோன்றியது. உடனே கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டேன். பெண் வீட்டார் சார்பில் சில நண்பர்கள் வந்திருந்தார்கள். “தமிழ்த் திருமண முறையில் சடங்குகள் நடப்பதற்கு பெண் வீட்டார் சம்மதிப்பார்களா?” என்று கேட்டேன். அவர்களில் எனக்கு மிகவும் நெருங்கிய பிராமண நண்பர் ஒருவர், “ஏன் வட மொழிமீது உங்களுக்கு வெறுப்பா?” என்று கேட்டார். நான் மிகுந்த அடக்கத்தோடு, வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது எனக்குச் சிறிதும் துவேஷம் இல்லை. ஆனால் நான் தமிழன். என் திருமணம் என்னுடைய தாய்மொழியாகிய தமிழில் தேவாரத் திருமுறைகளை ஓதி நடைபெறவேண்டும். இதுவே என் கொள்கை என்றேன். பிறகு நண்பர் சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் உங்கள் விருப்பம்போல் நடக்கும். பெண்வீட்டார் தடையொன்றும் சொல்லமாட்டார்கள்” என்றார்.

மைத்துணியின் வரவேற்பு

14-ஆம் தேதி முற்பகல் பெண் வீட்டிற்குச் சென்றேன் பெண்ணுக்குத் தந்தையார் இல்லை. தாயும், தாயோடு பிறந்த, மாமனும் இருந்தார்கள். பெண்ணின் உடன் பிறந்தவர்களான ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் என்னை வரவேற்றார்கள். பெண்ணின் தங்கை சரஸ்வதி ஒரு தூண் அருகில் நின்று கொண்டு புன்னகையோடு என்னை கும்பிட்டாள். அவளுடைய அழகிய தோற்றத்தையும் வசீகரத்தோடு என்னை வணங்கி நின்ற பாங்கினேயும் பார்த்து நான் முதலில் இவள்தான் பெண் என்று நினைத்துக் கொண்டேன். என்னுடன் வந்த நண்பர் இவள் பெண்ணின் தங்கை சரஸ்வதி. பெண் இன்னும் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பாள்” என்று காதில் ஒதினார். உடனே பெண்ணின் தங்கை சரசு “அக்கா உள்ளே இருக்கிறாள். வெளியே வரக் கூச்சப்படுகிறாள். நீங்கள் உள்ளே போய்ப் பார்க்கலாம்” என்றாள். அவளை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நான் உடனே “உன்னைப் பார்த்ததே போதும். அக்கா உன்னை விடஅழகு என்று நண்பர்சொல்லுகிறார். உள்ளேபோய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். உடனே அவள் பதற்றத்தோடு, “இருங்கள், காப்பி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று உள்ளே ஓடினள். உள்ளிருந்து சிரிப்பொலிகேட்டது. அருகில் இருந்த என் நண்பர் “பெண்தான் சிரிக்கிறாள்” என்று மெதுவாகச் சொன்னார். நானும் சிரித்தேன், சிற்றுண்டி பரிமாறப் பட்டது. விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம். மறுநாள் மதுரை வந்து சேர்ந்தேன். பெண்ணின் தமையனும் பெரியண்ணாவுடன் பேசுவதற்காக என்னோடு மதுரைக்கு வந்தார்.

திருமணம் நடந்தது

16-ஆம்தேதியன்று திருமணம் உறுதிசெய்ப்பட்டது. பிறகு ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. 20ஆம் தேதி காலை சேலம் செவ்வாய்பேட்டையிலுள்ள பெண்வீட்டில் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. பெரியண்ணா, சின்னண்ணா தம்பதிகள், தங்கைகாமாட்சி அண்ணா திரவியம்பிள்ளை முதலியோர் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சேலத்திலிருந்து திரும்பியதும் கம்பெனி மானேஜர் திரு ஆர். கே. மூர்த்தி என்னிடம் வந்து தமிழ்த் திருமணம் நடத்த எல்லோரும் இசைந்துவிட்டதாகக்கூறினார். ஆனால் உண்மையில் நான் எண்ணியபடி நடைபெறவில்லை. திருமணத்திற்கு இரண்டு நாட்களின் முன்பே புரோகித முறைப்படி தான் திருமணம் நடைபெறும் என்ற செய்தியினை நான் அறிந்தேன். என் வேண்டுகோளை யாருமே பெரியண்ணா காதில் போடவில்லை என்ற உண்மை அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. அவரிடம் இதைச் சொல்ல அஞ்சி அனைவரும் மெளனம் சாதித்து விட்டார்கள் என்பது புரிந்தது. நானும் பெரியண்ணாவின் மனம் புண்படும்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று கட்டப்பாட்டுக்கு அடங்கினேன். புரோகித மறுப்புப் பெரிதா? சகோதரப்பாசம் பெரிதா? என்ற மனப் போராட்டத்தில் சகோதர பாசமே தலைதுாக்கி நின்றது; வென்றது!

4-7-1941 இல் மதுரை இராமநாதபுரம் சேதுபதி மன்னார் மாளிகையில் சேலம் செவ்வாய்பேட்டை செல்வி மா. மீனாட்சிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆம்! புரோகித முறைப்படி வட மொழியில் மந்திரங்கள் ஒதித்தான் மாங்கல்யம் சூட்டினேன். என் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய நாதசுர வித்வான் குளிக்கரை திரு. பிச்சையப்பா அவர்கள் குழுவினார் நாதசுர இன்னிசை பொழிந்தார்கள். வேய்ங்குழல் மாமன்னார் டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி மாலையில் விமரிசையாக நடந்தது.

ஏற்கனவே மனஸ்தாபம் காரணமாக விலகியிருத்த மாமா திரு. செல்லம்பிள்ளை என் விருப்பத்திற்கிணங்க திருமணத்திற்கு வந்திருந்து, வாழ்த்தினார். காரைக்குடியியில் ஏற்பட்ட சம்பவத்தினால் கம்பெனிக்கு வராதிருந்த கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனும் தம் மனைவி மதுரம் அம்மையாரோடு வந்து கலந்து கொண்டார். கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்த இவர்களெல்லாம் மீண்டும் ஒற்றுமையுணர்வோடு வந்து உறவாடிக் களிக்க என் திருமணம் காரணமாக இருந்தது குறித்து நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். திருமணத்தையொட்டி சேலம் சென்று, மறுவீடு மற்றும் சடங்குகள் எல்லாம் முடித்து, மதுரைக்குத் திரும்பி, புதிய நாடக வேலைகளில் ஈடுபட்டேன்.
--------------

48. நல்ல காலம் பிறந்தது


சிவ லீலாவுக்காக கைலாயம்; பாண்டியன் அவை, ஹேம நாதன் வீடு; தாமரைத் தடாகம்; சொக்கேசர் சந்நிதி; மீனாட்சி யம்மன் சந்நிதி; பொற்றாமரைக்குளம்; சங்கமண்டபம்; அபிஷேக பாண்டியன் அந்தப்புரம், கல்யானை மண்டபம், துர்க்கை சந்நிதி கடற்கரை முதலிய காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. ஆலயத்தின் உள்ளேயுள்ள கல்யானைகளை அப்படியே மோல்ட் எடுக்க ஆலய அதிகாரிகள் ஒத்துழைத்தார்கள். இவற்றைத் தவிர இடையே தாமதம் ஏற்படாதிருக்கச் சில மாறுங் காட்சிகளும் வரையப் பெற்றன. ஒவியர் தேவராஜய்யர் ஒவ்வொரு காட்சியையும் வியக்கத்தக்க வகையில் எழுதினார். ஒப்பனையாளர் இராஜ மாணிக்கம் உடைகளுக்காக வரைபடங்கள் எழுதிக்கொண்டு பல வித வண்ண உடைகள் வெல்வெட்டிலே தயாரித்தார். சரிகை வேலைப்பாட்டில் கைதேர்ந்த மஸ்தான்கான், சுபான் சாயபு ஆகிய முஸ்லீம் கலைஞர்கள் தறியில் இடைவிடாது வெள்ளிச் சரிகை வேலை செய்தனார். மரச் சிற்ப வேலையில் பிரசித்தி பெற்ற இரு மலையாள இளைனார்கள், சிங்க ஆசனம், யானை ஆசனம், மயில் ஆசனம், மயில் கட்டில், பல்லக்குகள் முதலியனவற்றை விரைவாகச் செய்து முடிக்க, அவற்றிற்குத் தங்க ரேக் ஒட்டும் நுணுக்கமான வேலையை நடிகர்கள் அனைவரும் செய்தார்கள். பின்னணி இசையமைப்புக்காக டி. எம். இப்ராஹீம் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். நகைச்சுவை நடிகர் சிவதாணு நடனப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு பாவையர் நடனம், மயில் நடனம், வலைனார் நடனம் ஆகியவற்றை அழகுபெற அமைத்தார். ஆலவட்டம், சந்திரவட்டம், சூரியப் பிரபை, தங்கத்தடி, வெள்ளித்தடி, மீனக்கொடி, வெண்சாமரம் அனைத்தும் தயாராயின, சாதாரணக் காவலர் உட்பட எல்லாப் பாத்திரங்களுக்கும் புதிய உடைகள் தைக்கப் பட்டன. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் பகுதிக்குத் தேவையான மின்னல். இடி-மழைக்காட்சி பரணில் நீண்ட குழாய்கள் பொறுத்தி எல்லோரும் வியப்புறும் வண்ணம் மேலிருந்து மழைகொட்டும்படி தந்திரக் காட்சியாக அமைக்கப் பெற்றது. ஏற்கனவே பல முறைகள் நடைபெற்ற பழைய சிவலீலாவை மீண்டும் சில நாட்கள் ஒத்திகைப்பார்த்து ஒர் உன்னதமான கவலைப்படையாக உருவாக்கினோம். 27-7-1941 ஞாயிறன்று மதுரை கோபாலகிருஷ்ணா தியேட்டரில் சிவலீலா பிரமாதமான விளம்பரத்துடன் தொடங்கியது. எங்களுக்கும் நல்ல காலம் பிறந்தது. சூலமங்கலம் பாகவதரும் அவரது குடும்பத்தினரும் புதிய தயாரிப்பை வந்து பார்த்துப் பூரித்துப் போனார்கள்.

தம்பி பகவதியின் சாதனை

திருச்சிக்குப் பிறகு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் மதுரையில்தான் மீண்டும் வந்து, சிவலீலாவைப் பார்த்தார். நான் கோவைப் படப்படிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதில், நான் இல்லாமல் சிவலீலா நடைபெறுவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். பகவதியின் நடிப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. திருப்பூரில் சிவலீலா தொடர்ந்து நடைபெற்றபோது, நான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் திருப்பூருக்கு நாடகம் பார்க்க வந்து விடுவேன்; சபையில் அமர்ந்து சிவ லீலா நாடகத்தை நானே பல முறை பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி, புலவர், சிவனடியார், சித்தர், வலைஞன் ஆகிய வேடங்கள் என்னைவிடப் பகவதிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. தோற்றப் பொலிவு எந்த நாடகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. தம்பி பகவதி பார்வைக்கு என்னைவிடப் பெரியவராகத் தோன்றுவார். அது மட்டுமல்ல; என் குரல் மென்மையானது. பகவதியின் குரல் கம்பீரமானது. சிவலீலாவில் நான் புனைந்த வேடங்கள் யாவற்றிலும் பகவதி என்னைக்காட்டிலும் பன்மடங்கு சிறந்து விளங்கினார். எனவே, நான் மீண்டும் அந்த வேடங்களைப் புனைய விரும்பவில்லை. நாடகத்தின் நடுவே வரும் சண்பக பாண்டியன் என்னும் சிறிய வேடத்தை ஏற்று நடித்தேன். இந்த விவரங்களையெல்லாம் நான் பாகவதருக்கு எழுதினேன். ஆனாலும், அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. மதுரைக்கு வந்து நாடகத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குப் பூரண திருப்தி ஏற்பட்டது. பகவதியின் நடிப்பையும் பாட்டையும் அவர் அபாரமாகப் புகழ்ந்து பாராட்டினார். வாய்ப்பு நேரும்போதுதானே வளர்ச்சி தெரியும்! ஒருவருடைய ஆற்றலை அறிய வேண்டுமானல் அதற்குரிய பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினைத் தம்பி பகவதி, அரிய சாதனையாக வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றார்.

காற்றும் மழையும்

சிவலீலா அரங்கேறிய ஐந்தாம் நாள் நவாப் இராஜ மாணிக்கம் நாடகம் பார்க்க வந்திருந்தார். அன்று மாலை ஆறு மணிக்கே காற்றும் மழையும் அமக்களப்படுத்தின. ஒப்பனைக்காகத் தனியே தகரக் கொட்டகை போட்டிருந்தது. அதன் நடுவே சில தென்னை மரங்களும் இருந்தன. எல்லோரும் வேடம் புனைந்து கொண்டிருந்தனார். மணி 7-30 ஆயிற்று. மழை நிற்கவில்லை. காற்றின் வேகமும் தணியவில்லை. இந்த நிலையில் பளீரென்று ஒரு மின்னல்; மின்சார விளக்குகள் அணைந்தன. மின்னொளி நிபுணர் ஆறுமுகம் உள்ளே வந்தார். நானும், தம்பி பகவதியும் ஒப்பனைக்காகப் போடப்பட்டிருந்த ஷெட்டின் உள்ளே, தென்னை மரத்தின் ஒரமாக நின்று, “என்ன மின்சாரக் கோளாறு?” என்று ஆறுமுகத்தை விசாரித்தோம்; அவ்வளவுதான். தீடீரென்று ஒரு சூறைக் காற்று; தென்னை மரம் முறிந்து பயங்கரமான சத்தத்துடன் தகர ஷெட்டின் மீது விழுந்தது. நாங்கள் நின்ற இடத்தில் எங்கள் தலைக்கு மேலே போட்டிருந்த தகரம் பிய்த்துக் கொண்டு தடாரென்று எங்கள் காலடியில் விழுந்தது. நாங்கள் பிழைத்தது ‘இறைவன் திருவருள்’ என்றே சொல்ல வேண்டும். புத்தம் புதிய காட்சிகள் யாவும் நனைந்தன.....

என்ன ஆச்சரியம்! திடீரென்று மழை ஒய்ந்து, சில நிமிடங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. சிவலீலாவுக்கு ஏற்பட்ட திருஷ்டி என்று சில பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். மின்சார வீசிறிகளைச் சுழல விட்டு, நனைந்த ஆடைகளை உலர்த்தினோம், நாடகம் 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. விடா மழையிலும் பெருங் கூட்டம் வந்திருந்தது. இசைச்செல்வர் இலட்சுமணபிள்ளை, திருமுருக கிருபானந்த வாரியார், சர். பி. டி. இராஜன் மூவரும் இடையே நடைபெற்ற நாடகங்களில் தலைமை தாங்கி வாழ்த்தினார்.

நக்கீரர் நாராயணபிள்ளை

சிவலீலாவில் நக்கீரராக நடித்த என். எஸ். நாராயண பிள்ளையைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். கோல்டன் சாரதாம்பாள் கம்பெனியில் நடிகராக இருந்து புகழ் பெற்றவர். 1937இல் எங்கள் குழுவில் சேர்ந்தார். பெரும்பாலும் நகைச் சுவைப் பாத்திரங்களையே ஏற்பார். நன்றாக நடிப்பார். தமிழில் புலமை பெற்றவர். இயல்பாகவே திறமையாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் ஜோஸ்யர் பாத்திரத்தைத்தாங்கி அற்புதமாக நடித்து வந்தார். திரைப்படத்திலும் இவரே ஜோஸ்யராக நடித்தார். குமாஸ்தாவின் பெண் கடைசிக் காட்சியில் மாப்பிள்ளையின் தகப்பனார் வேடத்திலும் இவரே நடித்தார். பெண் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதற்காக இவர் கோபித்துக் கொண்டு வெளியேறும் கட்டத்தில் அபாரமாக நடித்து அவையோரின் பாராட்டுதலைப் பெறுவார். தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் இவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நக்கீரராக நடித்தார். தருமியிடமும், தருமிக்காக வாதாட வரும் புலவரிடமும் இவர் உரையாடும் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என்னும் செய்யுளை இவர் தெளிவாக எடுத்துச் சொல்லி, அதில் குற்றம் கூறும் தோரணையும், இவருடைய கம்பீரமான தோற்றப் பொலிவும், இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து, “நக்கீரா குற்றந்தானா?” என்று கேட்கும் போது, “புலவரே, நீரே முக்கண் முதல்வனுயினுமாகுக; உமதுநெற்றியில் காட்டிய கண்ணைப்போல் உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டாலும் உமது கவியிற் குற்றம் குற்றமே; நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என்று வீர முழக்கம் செய்யும் கட்டம் எழுச்சி மிக்க புலவர் நக்கீரனுரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். நாடகத்தின் நடுவே வரும் இக்காட்சி முழுதும் ‘செந் தமிழ் முழங்கும்’ என்று சொன்னால் சிறிதும் மிகையாகது. இறுதியில் நக்கீரர் “தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!! உலகெல்லாம் தமிழ்முழங்கட்டும்!!!” என்ற முழக்கத்தோடு உள்ளே செல்வதும் அவரைத் தொடர்ந்து புலவர் பெருமக்கள் எல்லோரும், “உலகெல்லாம் தமிழ் முழங்கட்டும்!” என்று உரத்த குரலில் எதிரொளிப்பதும் சபையோரைப் புல்லரிக்கச் செய்யும் அற்புதக் காட்சியாகும். சில நாட்களில் இந்த முழக்கத்தில் சபையோரும் உணர்ச்சி வசப்பட்டு “தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க!” என்று முழங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிவலீலா புராண நாடகந்தான் என்றாலும் தருமிக்குப் பொற்கிழி அளித்த இந்தப் படலத்தின் மூலம் தமிழ் உணர்வை மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம்.
----------------

49. முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்


சிவலீலா தொடர்ந்து நடைபெற்றது. 100வது நாள் விழாவுக்கு குமாராஜா எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமை தாங்கிப் பாராட்டினார். “என் தந்தையார் தமிழிசை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே டி. கே. எஸ். சகோதரர்கள் இந் நாடகத்தில் தமிழ் இசையை நல்ல முறையில் பரப்பிப் பிரச்சாரம் செய்து வருவது குறித்துப் பாராட்டுகிறேன்.” என்று கூறினார். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் பெருமக்கள் அனைவரும் வந்து நாடகத்தைப் பார்த்தார்கள். தமிழ் சங்கத் துணைத் தலைவர் சீனிவாச ஐயங்காரும் தலைமைப் பேராசிரியர் திரு நாராயண ஐயங்கார் சுவாமிகளும் நாவலர் சோமசுந்தர பாரதியார் ஜெகவீர பாண்டியனார், கார்மேகக் கோனார் முதலிய பெரும் புலவர்களும் 108ஆவது நாள் வருகை புரிந்து எங்களைப்பாராட்டி முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம் என்னும் பட்டத்தையும், சங்கத் தலைவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் கையெழுத்திட்ட பெரிய பத்திரத் தையும் அளித்தனார்.

அன்று அந்த மாபெரும் புலவர் பெருமக்கள் மேடைமீது நின்று வாழ்த்திப் பாடிய பாடல்களிலும் மனமுவந்து வாழ்த்திய உரை மணிகளிலும் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாச்சாலை ஆசிரியர்
சு. நல்ல சிவன்பிள்ளை அவர்கள்

    பரதவன்றன்வடிவாகி வலேகைக் கொண்டு
    பகர றிய மீன்படுத்தும் பரிவிற் செய்த
    புரதகனன் விளையாட்டும், அவன்றன் கூத்தும்,
    புவனமெல்லாம் ஈன்ற சக்தி புரியும் கூத்தும்,

    விரதமுனி வரர் விபுதர் உரக ரேனோர்
    விழைந்துதவம் புரிந்திடினும் மேவு றாத
    சரதமுறு சிவலீலை புரியூரீ பால
    சண்முகா னந்தசபை தனிற்கண் டோமே!

    சிவபத்தி அடியர்பத்தி சிறந்த கச்சித்
    திருகுறிப்புத் தொண்டர் பத்தித் திறனைக் கண்டு
    நவபத்தி யுலகிலுளோ ரடையும் வண்ணம்
    நடித்தாகா டகத்திறனை காமென் சொல்கேம்!
    பவசத்தி தனையகற்றும் நெறிகைக் கொண்ட
    பண்புறுகா டகசபையின் பால சீலர்
    தவசத்தியுறுதலைவர் தூய பால
    சண்முகா னந்தசபை தழைத்து வாழி!

நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் எம். ஏ., பி. எல்.

“ஸ்ரீபால சண்முகானந்த சபையார் நடத்தும் சிவலீலா என்னும் நாடகத்தைப் பல நண்பர் பார்த்து வந்து புகழ்ந்ததைக் கேட்டு 26.10.41 இல் நானும், என் குடும்பத்தாரும் போய். பார்த்தோம். நன்றாயிருந்தது என்று சொல்லுவது நான் அனுப வித்த உணர்ச்சியை விளக்கப் போதாது. தற்காலம் நடிக்கப்படும் தமிழ் நாடகங்கள் குலப் பெண்களோடு கண்டுகளிக்கக்கூடாத தாயும்,கல்லாத மாந்தர்க்கன்றி நல்லோர் உவக்கக்கூடாததாயும் இருந்து வருவதால் சுமார் 40 ஆண்டுகளாக நான் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்க்காமல் வெறுத்திருந்தேன். சிவலீலாவைக் கண்ட பிறகுதமிழரும் நல்ல முறையில் அறிவுடையார் மகிழ, கண்டார் மனதில் அறநிலைகள் உறைக்க, இன்பமும் உணர்வும். ஒன்றி உவக்க, நடிகர்கள் தமிழில் நாடகம் நடத்தக்கூடுமென்று நம்பலானேன்.

அவரவர் நிலையில், அவரவர் நடிப்புச் சிறந்திருந்தது. இவ் வாறு சமயக் கதைகளை வழுவற நடித்துச் சான்றாேர் மகிழச் செய்வதால் சமயத்தில் அன்பும் மதிப்பும் வளர்வதாகும். காத லின்பமும் தூய முறையில் காட்டப்பெற்றது. காட்சிகளெல்லாம் இயற்கையின் மாட்சி தோன்ற இனிது சமைக்கப்பட்டிருந்தது. அசாதாரண கடவுட் செயல்களை நிகழ்வனபோல் நேரிற் காட்டி, பார்ப்பவரெல்லாம் பரவசப்படுமாறு அமைத்திருந்த அழகு வியக் கத் தக்கது. இசையொடு நிறைந்த இன்சுவைப் பாட்டுகள் ஒவ்வொரு நடரும்பாடிய சிறப்பு உணர்வைக்கொண்டது. ஐம்பொறி களையும், அறிவையும் ஈர்த்து ஒப்பக் களிக்கச் செய்த இந்நாடகத்தை எல்லோரும் வியந்து புகழ்வது இயற்கையாகும். இத்தகைய நல்ல கதைகளே நாடகமாக்கி நடித்துத் தமிழரை அறிவும் ஒழுக்கமும் இன்ப முறையில் எளிதில் உணர்த்தி இச் சபையார் புகழொடு செல்வம் பெருக அருளுமாறு இறைவனை இறைஞ்சுகின்றேன்; சபையோருக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்து கின்றேன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழாசிரியர்
ஆ. கார்மேகக்கோனார் அவர்கள்

    ”... ... ... .... .... ... ... ... ... ...
    ஆலவாய் அவிர்சடைப் பெருமான் அன்று
    சாலவே மன்பதை தாமுய்ங் திடற்கு
    அருளொடு புரிந்த திருவிளையாடலுள்
    ஒரு சில வற்றை உருவுடன் தொகுத்து
    இந்த காள்தனில் இங்ககர் வாழும்
    மக்கள் யாவரும் மகிழ்ந்துகண் டின்புற
    ஆடலும் பாடலும் அபிநய வகைகளும்
    பீடுறும் எழினியின் பிறங்கொளி கலங்களும்
    சாலவே அமையப் பால சண்முகா
    ந்த சபையார் நலமுடன் புரிந்து
    நூற்றெட்டு நாட்களும் நுவவருஞ் சிறப்பொடு
    நாற்றிசை போற்ற கடித்திட்ட காட்சியை
    என்னென் றியம்புவேன்! இந்நக ரெல்லாம்
    எண்ணாம் எண்ணமும் இயம்பும் சொல்லும்
    சிவலீ லையே! சிவலீ லையே!"

திருவனந்தபுரம் இசைச் செல்வர்
திரு தி. இலட்சுமணபிள்ளை அவர்கள்

டி. கே. எஸ். 8 சகோதரர்கள் மதுரையில் நடத்தி வருகிற நாடகங்களில் சிவலிலே என்னும் திருவிளையாடற் புராணக்கதை

நடித்ததை நான் கண்ணாற்று மிக மகிழ்ந்தேன். நடிப்பு முறை களில் எல்லா அம்சங்களும் போற்றத் தக்கனவாக இருந்தன. இவ்வாறு வேறுஅநேக கதைகளையும் இவர்கள் நடித்து மகாஜனங் களே ஆனந்திப்பித்து வருவதாக அறிகிறேன். நாடகப் பாத்திரங் களாயுள்ளவர்கள் இனிய செந்தமிழ் நடையிலும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் விதத்திலும் பேச்சு நடத்துவதைக் கேட்டு உவகை கொண்டேன். காட்சிப் படங்கள் மனதைக் கவர்ந்து கொள்ளும் சிறப்புடையன. சாகித்யமும் சங்கீத மெட்டுக்களும் மெச்சத்தக்கன. நாடகம் நடத்துகிற ஒழுங்கும் நடவடிக்கைகளும் டி. கே. எஸ். சகோதரர்களினுடையநுண்ணறி வையும் நல்லொழுக்கத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குவன. அவர்களுடைய இந்த வியக்கத் தக்க முயற்சி இன்னும் மேம்பாடுற்று இனிய தமிழ் வளர்ச்சியையும் தமிழ் இன்னிசை வளர்ச்சியையும் உண்டாக்கித் தழுலகிற்குப் பேருதவி யளிக்குமென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.

மதுரை தமிழ் வித்வான் திரு. நா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள்

    சிவபெருமான் கூடலின்கண் செய்ததிரு
            விளையாடல் செப்புங்காலை
    எவரறிவார் பரஞ்சோதி எழுதிவைத்த
            ஏட்டிலிவை இருப்பதன்றி?
    பவம்விலகிப் புனிதமுற மதுரையூரஸ்ரீ
            பாலசண்மு கானந்தப்பேர்
    சவைகடித்துக் காட்டினதால் சங்கீத
            வமுதினையும் சார்ந்துண்டோமே!

    வல்லானென் றிசைப்போர்க்கு வந்தவனை
            யோடவிட்ட மகிமை கண்டோம்
    கல்லானை உண்பதற்குக் கரும்பளித்த
            பெருங்காட்சி கண்டோம் ஆங்கே
    இல்லாரை உண்டாக்கி இருக்தாரைக்
            கணமறைத்த இயல்பு கண்டோம்
    எல்லாஞ்செய் திடற்குரிய ஈஸ்வரனார்
            விளையாடல் என்னே! என்னே!!

    பேர்சிறக்த டி. கே. எஸ். பிரதரிவர்
            நடிப்புமுறை பேணுங்கீதம்
    சீர் சிறந்த செந்தமிழ்ப் செவிக்கினிய
            வசனநடை தேகுே பாலோ!
    ஓர் சிறந்த தெள்ளமுதோ உண்ண உண்ணத்
            திகட்டாமல் உளமுற்றுாறும்
    பார் சிறந்த முப்பழத்தின் பாகமுதோ
            அத்தனையும் பகரலாமே!

    தனிமதுரை ஸ்ரீபால சண்முகா
            னந்தசபை தரணிமீது
    கனிமதுர கவரசநற் கண்காட்சி
            சங்கீதம் கலந்து தோன்ற
    மனிதர்குலம் மகிழ்வடைய மாபெரிய
            சரிதமெலாம் வகுத்துமேலாய்
    இனி திருந்து நடத்திடுக! இருகிலமிங்
            கிருக்கும்வரை இசைந்துமாதோ !

மதுரை கே. இலட்சுமி பாரதி. எம். எல். ஏ.

இச்சபையார் நடத்தி வருகிற சிவலீலா நாடகத்தை மும் முறை பார்த்தேன். இன்னும் எத்தனைமுறை பார்த்தால் திருப்தியடைவேன் என்று சொல்வதற்கில்லை. தெவிட்டாத தெய்வ அமிர்தம் என்றே சுருங்கக் கூறுவேன். தமிழை அழ்மிதுக்கு ஒப்பிட்டது இதனால்தான் போலும்! தெய்வ பக்தியின் மேன்மைகளைப் பரப்புவது இந்த நாடகம், தமிழ்மொழியைத் தழைத்து ஓங்கச் செய்வது இந்த நாடகம் பார்க்குந் தோறும் உள்ளத்தை உயர்த்துகிறது. கண்ணைக்கவரும் காட்சிகள்; உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் பேச்சு! செவிக்கினிய பாட்டு!! மனதை இழுக்கும் சிவ பெருமான் திருநடனம். பார்த்து அனுபவிக்க வேண்டிய இந்த நாடகத்தை எழுத்தில் புகழ்வது எங்ஙனம் இயலும்? மக்களுக்குப் பயன்படும் இத்தகைய நாடகங்களை நடத்திப் பேரும் புகழோடும் சீரும் சிறப்போடும் இச்சபையார் வாழ்ந்து ஓங்கி வளம்பெற வளரவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கவிராஜ பண்டித ஜெகவீர பாண்டினார் அவர்கள்

    உலகுயிர் உய்ய ஒளிர்சிவம் நடித்த
            உயர்சிவ லீலையை இன்றித்
    தலமுயர் பால சண்முகா னந்த
            சபையினார் சதுருடன் நடிக்கும்
    நிலையெதிர் கண்டார் நிறைநலம் கண்டார்
            நித்தலும் சிவனருள் நினைந்து
    நலமுயர் பக்தி நிலைமிகப் பெற்று
            நானிலம் இன்புற வாழ்வார்!

ஸ்ரீ மதுர பாஸ்கரதாஸ் அவர்கள்

    தீர்க்கமுடன் நூற்றெட்டுத் தினங்களிதே சிவலிலைத்
            திருவி ழாவைப்
    பார்க்கவரும் பேர்களித்தோ ராயிரத்தெட் டரன்பதியைப்
            பணிந்த பாக்யம்
    ஊக்கமுறக் கிடைத்ததென்றே கூறுகின்றார் நந்நெறியி
            லுயர்ந்தோ ரெல்லாம்
    ஆக்கமிகும் ஸ்ரீபால சண்முகா னந்தசபைக்
            கரும்பே றீதே!

    இயலிசைக்குப் பிறகுவைத்த நாடகத்தை முதன்மைபெற
            எடுத்துக் காட்டிச்
    செயலிசைக்கும் நவரஸங்க ளுடன் பலமெய்க் காட்சிகளும்
            சிறப்பாய்த் தோன்றக்
    கயலிசைக்கண் ணம்பிகையாள் மதுரைநகர்ச் சனசமுகம்
            களிப்பே கூர
    மயலிசைக்கும் ஸ்ரீபால சன்முகா னந்தசபா
            வாழ்க மன்னே!

    சங்கரன் முத்துசாமி சண்முகனும் பகவதியாம்
            சகோத ரர்தாம்
    பொங்கரவம் புனைந்தபிரான் திருவருளாற் பலாகலமும்
            பொருந்தி வாழ்க!
    இங்கிதமும் குணநெறியும் தவருத சதுரரிவர்
            இனிதாய் வாழ்க!
    மங்களமும் நிறைமதியும் நவகிதியும் ஓங்கியென்றும்
            வாழ்க மாதோ!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜனாப் உபயதுல்லா அவர்கள்

இவர்கள் தேர்ச்சியாக நடத்தி வரும் சிவலீலா நாடகத்தை இரண்டு முறை பார்த்தேன். மிகவும் நேர்த்தியாகவும், நடி கர்கள் திறமையாகவும் வாக்குச் சுத்தத்தோடும் இசைவன்மை யோடும் நடிப்பின் பாவத்தோடும் நன்முக நடிக்குந் தன்மை, மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. சரித்தித்தின் தன்மை, போக்குக்கு ஏற்றார்போல் காட்சிக்கு அழகான படுதாக்கள். வர்ணத்தட்டிகள் மிக மிக அமைப்பாக இருந்தது. மணிக்கணக் காகப் பார்ப்பதில் சலிப்புத் தட்டவில்லை. இப்பொழுது நவீன முறையில் பல சினிமாப் படங்கள் மதுரை நகரில் நடந்து வரும் போதும் ஒரே கதையை நூறுதினங்கள் நடத்திய பிறகும் ஜனங் களின் உற்சாகம் குன்றாது கூட்டம் கூட்டமாகப் பார்த்து வருவது ஒன்றே, இக்கம்பெனியின் திறமையை மெய்பிக்கிறது.

குமரகவி திரு. மு. நாராயணசாமி பிள்ளை

    நவரசங்கள் மேவுமுயர் நாடகப்பண் பால்முன் த
    வமுனிவர்க் கேற்றவரம் தந்தோன்-சிவபெருமான்
    செய்தவிளை யாட்டெல்லாம் தெள்ளதென் றேயளிக்கும்
    மெய்ச் சிவலி லாபொன்னா மே.

திரு. பி. பாஸ்கரய்யர்

    தண்டமிழார் கூடலிறை தந்தவிளை யாடலொடு
    தொண்டர்புரா னத்திலொரு தொண்டர்கதை -கொண்ட
    சிவலீலா நாடகத்தின், சீர்த்திதனைப் பாரார்
    பவல்லா நீங்காரென் பேம்.

செட்டிநாடு குமாரராஜா சா.மு. அ. முத்தையா செட்டியார் அவர்கள்

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையாரால் நடத்தப்பெற்ற சிவல்லா என்னும் புண்ணிய திவ்ய சரித்திரத்தை அதன் நூறாவது தினத்தன்று கண்டு களிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததைப் பற்றி மட்டற்ற மகிழ்சியடைந்தேன். இந்நகரிலே இந் நாடகம் இடைவிடாது நூறு தினங்களுக்கு மேல் நடை பெற்றதே இந்நாடகத்தின் சிறப்பைப் பன்மடங்கு உயர்த்துகின்றது.

இதில் நடிக்கின்ற எல்லா நடிகர்களும் மிகவும் திறமையுடன் அவரவர்கள் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்தது இனிது பாராட்டத்தக்கது. மேலும் இவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எளிதில் சகல மக்களும் உணருமாறு இனிமையாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களில் முன் நடைபெற்ற சிவபெருமானின் லீலைகளை இன்னும் மக்கள் பக்திரசத்துடன் கண்டு களித்து ஆனந்தத்துடன் அனுபவிக்கவும், இச்சபையினார் தங்கள் நாடகங்கள் மூலமாய் தமிழ் இசைக்கும், தமிழ்க்கலை வளர்ச்சிக்கும் செய்யுந் தொண்டு மிக மிக போற்றற்பாலது.

Mr J M Dogk, Managing Dircetor, The Madura Mills Co. Ltd, Madura.
Mrs. Doak and I are greatful to Messrs T. K. S. & Bros. for giving us an opportunity to attend the Centenary Celebration of the Drama ‘Sive Leela’ Yesterday.

it was an amazing exparence, for Surpassing any othar Tamil Drama we have everseen. The stagecraft, settings, Costumes & above all the spirited acting breathed the spirit of Madura. Madura is fortunate in having such talent & trust Messrs T. K. S. & Bros. will go on here from Success to Success

இத்தகைய பெருமைக்குரிய வாழ்த்துக்களை யெல்லாம் நாங்கள் பெருவதற்கு எங்கள் அருமைச் சகோதரர் திரு. சுந்தர சர்மா அவர்கள் முன்னின்று பாடுபட்டார் என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன். அன்றிரவே மீனட்சியம்மன் ஆலயத்திற்கு எங்கள் நால்வரையும் மேள தாளத்தோடு வரவேற்று, பத்வட்டம் கட்டிச் சிறப்புகளைச் செய்தனார். இப்பெரு முயற்சியில் ஆலய நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடுவும், அதிகார பாரபரிதியம் சுந்தர சர்மாவும் முன்னின்று உழைத்தனார். ஒரு நாடகம். ஒரே நாடக அரங்கில் தொடர்ந்து 108 நாட்கள் நடைபெற்றது இதுவே முதல் தடவையென்று எல்லோரும் பாராட்டினார்கள். சிவலீலா நாடகம் தொடங்கிய அன்று திரைப்பட முறையைப்

பின்பற்றி நாடகத்திற்குப் பாட்டுப் புத்தகங்கள் வெளியிட்டோம். கடைசி நாளன்று சிவலீலா நாடக நூலும் வெளியிடப் பெற்றது.

சிவலீலா வெற்றிக் களிப்பில் சின்னண்ணா ராஜாபர்த்ருஹரி நாடகத்தை எழுதித் தயாரித்தார். பர்த்ருஹரிக்காகவும் பல புதிய காட்சிகள் தயாரிக்கப்பெற்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ராணி அந்தப்புரம், நந்தவன மாடி, குதிரை லாயம் முதலியனவாகும். 1941 டிசம்பர் 7 ஆம் தேதி நாடகம் அரங்கேறியது. பகவதி பர்த்ருஹரியாகவும், கலைஞர் நாகராஜன் இராணி மோகனவாகவும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி விக்ரமனுகவும், எம். எஸ். திரெளபதி சரசாவாகவும், நான் குதிரைக்காரனாகவும், சிவதாணு என்கையாளாகவும் நடித்தோம். இந்நாடகத்தில் என் மனதிற்கு பொறுத்தமான வேடம் கிடைத்தது. நடிப்புத் திறமையை நன்கு வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நாடகம் இது. நான் என் துணைவியோடு தனியே வாழ்ந்த இன்ப நாட்களல்லவா? அவள் இந் நாடகத்தைத் தொடர்ந்து பலமுறை வந்து பார்த்தாள். கலைஞர். ஏ. பி. நாகராஜனுடன் நான் நடிக்கும் காதல் காட்சிகளைக் கண்டு என்னோடு ஊடினாள். உண்மையில் நாகராஜன் அவள் கண்களுக்குப் பெண்ணாகவே காட்சி அளித்தார். பெண்களுக்குரிய நடை, நளினம், குழைவு, நெளிவு, குரல், கொடிபோன்ற உடல் அனைத்தும் நாகராஜனிடம் அந்த நாளில் பூரணமாக அமைந்திருந்தன. ராஜா பர்த்ரு ஹரியோடு மோகன செய்யும் சாகசமும், தன் உள்ளம் கவர்ந்த அஸ்வபாலைேடு அவளுக்கிருந்த அளவற்ற ஆசாபாசமும், கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்துக் கண்டித்த விக்ரமன் மீது அவளுக்கு ஏற்படும் வெறியும், இறுதியில் கணவனை எதிர்த்து நின்று எழுச்சியோடு பேசும் பேய்க் குணமும் கலைஞர். ஏ.பி. நாகராஜனின் திறமையான நடிப்பில் நன்கு வெளிப்பட்டன. ராஜா பர்த்ருஹரி தொடர்ந்து இருபத்தி ஐந்து நாட்கள் நல்ல வசூலுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
---------------

50. நாடக உலகில் ஒளவயைார்


தமிழ் மூதாட்டி ஒளவையாரை நாடக மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்பது எங்கள் நீண்ட நாளைய அவா. மதுரை நகர மக்கள் அளித்த பேராதரவினல் அதுவும் சாத்திய மாயிற்று. ஒளவையாரை அரங்கேற்றியதுதான் எங்கள் நாடக வாழ்க்கையின் வெற்றிச் சின்னமெனக் கருதுகிறோம்.

நாடகாசிரியர் எதிராஜுலு

இராஜபாளையத்தில் இருந்தபொழுது, போர்டு பாடசாலைத் தமிழாசிரியர் பி. எதிராஜுலு நாயுடு எங்களுக்கு அறிமுகமானார். ஒளவையாரை மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆர்வத்தை அவரிடம் கூறினேன். உடனே எழுதித் தருவதாக வாக்களித்தார். நாடகத்தை நல்ல முறையில் தொகுத்து மதுரையிலே கொடுத்தார். ஒளவை நாடக நிகழ்ச்சிகள் ஒன்றாேடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒளவைப் பெருமாட்டியையே மையமாகக் கொண்டு, பல்வேறு இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நிகழும் பலதிறப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந் நாடகம். கல்வி முறை, அரசு முறை, நீதிமுறை, உழவு முறை, இல்லற முறை முதலிய அரும்பெரும் உறுதிப் பொருள்களாகிய மக்களது ஒழுக்க வழக்க நியமங்கள் அனைத்தும் நகைச்சுவையோடு கலந்து இந் நாடகத்தில் தரப்படுகின்றன. ஒளவையை நடிக்க ஆசைப்பட்டோம். நாடகமும் கையில் கிடைத்தது. இனித் தனித்தனியே பாடங்கள் எழுதி நடிகர்களுக்குக் கொடுக்க வேண்டும். இங்கேதான் வந்தது சங்கடம்.

ஒளவையாராக யார் நடிப்பது?

தமிழ் நாடக உலகில் இறவாத புகழுடைய நாடகமாகப் பண்டிதருக்கும் பாமரருக்கும் மகிழ்வூட்டிப் பண்பை வளர்க்கும் நாடகமாக-புகழின் எல்லையைக் கண்ட நாடகமாக ஒளவையார்

நாடகம் நாடக உலக வரலாற்றிலேயே அழியாத இடம் பெற்று விட்டது. இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற ஒளவையாரின் பாத்திரத்தைத் தாங்கி நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததும், இதைப் பற்றிய விவரங்களும் மிகச் சுவையானவை.

ஒளவையாராக யார் நடிப்பது? ... இரண்டொரு நாட்கள் இதைப்பற்றி நன்கு விவாதித்தோம். அப்போது ஆசிரியராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் இருந்த சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், நானும் தனியே இருந்து பலமுறை இதைப் பற்றிப் பேசினோம். முடிவு காண இயலவில்லை. குழுவின் முக்கிய நடிகர் கே. ஆர். இராமசாமி சிறுவதில் மேனகாவாகவும்; மற்றும் சில நாடகங்களில் கதாநாயகியாகவும் திறம்பெற நடித்தவர். எல்லோரையும்விட நன்றாகப் பாடும் ஆற்றல் அவருக்கிருந்தது. ஒளவைக்கு விருத்தப் பாக்கள் அதிகமாக இருந்தமையால் கே. ஆர். இராமசாமியை ஒளவையாராகப் போடுமாறு அண்ணாவிடம் ஆலோசனை கூறினேன். இதுபற்றி நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆரிடம் கேட்டபோது, அவர் “ஐயையோ, நான் பெண் வேடம் புனைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இப்போது வராது. நான் நடித்தால் நன்றாய் இராது” என்று உறுதியாகச் சொல்லி மறுத்துவிட்டார். நானும் இளமையில் பெண்வேடம் பூண்டவன். அஃது பழைய கதையாதலால் என்னை ஒளவையாராய்ப் போட வேண்டுமென்ற எண்ணமே யாருக்கும் எழவில்லை.

கடைசியாக ஒருநாள், ‘இன்று யாரையாவது ஒருவரை முடிவு செய்வது; அல்லது நாடகத்தையே கைவிடுவது’ என்ற தீர்மானத்துடன் சின்னண்ணாவும் நானும் கலந்து பேசினோம். எங்கள் குழுவிலுள்ள ஒரே பெண் நடிகை எம். எஸ். திரெளபதி. அவளோ சிறுபெண். எனவே, வழக்கமாகப் பெண் வேடம் தாங்கிவந்த நடிகர்களில் ஒருவர்தான் போட வேண்டும். அவர்களில் நன்றாகப் பாடக்கூடியவர்கள் யாருமில்லை. ஏ. பி. நாக ராஜன் அப்போது சேலத்துக்குப் போயிருந்தார். அவர் மீண்டும் கம்பெனிக்குத் திரும்புவது சந்தேகமாக இருந்தது. எனவே எவரையும் உறுதி செய்ய இயலாமல் திண்டாடினோம். என் வரையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

தாங்களே நடிக்க வேண்டும்!

சின்னண்ணா, வேடம் புனைவதை நிறுத்திச் சில ஆண்டுகளே ஆயின. ஆனால், இறுதிவரை பெண் வேடங்களிலேயே நடித்தவர். எப்போதாவது மேனகா நடைபெற நேர்ந்தால் அவர்தாம் பெருந்தேவியாக நடிப்பார். அண்ணாவின் நடிப்புத் திறமையில் எனக்குப் பூர்ண நம்பிக்கை இருந்தது. அவரை எப்படியாவது சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன். அவர் இதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டாரென்று தெரியும். எனவே பெரிய பீடிகை போட்டிக் கொண்டு பேசத் தொடங்கினேன்.

“அண்ணா, நாடகத்தில் தமிழ்ச் சுவை முக்கியம். பாடும் போதும், பேசும்போதும் வார்த்தைகள் தெளிவாக இல்லாவிட்டால் நாடகமே நன்றாக இராது. எல்லாக் காட்சிகளிலும் ஒளவையார் வரவேண்டியிருக்கிறது. அனைத்தும் அறிவுரைகளாகவே நிறைந்திருக்கின்றன. ஒளவையாராக நடிப்பவர் மிகத் திறமையாக நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான்கு மணி நேரம் கிழவியையே பார்த்துக்கொண்டு சபையோர் நாடகத்தை ரசிக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினேன்.

“அது சரி,எதற்காக இவ்வளவு பீடிகை?” என்றார் அண்ணா.

“தயவு செய்து ஒளவையார் வேடத்தைத் தாங்களே புனைய வேண்டும். நாடகம் சிறப்பாக அமைய வேண்டுமானல் இதைத் தவிர வேறு வழியில்லை” என்று அழுத்தமாகத் தெரிவித்தேன். அருகிலிருந்த நடிக நண்பர்களும் இதனை மகிழ்வோடு ஆமோதித்தார்கள். சின்னண்ணா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. திகைப்படைந்தார். “சேச்சே, என்னால் முடியாது. அந்தக் காலம் போய் விட்டது” என்றார். இதைச் சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். நான் விடவில்லை. மேலும் உற்சாகத்தோடு பேசினேன். ஒளவையாராக நடிப்பவர் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் வைக்கவேண்டும்; எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்பனவற்றை விரிவாக எடுத்து மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டே போனேன். திடீரென்று இடைமறித்து, “ஏண்டா,

இவ்வளவு தூரம் இந்தப் பாத்திரத்தைப் பற்றி என்னிடம் விளக்குகிறாயே; நீயே ஒளவையாராக நடித்தால் என்ன?” என்றார்.

அதிர்ச்சியும் துணிவும்

நான் அதிர்ச்சியடைந்தேன். அண்ணா இப்படிச் சொல்வா ரென்று எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ சொல்லி மறுத்தேன். சிறிது நேரம் வாதம் நடந்தது. இறுதியாக அவர் எழுந்து,

“ஒளவையார் வேடத்தை நீ புனைவதாக இருந்தால் நாடகத்தை நடத்துவோம்; இல்லாவிட்டால் இந்த நாடகமே வேண்டாம்”

என்று சொல்லிப்போய் விட்டார். ஒளவையாரை அரங்கில் காணத்துடித்த என் உள்ளத்திற்கு, இதுபெரும் சோதனையாகவே இருந்தது. நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒளவையார் நாடகம் நடைபெறப் போவதில்லை! இந்த நிலை எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது. தனியே இருந்து சில மணி நேரம் சிந்தித்தேன். சோதனையில் தேறினேன். துணிவோடு அண்ணாவிடம் சென்றேன். “நானே ஒளவையாராக நடிக்கிறேன்” என ஏற்றுக் கொண்டேன்.

அதே நினைவு; அதே சிந்தனை

அன்று முதல் இரவும் பகலும் ஔவையைப் பற்றியே சிந்தித்தேன். ஔவை மூதாட்டியைப் பற்றி அறிஞர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தேன். வீதிகளில் போகும் போதும் வரும்போதும் வயது முதிர்ந்தோர் எதிர்ப்பட்டால் சற்று நின்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவேன். மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதுகூட, சபையில் எதிரேவீற்றிருக்கும் பாட்டிமார்களின் உருவங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. ஒளவையைப் பற்றியே நாள்தோறும் சிந்தித்துச் சிந்தித்துத் தெளிவு பெற முயன்றேன்.

கம்பெனி நடிகர் பி. எஸ். வேங்கடாசலம் மாம்பழக் கவிச் சிங்க நாவலரின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஒளவை நாடகத்திற்குப் பாடல்கள் இயற்றும் பொறுப்பினைத் தமக்கு அளிக்க

வேண்டுமென அவர் சின்னண்ணாவிடம் விரும்பிக் கேட்டார். அவர் பாடல்கள் இயற்றக்கூடிய திறமையுடையவரென்று அது வரையில் எனக்குத் தெரியாது. இரட்டிப்பு மகிழ்வோடு அவரையே பாடல்கள் எழுத அனுமதித்தார் அண்ணா. பெரும்பாலான பாடல்கள் ஒளவையாரே பாடியவை. இவற்றைத்தவிர மாகாகவி பாரதியார், புரட்சிக் கவினார் பாரதிதாசனார், கவிமணி தேசிக விநாயகனார், இசைச் செல்வர் இலட்சுமணப்பிள்ளை, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோரின், ‘தமிழ்த் திருநாடுதனைப் பெற்ற’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது’, ‘மங்கையராகப் பிறப் பதற்கே’, ஒன்றே உயர்சமயம், ‘தேகம் நிலையுள்ள தல்லவே’ ஆகிய பாடல்களையும் நாடகத்தில் தக்க இடத்தில் சேர்த்துக் கொண்டோம். இவற்றைத் தவிர சில பாடல்களே தேவை பட்டன. அவற்றை வேங்கடாசலம் மிக நன்றாக இயற்றி உதவினார். அவரே நாடகத்தில் பாரி வள்ளலாகவும் நடித்தார்.

டி. என். சிவதானுவும், பிரண்டுராமசாமியும் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்றனார். அவர்கள் ஏற்றபாத்திரங்கள் அனைத்தும் ஒளவையாரின் நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவை. எனவே ஒளவையாரின் பாத்திரத்திற்கு மேலும் பெருமை சேர்க் கும் வகையில் அவர்களுடைய நகைச்சுவை அமையவேண்டும் என ஆலோசனைக் கூறினேன்.

கலைமகள் தடுமாறினாள்

ஒளவையின் தொடக்க நாளிலேயே சில சகுனத் தடைகள் ஏற்பட்டன. நாடகத்தின் முதல் காட்சி இது. வானத்தில் மேகங்களின் இடையே செந்தாமரையில் பிரமனும், வெண்தாமரையில் கலைமகளும் தோன்றுகின்றனார். பிரமன் பூலோகத்தில் ஒளவையாக அவதரித்து அருந்தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்து வருமாறு கலைவாணிக்கு ஆணையிடுகிறார். கலைமகள் அயனின் ஆணைக்கு அடிபணிகிறார். செந்தாமரை, வெண்தாமரை, இரண்டையும் பெரிதாகச்செய்து அவற்றின் நடுவே பிரம்மனையும், கலைமகளையும் இருத்தித் தாமரைகளின் இதழ்களை மூடிவிட்டு, இருதாமரைகளை யும் வால் பெட்டியோடு இணைத்து வைப்போம். முதல் வேட்டுக்குப் பிரமன் தோன்றுவார். இரண்டாவது வேட்டுக்குக் கலைமகள் காட்சி அளிப்பார். வேட்டுச்சத்தம் கேட்டாலும் தாமரையை இணைத்திருக்கும் வால்பெட்டியின் கயிற்றை உள்ளிருந்தபடியே இழுக்க வேண்டும். மேகங்களின் இடையே தாமரை மொட்டு மேலெழுந்துதோன்றும். பின்பு இதழ்கள் விரிந்துமலரும், பிரமன் பேசுவார். அதே போன்று கலைமகளும் காட்சி தரவேண்டும். வால் பெட்டியைத் தாங்கி நிற்கும் இரும்புக் குழாய் தெரியாமல் இருக்க அதனைத் தாமரைத் தண்டுபோல் தோன்றும் வண்ணம் பச்சை நிறம் பூசிவிடுவோம். கலைமகள் பேசியதும் காட்சி முடிகிறது. இதனை முதல் நாள் இரவே பல முறை ஒத்திகை பார்த்து வைத்திருந்தோம். காட்சி தொடங்கியது. வேட்டுச் சத்தம் கேட்டதும் செந்தாமரை மொட்டு உயர்ந்தது, பின்பு இதழ்கள் விரிந்து மலர, பிரமன் தோன்றினார். அவையோர் ஆர்வத்தோடு கைதட்டிப் பாராட்டினார். இரண்டாவது வேட்டுக்கு வெண்தாமரை மொட்டு உயர்ந்து மலர்ந்தது. அதில் வீற்றிருந்த கலைமகள் அசைந்தாடித் தள்ளாடித் தடுமாறிக் கீழே விழுந்து மேகத் தட்டிக்குள் மறைந்தாள். அவையில் சில அனுதாப ஒலிகள் கேட்டன. திரைவிடப்பட்டது. வால் பெட்டி உயரும்போது சிறிது சமாளித்துக்கொள்ளாது கலைமகளாக நடித்த பையன் ஆடியதால், மலர் விரிந்ததும் கிழே விழ நேர்ந்தது. மீண்டும் கலைமகளைத் தூக்கி உட்கார வைத்துக் காட்சியை ஒருவாறு முடித்தோம். ஆரம்பநாளிலேயே அசம்பாவிதம் ஏற்பட்டதால் ஒளவை நாடக வெற்றியில் யாருக்கும் நம்பிக்கை ஏற்பட வில்லை. கலைமகள் தடுமாறி விழுந்தது பெரிய சகுனத்தடை என்றார்கள். நான் இதனாதெல்லாம் சிறிதும் சோர்ந்து விடவில்லை. வசூல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் நாடகம் தொடர்ந்து பதினேழு நாட்கள் நடந்தது. புலவர்களும் அறிஞர்களும் வந்து பார்த்து என்னை உளமாரப் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். வேறு சில நாடகங்கள் நடந்தபின் மீண்டும் வடலூர் இராமலிங்க சாமிகள் மடத்தின் நிதிக்காக ஒளவை யாரையே நடித்தோம். அன்று வாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி வாழ்த்தினார்கள்.

எங்கள் குறிக்கோள்

ஒளவையாராக வேடம் புனேந்து நடிப்பதற்கு நானும்எனது முன்னோர்களும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்றே எண்ணினேன். நான்பெற்ற அரிய பேற்றினை எண்ணி யெண்ணிப் பெருமிதம் அடைந்தேன். நாடகத்திற்கு வசூலாகவில்லை. என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் ஒளவையாராக நடித்தபின் எனக்கு ஆன்மீக நிறைவு ஏற்பட்டது. மக்களின் வரவேற்புக்குரிய நாடகங்களையே நடிப்பது எங்கள் குறிக்கோள் அன்று. மக்களுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணாகிறோமோ, எது தேவையென்று நினைக்கிறோமோ அத்தகைய நாடகங்களையே இது வரை நடித்து வந்திருக்கிறோம். அவ்வாறு நடிக்கப்பெறும் நல்ல நாடகங்களுக்குப் பொது மக்களின் வரவேற்பினைப்பெற்றுத் தர அறிஞர்களின் ஆதரவும் பத்திரிகைகளின் பாராட்டுரைகளும் எங்களுக்கு மிகவும் உதவியிருக்கின்றன. குமாஸ்தாவின் பெண்ணைத் தொடங்கிய நாளில் போதுமான ஆதரவில்லை. ஆனால், மதுரையில் அமோகமான வரவேற்புக் கிடைத்தது. அஃதே போன்று ஒளவை யாருக்கும் ஆதரவு கிடைக்குமென்று உறுதியாக நம்பினோம்.

ஒளவையாரைப் பார்த்த புலவர் நல்லசிவன் பிள்ளை “நாடகக்கலைக்கு நல்ல காலம் பிறந்தது” என்று எழுதினார். “நீங்கள் கூத்தாடிகள் அல்ல; மாபெருங் கலைஞர்கள்,” என்று மதுரைச் சங்கப் புலவர் நா. கிருஷ்ணசாமி நாயுடு பாராட்டியிருந்தார். உற்சாகம் எங்களை ஊக்கியது. மதுரையில் நாடகம் தொடங்கி ஏறத்தாழ ஒராண்டு முடிந்தது. மேலும் சில புதியநாடகங்களைத் தயாரித்து, மதுரையம் பதியிலேயே அரங்கேற்ற எண்ணினோம். அதற்குள் உலகில் போர்ச் சூழல் உருவாகிவிட்டது.
----------------------
continued in part 3 (chapters 51-75); part 1 (chapters 1-25)

This file was last updated on 17 Nov. 2019.
Feel free to send the corrections to the .